இதழ்-26

சித்திராங்கதா – 26

நளினங் கொண்ட மௌனம்

போர்த்துக்கேயர்களின் போர் முன்னெடுப்புகள் ஒருபுறம் தீவிரமாய் நடந்து கொண்டிருப்பது பற்றிய செய்திகள் கோட்டைக்குள் காரசாரமாய் உலாவி வந்தன. நாகை பட்டிணத்திலிருந்து ஏராளமான பீரங்கிகளும், வெடி மருந்துகளும் மன்னார்க் குடாக்கடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனவாம். எத்தகைய மாவீரர்களாலும் அந்த ஆயுதங்களின் முன் நின்று போராட இயலாதாம் … என நாடு முழுவதும் பேச்சரவங்கள் பரவத் தொடங்கின.

இதனை எதிர்கொள்வதற்காய் புதிய வியூகங்கள் வகுப்பதற்கு வருணகுலத்தான் கோப்பாய்க் கோட்டையில் படை வீரர்களுடன் திட்டமிட்டுக் கொண்டிருந்தான்.
அவ்வேளை கோப்பாய்க் கோட்டை வாயிலில் ரதம் ஒன்று வருவதை வருணகுலத்தான் அவதானித்தான். ரதத்தில் ராஜமந்திரி ஏகம்பரனார் வந்து கொண்டிருந்தார்.

‘வன்னியர் விழா’ பற்றிய செய்தியினை வருணகுலத்தானிற்கு அறிவிக்கவே மந்திரியார் இவ்விடம் நோக்கி வந்தடைந்தார். அதுவரை அப்படியொரு விழாவினை பற்றி ஏதும் அறிந்திராத வருணகுலத்தான் அது பற்றி மந்திரியாரிடமே கேட்டுத் தெரிந்து கொண்டான். மந்திரியார் வன்னியர் விழா பற்றியும் இப்போது வன்னி மன்னர்களின் நிலைப்பாட்டை அறிய வன்னியர் விழா அவசரமாக நடாத்த வேண்டிய அவசியத்தையும் வருணகுலத்தானிற்கு எடுத்துரைத்தார்.

‘வருகின்ற சித்திரை முழுநிலவு நாளிலே நாம் விரைந்து வன்னியர் விழாவை நடாத்தவுள்ளோம்’ என மந்திரியார் கூறியதும் தான் அது அரங்கேற்ற நாள் என்பது வருணகுலத்தானிற்கு உறுத்தத் தொடங்கியது. அதனை நேரே மந்திரியாரிடம் கேட்பதற்கும் வருணகுலத்தினிற்கு சங்கடமாக இருந்தது. ஆனால் மந்திரியாரே அவனது சந்தேகத்தைப் போக்கினார்.

‘அதே சித்திரை முழுநிலவு நாளில் தான் சித்திராங்கதாவின் அரங்கேற்றத்தை நிகழ்த்த அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் அது எப்படிச் சாத்தியமாகும்? ஆதலால் தான் அரங்கேற்ற விழாவினை வேறொரு நாளில் நிகழ்த்தலாம் என மன்னரும் நானும் தீர்மானித்திருக்கிறோம். ஆனால் இதனை சித்திராங்கதாவிடம் தெரிவிக்க மன்னர் பெரிதும் தயங்கினார். தாங்கள் கூட அறிவீர்களன்றோ, மன்னர் தான் சித்திராங்கதாவின் நாட்டியத்திற்கு எவ்வளவு பெரிய இரசிகன் என்று. அதனால்த்தான் நானே நேரில் சென்று சித்திராங்கதாவிடம் இவ்விடயத்தை பொறுமையுடன் எடுத்துரைப்பதாய் கூறி மகிழாந்தகனுடன் கோப்பாய் நோக்கிப் புறப்பட்டேன். ஆனால் பெருவணிகர் இல்லத்தில் அங்கு யாருமே இருக்கவில்லை. பெருவணிகர் வீரமாகாளி கோயிலிற்கு சென்று விட்டதாய் கூறினார்கள். என்னுடைய ரதத்தில் மீண்டும் நல்லூர்க்கோட்டைக்குச் செல்ல இருள் கவிழ்ந்துவிடும் எனக் கூறி மகிழாந்தகனே தன் புரவியில் உடன் சென்று தகவல் சொல்லிவிடுவதாய்ப் புறப்பட்டான். மகிழாந்தகன் என்மீது கொண்ட அவநம்பிக்கை குறித்து தாங்கள் அறிவீர்களன்றோ. அதுதான் விரைந்து செல்வதாய்க் கூறி விலகிச் சென்றுவிட்டான். நான் தங்களிடம் தகவல் சொல்லுவதற்காக இவ்விடம் வந்துவிட்டேன்’

என்று இராஜமந்திரியார் கூறி முடித்ததும் கூட அறியாமல் வருணகுலத்தான் சிந்தையெல்லாம் சித்திராங்கதா மேலே இருந்தது. இந்தச் செய்தி சித்திராங்கதாவை எந்த அளவு வேதனைக்குள்ளாக்கும் என்று அவனால் உணர முடிந்தது. ஆனால் மந்திரியாரின் முடிவினை எதிர்த்துப் பேசவும் அவனால் இயலவில்லை. ஏற்கனவே காத்தவராயன் வழக்கு விடயங்களை எண்ணிப்பார்க்கையில் மந்திரியாரின் திட்டங்களில் அர்த்தங்கள் பல இருக்கும் என்பது அவனிற்குப் புரிந்தது. ஆனாலும் இப்போது தன்னால் என்ன செய்யமுடியும் என்பதுதான் அவனிற்கு புரியவில்லை.

‘ஆகட்டும் தளபதியாரே, நான் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு புறப்படுகிறேன். நீங்கள் உங்கள் பணிகளைக் கவனியுங்கள்’
என்று கூறி மந்திரியார் மாளிகைக்குள் சென்றதும் வருணகுலத்தான் அஸ்வதமங்கலத்தில் ஏறி அதிவேகமாக புறப்பட்டான்.

அஸ்வதமங்கலம் சித்திராங்கதாவின் நடனகூடத்தை வந்தடைந்தது. இதுவரை எந்நாளும் கண்டிராத ஒரு வெறுமையை அங்கு வருணகுலத்தான் கண்டான். அவன் மனதில் என்னென்னவோ எண்ணங்கள் எல்லாம் உதித்தன. கணநேரமும் தாமதியாது கோட்டை வீரமாகாளியம்மன் கோயிலை நோக்கி அதிவேகமாக விரைந்தான்.

அவன் மனதின் வேகத்தைப் புரிந்து கொண்ட அஸ்வதமங்கலம் அதி விரைவாகவே அவனை வீரமாகாளி கோயிலிற்கு அழைத்து வந்தது.

ஆலயவாசலில் பதற்ற மிகுதியுடன் நின்று கொண்டிருந்த பெருவணிகர் எச்சதத்தரைக் கண்டான் வருணகுலத்தான்.

‘என்னவாயிற்று பெருவணிகரே? இங்கே எதற்காக நின்றுகொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டான்.

எச்சத்தர் பதில் கூற தாமதித்த அந்த சில நொடிகள் கூட வருணகுலத்தானிற்கு பொறுமை இருக்கவில்லை. ‘கூறுங்கள் வணிகரே..’ என்றான் அதட்டலாக

‘என்ன கூறுவேன் தளபதியாரே, அரங்கேற்றம் தடைப்பட்டதால் என் மகள் என்னவோ போல் ஆகி விட்டாள். அரசரிடம் கூட கோபத்தில் எல்லைமீறிப் பேசிவிட்டாள். அதன் விளைவு எப்படி இருக்கும் என்று கூடத் தெரியவில்லை. இப்போது அன்னையின் பாதங்களில் விழுந்து கிடந்து எழுந்து வரக்கூட மறுக்கிறாள். நான் என்ன செய்வதென்றறியாது இங்கு நின்று கொண்டிருக்கிறேன்’ என்று கண்ணீருடன் கூறினார் எச்சதத்தர்.

வருணகுலத்தானது முகம் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் நின்றது. அன்னையின் சந்நிதானத்தை நோக்கி விரைந்து சென்றான்.

ஆதரிப்பார் எவருமற்று, தன்னைப் புரிந்தவர் அன்னையை விட வேறு யாருமில்லை என அநாதரவாய் அன்னையின் கால்களை பற்றிக் கொண்டு நிற்கிற ஒரு சேயினைப் போல சித்திராங்கதாவை அங்கு அவன் கண்டான். அரங்கேற்றம் தடைப்படுவதை அவள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமாட்டாள் என்பது வருணகுலத்தான் அறிந்ததே. ஆனால் அதற்காக இவ்வாறு அநாதரவான நிலையில் அவளைக் காண நேர்கையில் வருணகுலத்தான் உள்ளம் செய்வதறியாது துடித்தது. இந்த விடயத்தில் அவளை ஆற்றுப்படுத்துவது என்பது ஆகாத காரியம் என்றே அவனிற்குத் தோன்றியது. ஆனாலும் தன்னால் என்ன செய்ய முடியும் என்கிற கேள்வியே அவனிற்குள் மேலும் மேலும் ஒலித்துக் கொண்டிருந்தது.

அவளை எப்படி அழைப்பது? அழைத்தால் செவி சாய்ப்பாளா? கோபத்தில் கொதித்து விடுவாளா? என்னைத் தேற்ற நீ யார் என்று கேட்பாளா? கேள்விகள் அவனிற்குள் சண்டையிட செய்வதறியாத சிலையாகவே அவனும் நின்றான்.

அன்னையின் பாதங்களில் கிடந்தவள் ஏதோ புதிய உறுத்தல்களை உணர்ந்தவள் போல் நிமிர்ந்தாள். தன்னை நோக்கி நிற்கிற கண்களை அறிவதற்காய் திரும்பினாள்.

கருணையும் தவிப்பும் இரண்டறக்கலந்து நின்ற தஞ்சை மாவீரர் வருணகுலத்தானை அவள் கண்டாள். கண்டதும் உடன் தலையை திருப்பினாள். நாட்டியக்காரி அல்லவா? எந்த நேரமாயினும் அவளது ஒவ்வொரு அசைவுகளும் நளினத்தை மறப்பதில்லை.

தன்னைக்கண்டு அவள் முகந்திருப்பிக் கொண்டது வருணகுலத்தானிற்கு வேதனையாக இருந்தாலும் அந்தக் கணநேர நளினக்காட்சி அவனிற்கு அவ்வளவு பிடித்திருந்தது. எண்ணி எண்ணிப் பார்த்து இரசித்தான். வேதனையின் உச்சத்திலும் ஒரு துளி சந்தோசத்தை அவனிற்கு அந்தக்காட்சி கொடுத்திருந்தது.

அவள் என்ன நினைத்தாளோ தெரியாது. அக்கணமே எழுந்தாள். திரும்பவில்லை.

‘அப்பா.. ‘ என்று கூவினாள். ஓடி வந்தார் எச்சதத்தர். ‘வாருங்கள் செல்வோம்’ என்று கூறி திரும்பி எச்சதத்தரோடு பின் சென்றாள். இந்த நேரத்தில் ஒருமுறை கூட அவள் பார்வை வருணகுலத்தான் மீது விழவில்லை. கண்ணீரால் நிறைந்த அவள் கண்களின் பார்வை தரையை விட்டு அகலாமல் இருந்தது.

‘நாங்கள் விடைபெறுகிறோம் தளபதியாரே’ என்றார் எச்சதத்தர். வருணகுலத்தான் லேசாய்த் தலையாட்டினான். சித்திராங்கதா தலை நிமிரவேயில்லை. மிக வேகமாகவே அவள் ஆலயத்தை விட்டு வெளியேறி விட்டாள்.

அவள் வெளியேறிச் சென்ற வேகம் வருணகுலத்தான் மீது கொண்ட கோபம் என்று நாம் எடுத்துக் கொள்ளலாமா? அதை எப்படி எடுத்துக் கொள்வது என்று வருணகுலத்தானிற்கும் விளங்கவில்லை. அவள் பேச்சு , ஏளனம், நளினம் என எல்லாவற்றையும் இரசிப்பவன் அவன். கோபமாக உரத்தகுரலில் அவள் கடுமையாக பேசி இருந்தால் கூட அவன் இரசித்திருப்பான். ஆனால் அவள் அமைதி அவனை பெருந்துன்பம் கொள்ளச்செய்திருந்தது. நிச்சயமாய் இந்த அமைதியின் காரணம் அச்சமோ நாணமோ அல்ல என்பதை அவன் அறிவான். ஒருவேளை அவளது அமைதியை ‘அரசகுலத்தாரை நம்புவதில் இனி அர்த்தமேயல்ல’ என்பது போல் மொழி பெயர்க்கலாமோ என தோன்றி மறையும் தொடர் சிந்தனைகளால் நிம்மதியடைய முடியாது தவித்தான் வருணகுலத்தான்.

எப்படியாவது அரங்கேற்ற விழாவை நடாத்திவிட தன்னால் இயலுமான ஏதாவது செய்ய வேண்டும்போல் தோன்றியது. ஆனால் ராஜ மந்திரியாரின் முடிவை மாற்றியமைக்க உபாயமில்லையே எனவும் அறிந்திருந்தான். மன்னர் நாட்டு மக்களின் நன்மைக்கான் மந்திரியாரின் முடிவை மலைபோல் நம்புவதை அவன் அறிவான். அதை மீறி தானும் எக்காரியமும் செய்ய இயலாது என்ற பெருங்குழப்பத்தில் ஆலய வாசலிலே அவன் நின்று கொண்டிருந்தான் . எச்சதத்தரும் சித்திராங்கதாவும் கண்கணா தொலைவிற்கு விரைந்து விட்டனர். ஆனால் அதேவழியே இன்னொரு ரதம் வருவதைக் கண்டான் வருணகுலத்தான். ஏதோ நம்பிக்கையுடன் மனதிற்குள் பெருமளவு உற்சாகத்தைக் கூட்டி வந்து கொண்டிருந்த ரதத்தை உற்று நோக்கினான். அந்த ரதம் அவனிற்கு மீண்டும் ஒரு துளியளவு சந்தோசத்தையும் பாரியளவு எதிர்பார்ப்பையும் உண்டுபண்ணியது. ரதத்தை உற்று நோக்கியபடியே காத்திருந்தான்.

காத்திருங்கள்!

Related posts

குறுக்கெழுத்துப்போட்டி – 23

Thumi2021

முடிவுறாக் கொட்டுக்கள்

Thumi2021

நிலாந்தனின் மண் பட்டினங்கள் -வாசகர் பார்வை

Thumi2021

Leave a Comment