-ரஞ்சிதா-
டிசம்பர் மாத மழை இடைவிடாது பூமியை முத்தமிட்டது. அதன் அறிகுறிகளை வெளிகாட்டி மலைகளைச் சுற்றி எங்கும் கரும் மேகங்கள் போர்வை மதில்களை கட்டியிருந்தன. எங்கும் கருமை படர்ந்திருந்தது. மழையின் அணைப்பை தழுவிய தேயிலைச் செடிகளுக்கு சாம்பிராணி புகையை காட்டுவது போல புகை மண்டலம் எங்கும் வியாபித்திருந்தது. இயற்கையின் ஆக்கர்ஷிப்புக்கள் மட்டுமே அந்த மேகமலைத் தோட்டத்திற்கு ஆறுதல். சிலநேரங்களில் அதுவே யமன்.
மரண ஓலங்கள் எல்லாம் முடிந்து பிணத்தை அடக்கம் செய்தாகிவிட்டது. வெள்ளைக் கொடிகள் ஆங்காங்கு பறக்கவிடப்பட்டிருந்தன. ஒற்றையடிப் பாதை போல இருக்கும் அந்த லயத்தின் நீண்ட வரிசையில் தோட்ட கம்பனிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட கதிரைகள் வரிசையாக அணிவகுத்தன. ஒரு பக்கம் தோட்டத்தொழிலாளர்கள் அமைதியாக அமர்ந்திருந்து நடந்த சம்பவங்களை ஆர்வமாக அலசினர். மறுபக்கம் தோட்ட இளைஞர்களில் சிலர் ஒன்றுகூடி ‘கெரம்போட்’ விளையாடினர். வயது முதிர்ந்த சில பெண்கள் குளிர் வலையிலிருந்து விடுபடுவதற்கு ‘ஸ்வீட்டர்’களை அரவணைத்து அமர்ந்திருந்தனர். தோட்டச் சிறுவர்கள் சிலர் அங்கும் இங்கும் ஓடியாடி விளையாடினர். இன்னுமொரு பக்கம் உயரதிகாரிகள் தங்களது தகுதிகளைத் தனித்துக்காட்ட காலுக்கு மேல் கால் போட்டுக்கொண்டு ‘ஹய் போன்’களை கையில் வைத்துக்கொண்டு ஏதோவொரு பிரச்சினைக்கு தீர்வு காணபோவதாக பாசாங்கு செய்தவாறு ஒரு பகுதியில் கூட்டமாக அமர்ந்திருந்தனர். அப்போது பக்கத்து காம்பரா மாணிக்கத்தின் கறுப்பு நாய் ஒன்று மேல் லயத்து ராமாயியின் கோழியைத் துரத்தி கவ்விப்பிடித்திலுத்தது. இதனை கண்டும் காணாமல் தோட்டத்து கங்காணி, தொழிற்சங்கத் தலைவர், இரண்டு மூன்று அதிகாரிகள் வேடிக்கைப் பார்த்தவாறு துக்கவீட்டில் பவ்வியமாக அமர்ந்து அடக்கம் காத்தனர்.
தகிக்கமுடியாத வேதனையில் வாழ்வின் சுமைகளை தனக்கு அக்கினிப் பரிசாக மீனாட்சி அளித்துவிட்டதாக பழனிச்சாமி நினைத்துக் கொண்டான். அந்த பத்தடி காம்பிராவிற்குள் மூன்று உயிர்களும் மீனாட்சியின் படத்தை பார்த்துக்கொண்டு வாழ்வையே வெறுத்து, ‘காபர்ட்’ போடப்பட்ட உடைந்த சுவர்களின் ஓட்டைகளையும் கூரையின் துறுப்பிடித்துப்போன தகரங்களையும் தஞ்சம் என கொண்டு அமர்ந்திருந்தன.
‘என்ன பழனி நீயு இப்புடி ஒடஞ்சிப் போயிட்டா ஓம் புள்ளைகளுக்கு யாரு ஆறுதல் சொல்லுறது… இனியாச்சும் பொறுப்பில்லாம திரியிறத வுட்டுபோட்டு புள்ளைங்கள பாரு…’
‘அட விடுப்பா… நம்ம தலையெழுத்து….நம்ம தோட்டத்துக்குள்ள வந்து போற சிறுத்தை தொல்லைக்கு ஒரு வழிய காணோ…… ஒனக்கு ஆறுதல் சொல்ல எனக்கு ஏழாது…’
‘இந்த பம்பரப் பூச்சித் தொல்ல பெருந் தொல்லயா இருக்குதப்பா…’
துக்கம் விசாரிப்பதற்காக வந்திருந்த தோட்டத்தொழிலாளர்களில் சிலர் ஆறுதல் மழை பொழிந்தனர். மரண ஓலங்களுக்கு மலிவில்லாத மேகமலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு விலைமதிக்கமுடியாத உயிர்பலிகளுக்கெல்லாம் சன்மானம் நாலுபேர் வந்து கூறிச்செல்லும் ஆறுதல் வாரத்;தைகள் மட்டும்தான். மீனாட்சி என்ற தோட்டத் தொழிலாளியின் குடும்பத்தினருக்கும் இன்று அதே சன்மானம் பலரால் வழங்கப்பட்டது. மீனாட்சிக்கு நாற்பது வயது இருக்கும். மூன்று வருடங்கள் வெளிநாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து வறுமையை வெற்றிகொள்ளமுடியாமல் மீண்டும் தோட்டத்தில் பெயர் பதிந்துகொண்டாள், மீனாட்சி. அவளின் இரண்டு பிள்ளைகளும் பாடசாலை செல்பவர்கள். மூத்தவள் திவ்யா. இளையவன் குமார். மீனாட்சியின் உயிர்நாடிகள் இவ்விருவரும். அவர்களை சமூகத்தில் அறிவுடையவர்களாக மிளிர வைப்பதற்கு அவள் தனது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் உழைப்பாக மாற்றினாள். இவளது கணவன் பழனிச்சாமி ஒரு குடிகாரப் பேர்வழி. இவனது பொறுப்பற்ற செயற்பாடுகளே மீனாட்சியின் ஓய்வொழிவற்ற வாழ்க்கைக்கு முதல் காரணம். பொறுப்பற்ற கணவன்மார்கள் இருக்கும் குடும்பங்களில் பெண்கள் உழைக்கும் இயந்திரங்களாக மாறுவது இயல்புதானே. அந்த உழைப்பே இன்று மீனாட்சியைச் சுடுகாட்டில் குடிப்புக வைத்தது என்று கூறுவதா? அல்லது சமூகத்தில் வாழும் பொறுப்புள்ள சிலரின் பொறுப்பற்ற அசமந்த போக்கு என்று கூறுவதா? எல்லாம் முடிவற்ற தொடர்கதைகளாகவே இருந்தது. அவளுடைய மரணம் அவளைச் சார்ந்தவர்களுக்கு பேரதிருச்சியைத் தந்தாலும் அதற்கான காரணம் அங்கு வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்குப் பழகி போன ஒன்று.
மீனாட்சியுடன் இணைந்து கொழுந்து பறிக்கச் சென்ற கண்ணாயிக்குத்தான் அந்த சம்பவம் மீளாத்துயரைத் தந்தது. மீனாட்சி – கண்ணாயி இருவரும் பக்கத்து காம்பராக்களில் வாழ்க்கை நடத்துபவர்கள். இருவரும் இணைந்தே வேலைக்குச் செல்வர். பன்னிரண்டு மணிக்கு கொழுந்து பறிப்பு முடிந்தவுடன் அரைமணிநேர இடைவெளியில் மதிய உணவு தயார் செய்வதற்காக லயத்திற்கு வந்து, சமைத்து வைத்துவிட்டு, மீண்டும் கொழுந்து பறிக்கச் செல்வார்கள். அன்றும் அப்படித்தான் வழமைபோல சம்பவங்கள் நடந்தன. அந்த மரணமும் ஏற்பட்டது.
‘என்னடி கண்ணாயி அந்த இலுப்ப மரத்தையே அடிக்கடி நோட்டோ வுட்டுகிட்டு இருக்க… ஒம் புருசே ஏது வந்து மரத்துல ஒக்காந்து இருக்குறானா…? வெரசா கொழுந்த பறிச்சுப்போடு இல்லாட்டி ஐயா வந்தா ஏசுவாறுடி…’ –
பரிகாசமாக மீனாட்சி பேசியதும், அதற்கு கண்ணாயி பதில் சொல்ல வாய் எடுக்க முன் அந்த இலுப்பை மரத்தில் இருந்த குளவிக் கூட்டை கழுகு ஒன்று கொத்தி, அந்த கூட்டைக் களைத்து அருகில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த சில பெண்தொழிலாளர்களை கொட்டியதும், பாதுகாப்புத் தேடி வார்த்தைகள் வெளிவற மறுத்து படபடப்புடன் படங்குச் சாக்குகளை அவிழ்த்தும், அவிழ்க்காமலும் அனைவரும் அந்த இடத்தைவிட்டு தப்பியோடியதும், கொட்டுக்கள் வாங்கிய ஆறு தொழிலாளர்கள் மின்னல் வேகத்தில் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதும், அனுப்பி வைக்கப்பட்டவர்களில் மீனாட்சியின் உயிர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலே போனதும், அதன் பின்னர் பொலிஸாரின் வருகையும், வனவிலங்கு அதிகாரிகளின் வருகையும், தோட்ட அதிகாரிகளின் வருகையும் – ஆற்றில் கரைத்த புளிபோல இருந்ததும் – நொடிப்பொழுதில் மாயாஜாலம் போல அரங்கேறி, விறுவிறுத்து, அமைதிகண்டன. இன்றுடன் மீனாட்சி இறந்து, அடக்கம் செய்யப்பட்டு மூன்று நாட்களும் கடந்துவிட்டன. அதிர்ச்சியிலிருந்து மீண்டு இப்பொழுதான் கண்ணாயி ஒரு சில வார்த்தைகளைப் பேசுவதற்கு பழனிச்சாமியின் காம்பராவிற்குள் வந்து அமர்ந்து, வார்த்தைகளை விதைப்பதற்கு தயாரானாள்.
விதைப்பு நிகழும்…