இயற்கையிலிருந்து மானுடவர்க்கம் வேறுபட்டு- மேம்பட்டு நிற்க காரணமாய் அமைவன மானுடன் தனக்கென வகுத்துக் கொண்ட இலக்குகளே. இலக்கே மனிதன் முன்னோக்கி அடுத்த அடி எடுத்து வைப்பதற்கான மூலாதாரமாகும்.
கால் கொண்ட விலங்குகள் யாவுந்தான் நடக்கின்றன. ஆனால் கால் போகும் போக்கில் செல்லாது இலக்கொன்றின் வழித்தடத்தைப் பற்றித் தொடர்வதனாலேயே மானுடன் ‘கால் நடைகள்’ என்கிற கூட்டத்திற்குள்ளும் அடங்க மறுக்கிறான்.
இந்த இலக்குகளை ஒருவன் அடைகிறானா என்பது வினாவல்ல. அதற்கு விடையும் இல்லை. அடைவதற்காக முன்னேறுகிறான். ஆதலினால் வாழ்கிறான்.
ஆனால் எல்லாவற்றையும் விட வலியது விதி. இலக்கின் தடத்தை மாற்றி மாற்றி மானிட இனத்தை வலிந்து ஒரு கால்நடையாக மாற்ற- அதாவது இலக்கில்லா உயிரினமாக ஆக்க அவ் விதி தொடர்ந்து முயலுவதும் இயல்புதான். வாழ்வின் இன்சுவை என்பதே இவ்வாறான இலக்கில்லா தடங்களில் நிகழ்ந்துவிடுகின்ற சில எதிர்பாரா நொடிகள் தான். அத்தகையதொரு அழகிய சந்திப்பையே அட்டைப்படத்தில் நீங்கள் காண்கிறீர்கள்.
ஒரு கயிற்று வழித்தடத்தை காரணமின்றியே பற்றிச் செல்கிறது ஒரு உயிர்த்துளி. இந்தப்பயணம் எங்கு சென்று முடியும் என்று அத்துளியளவு உயிர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் பயணிக்கிறது. ஒற்றை நூல்வழிபயணம் என்பது உண்மையில் அவ்வளவு சிக்கலானதன்றுதான். எந்த முடிவும் இடையில் எடுக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே வழித்தடம் தான். ஒருமுறை பற்றிவிட்டால் நம்பிக்கை மட்டும் கொண்டே பயணித்தாக வேண்டும். அந்த வழித்தடம் புதிய பல உலகங்களை காட்டும் என்ற தொடர்நம்பிக்கையிலே அந்த ஒருவழிப்பயணத்தை கடந்தாக வேண்டும்.
கயிறுவழி வந்த எறும்பு கிளையில் நிற்கும் எறும்பை நாடி வரவில்லை. கிளையில் நின்ற எறும்பும் கயிறு வழி வரும் எறும்புற்காய் காத்திருக்கவில்லை. எதிர்பாராத சந்திப்பு. ஆகா என்னைப் போல் ஒருவர் என்கிற பூரிப்பு. இதுவே அந்தச்சின்னஞ்சிறிய முகத்தின் சாரம்.
பூனை ஒன்றிற்கு எலியைப் பிடிக்கவோ அல்லது எலி ஒன்றிற்கு உணவு கொடுக்கவோ நடுவிலே வளைந்து வளைந்து செல்லும் சிக்கலான பாதைகளைக் கொண்ட கட்டங்களின் வழியே வழி காட்டி உதவுங்கள் என்று அறைகூவும் புதிர்களைச் சிறுவர் இதழ்களில் பார்த்திருப்போம் .
முற்காலத்தில் எகிப்து, கிரேக்கம் போன்ற புராதன நாகரிக நாடுகளில் இத்தகைய புதிர் வழிகள் (labyrinth ) உண்மையாகவே அமைக்கப்பட்டிருந்தன. மனிதன் வாழ்க்கையில் அல்லது ஏதாவது ஒரு சிக்கலில் அகப்பட்டுக்கொண்டு வெளியேறிவிடத் தவிக்கும் நிலைக்கு இவை குறியீடுகள்.
ஏதென்ஸ் நாட்டு இளவரசன் தெஸியஸ் இத்தகைய புதிர் வழி ஒன்றில் சிக்கிக் கொள்கிறான். அரியத்னே என்ற அழகி ஒரு நூலின் துணையால் புதிர் வழியிலிருந்து வெளியேறத் தெஸியஸூக்கு உதவுகிறாள்.
ஒரு நூலின் உதவியால் சிக்கலிலிருந்து விடுபட்டவன் மற்றொரு நூலினால் கட்டப்படுகிறான். அரியத்னேயின் காதல் என்ற நூல்.
நூலே விடுவிக்கிறது. நூலே கட்டுகிறது. வாழ்க்கையின் விசித்திரமான முரண்களுள் இதுவும் ஒன்று.
நம் வாழ்க்கையும் ஒரு புதிர்வழிதான். நமக்குக் கிடைக்கின்ற ஏதோ ஒரு நூலின் ஒரு முனையைப் பிடித்துக் கொண்டு மறுமுனையைத் தேடிச் செல்கிறோம். மறுமுனையில் சொர்க்கத்தை, புதையலை நாம் எதிர்பார்க்கிறோம். மறுமுனையில் என்ன இருக்கிறது என்பதில் தான் வாழ்வின் சுவாரஷ்யம் தொடர்வதாய் நம்புகிறோம்.
புத்தகத்தை கூட தமிழில் நூல் என்றுதானே சொல்லுகிறோம். ஒரு நல்லபுத்தகம் நம் கையில் கிடைத்துவிட்டதென்றால் நூலின் ஒருமுனை நம் கையில் கிடைத்துவிட்டது என்று பொருள். நாம் மறுமுனையைத் தேடிச் செல்ல வேண்டும். அங்கே நமக்குப் புதையல் காத்திருக்கும்.
ஒவ்வொருவரும் இந்த நூலின் ஒருமுனையை பிடித்துக் கொண்டிருக்கிறோம். மறுமுனையில் யார் இருக்கிறார்கள் என்று சில நேரங்களில் தெரிகிறது. சில நேரங்களில் தெரிவதில்லை. சில நேரங்களில் ஒருமுனையுலிருந்து மறுமுனையை மீன்களைப் பிடிப்பதற்காய் வீசுகிறோம். அதாவது நூல் விடுகிறோம். சில நேரங்களில் மறுமுனையில் மீன்களாக சிக்கிக் கொள்கிறோம்.
சில நேரங்களில் நாம் மறுமுனை நோக்கிச் செல்கிறோம். சில நேரங்களில் மறுமுனைக்காரன் எம்மை நோக்கி வருகிறான். இது ஈர்ப்பின் சக்தியைப் பொறுத்து நிகழ்கிறது.
பல்லாயிரம் ஆண்டுகளாய் காதல் கலப்புக்கென்று கொண்டாடப்பட்டு வந்த உவமை செம்புலமும் பெயில் நீரும். வான் மேகத்திலிருந்து விழுகின்ற துளிக்கு தான் சென்றடையப்போகும் இடம் குறித்து எந்த எண்ணமும் கிடையாது. ஈர்ப்பின் அடிப்படையிலேயே அது பயணிக்கிறது. இலக்கை அடைகிறது. செம்புலத்தோடு சங்கமமாகிக் களிக்கிறது. அவ்வாறே இவ்வுயிர்த்துளியும் ஏதோ ஓர் ஈர்ப்பின் அழைப்பில் அந்த கயிறு வழியே பயணிக்கிறது. கயிறு வழியே ஊர்ந்து வந்த அந்த ஆகச்சிறிய ஆச்சரியம் இன்னொரு சிறிய ஆச்சரியத்தை ஆச்சரியமாகப் பார்க்கிறது.
காதலில் விழுபவர்கள் இலக்கினை இழந்துவிடுகிறார்கள் என்பது சமூகம் மேலோட்டுமாய் இரைமீட்கும் கருத்து. காதலென்பதே இலக்கின் வழிப்பயண ஊன்றுகோல் என்பதை உலகம் உணர்ந்தாலும் ஏற்க தயங்குகிறது. அதற்கு காரணமும் ஏராளம் கூறுகிறது. இங்கே இந்தச்சிற்றுயிரின் இலக்கு காதல் அல்ல. தேடலே விளையாட்டு நகர்தலே பொழுதுபோக்கு என்று வாழ்கிற உயிர்க்கு இலக்கு என்று எதுவுமில்லை. ஆனால் அது அடைந்துவிட்டதையெல்லாம் தன் இலக்காய்க் கருதி இன்பம் கொள்ளும் வல்லமை கொண்டது. அதன் இலக்கு என்பது எதிர்காலமல்ல. நிகழ்காலம்.
இந்த நூலின் இரண்டு முனைகளும் இப்போது இணைத்து முடிச்சுப் போடப்பட்டுள்ளது. சில நேரங்களில் மூன்று முடிச்சும் போட்டு விடுகிறோம்.
இதற்குப் என்ன பொருள்? ஒரே நூலின் இருமுனைகள் இணைந்து விட்டன என்றா? இல்லை இரண்டின் சேர்க்கையில் சிக்கல் உண்டாகி விட்டது என்றா?