இதழ்-26

குழந்தைகளில் காய்ச்சல் ஏற்படும் போது செய்ய வேண்டியது என்ன ????

காய்ச்சல் என்பது பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு நோய் அறிகுறியாகும். தற்போதைய காலத்தில் காய்ச்சல் ஏற்படாத குழந்தையே இல்லை என்ற அளவுக்கு காய்ச்சல் ஏற்படுகின்றது. காய்ச்சல் ஒரு நோயின் அறிகுறியே தவிர காய்ச்சல் என்பது மட்டும் ஒரு நோய் அல்ல.

ஒருவரின் உடல் வெப்பநிலை 38°C க்கு மேலும் அதிகரிக்கும் பொழுது அதை நாம் காய்ச்சல் என்று குறிப்பிடுகின்றோம். ஆனாலும் வெறுமனவே தலை சூடாக உள்ளது என்பது காய்ச்சல் அல்ல. எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும் பொழுது வெப்பமானி கொண்டு அதை உறுதிப்படுத்த வேண்டும்.

காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள்

பெரும்பாலான வேளைகளில் ஒரு நுண்ணங்கி தொற்றே காய்ச்சலுக்கு காரணமாகும். அதிலும் வைரஸால் ஏற்படும் காய்ச்சலே மிக அதிகம். சிலவேளைகளில் பாக்டீரியாக்களும் காய்ச்சலை ஏற்படுத்தலாம்.

வேறு சில நோய் நிலமைகளின் ஒரு அறிகுறியாகவும் காய்ச்சல் அமையலாம்.

வைரஸ்சால் காய்ச்சல் ஏற்படும் பொழுது அது இலேசான காய்ச்சலாகவும் காய்ச்சலுக்கு இடையில் குழந்தை நன்றாகவும் இருக்கும். ஆனால் டெங்கு வைரஸால் ஏற்படும் காய்ச்சலின்போது காய்ச்சல் சற்று அதிகமாக இருப்பது சாதாரணமானதானதாகும்.

உடலின் வெப்பநிலை அதிகரிப்பது நுண்ணங்கி தொற்றுக்கு உடலால் செயற்படுத்தப்படும் ஒரு பிரதிபலிப்பு என்பதால், காய்ச்சல் ஏற்படும் போது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. இது பெரும்பாலான பெற்றோர்களுக்கு தெரியாத ஒரு விடயம்.

குழந்தைக்கு காய்ச்சல் ஏற்படும் போது பெற்றோர்களால் செய்யப்பட வேண்டியவை.

குழந்தையின் உடல் வெப்பநிலையை கவனமாக அளந்து குறித்து வைக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு நிறைக்கேற்ற அளவு பரசிட்டமோல் கொடுக்க வேண்டும்.

காய்ச்சல் அதிகரிக்குமானால் இளம் சூடான துணியினால் குழந்தையின் நெற்றி மற்றும் முகத்தை துடைத்து விடலாம்.
தண்ணீரில் அவர்களை குளிப்பாட்டுவதன் மூலம் காய்ச்சலை குறைக்க முடியாது.

குழந்தைகளுக்கு காய்ச்சலுடன் ஏற்படும் மற்ற அறிகுறிகளை கவனமாக அவதானிக்க வேண்டும்.

மூன்று மாதத்திற்கு குறைந்த குழந்தைக்கு காய்ச்சல் ஏற்படும் பொழுது உடனடியாக வைத்தியரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

காய்ச்சலுடன் குழந்தைக்கு பசி வருவது குறைவடைவதனால் அவர்கள் பொதுவாக உணவு உண்ண மாட்டார்கள். இப்பொழுது நீங்கள் அவர்களுக்கு நீராகாரங்களை சிறிதளவேனும் அடிக்கடி கொடுக்க வேண்டும்.

அவர்களுக்கு போதுமான அளவு உடை அணிவித்து அதிகளவு குளிராகவோ அல்லது சூடாகவோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

காய்ச்சல் ஏற்படும் பொழுது மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை (Antibiotics) எடுக்கக் கூடாது.

உடனடியாக வைத்தியரை நாட வேண்டிய சந்தர்ப்பங்கள்

  1. டெங்கு நோயாளியுடன் தொடர்பு
  2. கொரொனா நோயாளியுடன் தொடர்பு
  3. காய்ச்சலுடன் வலிப்பு
  4. காய்ச்சலுடன் மயக்கம்/ நாளாந்த நடவடிக்கைகளின் அசாதாரண நிலை
  5. காய்ச்சலுடன் குருதிப் பெருக்கு
  6. காய்சலுடன் சிறுநீர் கழிக்கும் போது எரிவு/அழுகை
  7. காய்ச்சலுடன் மூச்செடுக்க சிரமப்படுதல்
  8. ஏதாவது நாட்பட்ட நோய்கள் உள்ள குழந்தைகளில் காயச்சல்
  9. மூன்று நாள்களுக்கு மேற்பட்ட காய்ச்சல்

பரசிற்றமோல் அளவைக் கணிப்பது எப்படி ?????

குழந்தையின் நிறையை 15 ஆல் பெருக்கும் பொது ஒரு தடவை எடுக்க வேண்டிய பரசிற்றமோலின் திணிவு மில்லிகிராமில் வரும்.

மில்லி கிராமில் வரும் பெறுமானத்தை 24 ஆல் பிரித்தால் ஒரு தடவை பயன்படுத்தக் கூடிய பரசிற்றமோலின்அளவு மில்லிலீற்றரில் வரும்.

நேரடியாக குழந்தையின் நிறையை 0.625 ஆல் பெருக்கினாலும் தேவையான பரசிற்றமோலின் அளவு மில்லிலீற்றரில் வரும்.

பரசிற்றமோலின் மேற்குறிப்பிட்ட அளவை காய்ச்சல் உள்ள போது ஒவ்வொரு ஆறு மணித்தியாலத்திற்கு ஒரு தடவை பாவிக்க முடியும்.

வைத்தியர் கணேஷ்

Related posts

மரணங்கள் மீதான பொறாமை

Thumi2021

சித்திராங்கதா – 26

Thumi2021

மாணிக்கவாசகரின் பக்தியும், விஞ்ஞான அறிவும் – 03

Thumi2021

Leave a Comment