கிட்டத்தட்ட கடந்த இரு வாரங்களுக்கு முன்பிருந்தே துமி அமையம் கலாநிதி செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன் அவர்களது பிறந்தநாளை கொண்டாடத் தொடங்கி விட்டது. எமது கடந்த இதழை அவரின் மணிவிழாச்சிறப்பு இதழாக வெளியிட்டோம். ஆண்டு விழா மலராகவும் அமைந்த அந்த 25 ஆவது இதழின் ஆசிரியர் தலையங்கத்தில் நாம் விடுத்த வேண்டுகோள் உடனடியாக நனவாக்கப்பட்டது. இலத்திரனியல் ஊடகங்களில் மட்டுமே வெளிவந்த எமது மின்னிதழ் திருவாளர் வி.கோகுல்ராம் அவர்களின் அன்பளிப்பால் முந்நூறு பிரதிகள் அச்சடிக்கப்பட்டு பத்திரிக்கையாக பலரது கரங்களிலும் தவழத்தொடங்கியது.

மண்ணை பெருமை கொள்ளச் செய்த ஒரு பெரியாரின் மணிவிழா கொரோனா கொடுந்துயரால் எண்ணியபடி கொண்டாட முடியாமல் போனாலும் காலமுள்ளவரை அவர் பெருமைகளை நிலைபெறச் செய்யும் பெரும்பணியை ஆற்றும் வாய்ப்பு எமக்கு கிட்டியது. செஞ்சொற் செல்வரின் வாழ்க்கை ஆவணப்படமாக அவரது பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது.

அதேபோல செஞ்சொற் செல்வரின் பிறந்தநாளை மேலும் மெருகூட்டும் வகையில் எமது உத்தியோகபூர்வ YouTube அலைவரிசையில் பல சிறப்பு நிகழ்வுகள் காலை ஏழு மணி முதல் இரவு எட்டு மணிவரை தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டன. கம்பவாரிதி, பேச்சாளர் சுகிசிவம், வழக்கறிஞர் இராமலிங்கம், பட்டிமன்றம் புகழ் ராஜா என உலகெங்கும் பரந்து வாழும் பல அறிஞர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் இளையவர்கள் அறுவர் பார்வையில் ஆறுதிருமுருகன் என்கிற சிறப்பு கருத்துக்களமும் அனைவரது கவனத்தை ஈர்த்தது. அதோடு ஆறு மாதங்களுக்கு மேலான எமது முயற்சியின் பலனாய் வெளிவந்த ஆறு.திருமுருகன் ஐயா பற்றிய ஆவணக்காணொளியும் முழுமையாக காட்சிப்படுத்தப்பட்டது. (எமது YouTube தளம் https://www.youtube.com/channel/UCyvWcUu6K0mFkQ9oGhtWwpw )

ஐந்து வருடங்களைக் கடந்து பயணித்துக்கொண்டிருக்கும் துமி அமையத்திற்கு கடந்த இரு வாரங்கள் முக்கிய மைல்கற்களாக பல வழிகளில் அமைந்திருந்தன. எப்போதும் எங்களை வழிப்படுத்திக் கொண்டிருக்கும் ஆறு.திருமுருகன் ஐயாவிற்கு எங்கள் அன்பை வெளிக்காட்ட கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை தந்த இறைவனுக்கு என்றும் நன்றி உடையோம்!