நடந்து முடிந்த இங்கிலாந்து – நியூஸிலாந்து தொடரின் முதலாவது டெஸ்ட் ஆட்டத்தில் டெஸ்ட்டில் அறிமுகமான கென்வே, ஒருபுறம் இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சனுடன் இருவரும் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர்கள், மட்டுப்படுத்தப்பட்ட ஆட்டங்களில் சிறந்தவர்கள் போன்ற காரணங்களாலும் மறுபுறம் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மைக் ஹசியுடன் அதிக ஆண்டுகளின் காத்திருப்பின் பின்னான அறிமுகம் என்றும் ஒப்பிடப்படுகிறார்.
கடந்த ஆண்டு இறுதியில் ரி20 சர்வதேச போட்டிகளிலும் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் அறிமுகமானார் கென்வே. நூற்றுக்கும் மேற்பட்ட முதல்தர ஆட்டங்களில் ஆடி 7000 ரன்களை கிட்டத்தட்ட 50 சராசரியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளில் எடுத்து நீண்டகாலம் காத்திருந்த கென்வேக்கு தன் அறிமுக டெஸ்டில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதுவும் கிரிக்கெட்டின் தாயகமான லோட்ஸ் (Lord’s) மைதானத்தில் விளையாடும் வாய்ப்பு. கிடைத்த இந்த வாய்ப்பை இரட்டை சதம் அடித்து நிருபித்து இருக்கிறார்.
தனது முதல்தர ஆட்டங்கள் மற்றும் உள்ளூர் ஆட்டங்களை 2009 இல் தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய டெவன் கென்வே, 2017 மார்ச் மாதம் தன் முதலாவது முதல்தர ஆட்ட இரட்டை சதத்தை அடித்தார். ஆனால் இது தான் தென்னாப்பிரிக்காவில் இவரின் இறுதி இன்னிங்ஸ். இங்கிலாந்தின் Kolpak க்காக நியூஸிலாந்தா என்பதில் நியூஸிலாந்தை தேர்வு செய்து 2017 ஓகஸ்ட் மாதம் நியூசிலாந்தின் வெலிங்டன் க்கு புறப்பட்டார். புறப்படும் போது தனது உடமைகள் வாகனங்கள் என எல்லாவற்றையும் ஒரு முழுமையான புது ஆரம்பத்திற்காக விற்று விட்டார். தென்னாப்பிரிக்காவில் நிலையான ஒரு இடம் கிடைக்காமல் தவித்த கென்வே, நியூசிலாந்தில் ஆரம்ப நிலை (top-order) துடுப்பாட்ட வீரராக உருவெடுத்தார். 2019-2020 பருவகாலத்தில் மூன்று விதமான நியூஸிலாந்தின் உள்ளூர் தொடர்களில் அதிக ரன்கள் குவித்த வீரர் ஆனார் – 2018-19 இல் இரு தொடர்களில் அதிக ரன்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
டெவன் கென்வெ, அறிமுக டெஸ்டில் இரட்டை சதம் விளாசிய ஏழாவது வீரர் ஆகி இருக்கிறார் (இந்த வருடம் 2021 இல் இது இரண்டாவது சந்தர்ப்பம் அறிமுக வீரர் இரட்டை சதம் பெறுவது). அதுவும் நியூஸிலாந்தின் இரண்டாவது வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக ஐந்து நியூஸிலாந்து வீரர்கள் அறிமுக டெஸ்டில் சதம் அடித்த வீரர்களாக உள்ளனர்.
அத்துடன் இவர் இந்தியாவின் முன்னாள் அணித்தலைவர் சௌரவ் கங்குலியின் சாதனை ஒன்றையும் இந்த இரட்டை சதம் மூலம் தகர்த்து இருக்கிறார். அதாவது லோட்ஸ் மைதானத்தில் அறிமுக டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்பதாகும். இதற்கு முன்னர் கங்குலி தன் அறிமுக டெஸ்டில் எடுத்த 131 ரன்களே லோட்ஸ் மைதானத்தில் ஒரு அறிமுக டெஸ்டில் விளையாடும் வீரரின் அதிக ரன்களாக இருந்தது. அத்துடன் சில ஒற்றுமைகளும் கங்குலி மற்றும் கென்வே இடையே உள்ளமை வியப்பாக இருக்கிறது. அதாவது இருவரும் பிறந்த தேதிகள் ஜூலை மாதம் எட்டு ஆகும். கங்குலி – 1972 ஜூலை 8, கென்வே – 1991 ஜூலை 8. இருவரின் அறிமுக சர்வதேச ஆட்டங்களும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக தான். கங்குலி ஒருநாள் சர்வதேச போட்டி மூலமும் கென்வே ரி20 சர்வதேச போட்டி மூலமும் தம் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார்கள். இருவரும் தம் இரு அணிகளின் 84வது வீரர்கள் என்பதும் சுவாரஸ்யமான மேலதிக தகவல்.
ஒருநாள் சர்வதேச அரங்கில் 75 ரன்கள் சராசரியும் ரி20 சர்வதேச ஆட்டங்களில் 59 ரன்கள் சராசரியும் வைத்திருக்கும் 29 வயதான டெவன் கென்வெ டெஸ்ட் ஆட்டத்திலும் பிரகாசித்து நியூஸிலாந்தின் மூன்று விதமான ஆட்டங்களிற்கான வீரராக வலம் வர வாழ்த்துகள்…