இதழ்-27

சிங்ககிரித்தலைவன் – 26

26.காதல் யானை

வண்டிலை விட்டு இறங்கிய லீலாதேவி தன் கடைக்கண்களில் நீர் கசிய தரையைப் பார்த்து நின்றாள்… காசியப்பன் தன் கரத்தால் அவள் நாடியை நிமிர்த்தி அவளின் அழகு ஒளிரும் முகத்தை அணு அணுவாக அளந்து இரசித்தான்! அவளை மார்போடு அணைத்துக்கொள்ள காசியப்பனுக்கு ஆசை அதிகம் இருந்தாலும், அதற்கான இடமும் தருணமும் இது இல்லை என்பதை உணரந்திருந்தான் அவனின் முன்னால் நின்ற லீலாதேவியின் கரங்களைப்பற்றி, அவர்களுக்கு முன்பாகப் பதிந்த, தனது யானையில் ஏற்றிக் கொண்டான்! யானையின் மேலே முன்னே லீலா தேவியும் அவளின் பின்னாக காசியப்பனும் அமர்ந்து கொண்டனர்!


அவர்களை ஏற்றுவதற்காகப் பதிந்த யானை, அவர்களை ஏற்றிய பின்னர் ஆடி அசைந்து மேலே எழுந்த போது சமநிலை தவறிய லீலா தேவியின் இடையை இறுகப்பற்றி தன்னோடு அணைத்துக் கொண்டான் காசியப்பன்!
மூன்று மாதங்களாகிறது அப்படி ஒரு இறுக்கமான அணைப்பை அவள் அனுபவித்து…
தன் கைகளால் காசியபனின் இரண்டு தொடைகளையும் இறுக அழுத்திப் பிடிக்க முயன்றாள் இடையைக் காசியப்பன் பற்றிய எதிரபாராத நிகழ்வால் தொடையைப்பற்றும் முயற்சியைக் கைவிட்டு அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு தலைகுனிந்து இடைவளைத்தாள்!


நீண்ட நாட்களின் பின்னால் காசியப்பன்முகத்தில் காதல் நிரம்பி வழிந்தது!
இனி இடம் என்ன…? தருணம் என்ன…?
தன் முன்னே ஒரு பாவையைப் போல அமர்ந்திருந்த,
அவள் கழுத்திலே ஒரு முத்தத்தைப்பதித்தான்!


சிலிர்த்துப் போன லீலாதேவி, முனகலோடு, நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்! இத்தனை நாட்களாய் பிரிந்து இருந்து விட்டு இப்போது மட்டும் என்ன திடீர் காதல் என்பதைப் போல பொய்கோவம் கொண்ட அவள் விழிகளில் கண்ணீர் வழிந்தது! அவள் பார்வை காசியப்பனுக்கு புரிந்தது! தன்கையால் அவள் கன்னத்தில் வழிந்த நீரை துடைந்தான். “தேவி… என் மீது கோவமா? உன் மீது கொண்ட காதல் உண்மையானது … இந்த நாட்டின் அதிகாரம் மீது நான் கொண்ட காதல் உறுதியானது … அதை அடையும் முயற்சியில் உன் அன்பின் அரவணைப்பில் இருந்து விடுபட்டு இருக்க வேண்டிப் போனது! பிரிந்திருந்த இத்தனை நாட்களிலும் உன்னை நினைக்காத நாள் என்று ஒரு நாளை சொல்ல முடியாது …! தேவி இந்த கல்லில் ஈரம் சுரக்கச் செய்வது உன் நினைவுகள் தான்” என்று காசியப்பன் சொல்லி முடிப்பதற்குள் லீலாதேவி அழுத கண்ணீர் அவள் மார்பை நனைத்திருந்தது..!


“பிரபு…. இந்தச் சிறியவள் உங்கள் அன்பைப் பெற்றதே பெரும்பேறு… உங்கள் அருகில் இப்படி அமர்ந்து போவது எல்லாம் கடவுள் தந்தவரமாகவே உணர்கின்றேன்! உங்கள் வார்த்தைகள் என்னை மேலும் கலக்கத்துக்குள்ளாக்குகின்றன. உங்கள் தூய அன்பின் அணியாக உங்கள் இதயத்தின் ஒரு ஓரத்தில் இடம் கிடைத்தாலே போதும்…. இந்த அவலையின் வாழ்வு நிறைந்து வழியும் … அது ஒன்றே என்றும் நாள் விரும்புவது ” லீலாதேவியின் வார்த்தைகள் காசியப்பனின் இதயத்தைத்தைத்தது … “அவலை என்று கூறாதே தேவி! இனி இந்தப் பூமியின் ராணி நீதான் ! காலாகாலமாய் ஆட்சியாளர்கள் வகுத்த அநீதி நிறைந்த வழமைகளை மாற்றுவேன் ! புதிய இலங்கையை படைப்பேன்!. அது தேவலோகத்துக்கு நிகராக மிளிரும் ! அங்கே எனது ஆட்சி, அதன் மாட்சி அத்தனையிலும் சரிசம பங்காய் நீயே இருப்பாய்… நிமிர்ந்து பார்தேவி அதோ தெரிகிறதே சிகரம்… சிங்கச்சிகரம்! அங்கே எனது அரண்மனையில் உனது பங்கே பாதி இருக்கும்… நீ அவலை இல்லை.. ஆளப்பிறந்தவள்!”
என்று சொன்ன காசியப்பன் தூரத்தே தெரிந்த அந்த ஒற்றைக்குன்றை லீலாதேவிக்கு சுட்டிக்காட்டினான்… அவள் ஆச்சரியத்தோடு அண்ணார்ந்து பார்த்தாள்! வழியில் பாதை இரண்டாகப் பிரிந்தது… அந்தக்குன்றுக்கு போவதற்காக புதிதாய் ஒரு பாதையை காசியப்பனின் வீரர்கள் காட்டை வெட்டி செப்பனிட்டுக் கொண்டிருந்தனர் … வழமையான பழைய பாதையில் இருந்து காசியப்பனின் யானை எந்தப் புதிய பாதையில் இறங்கியது … கோரும் அவனது குதிரை வீரர்களும் அணி அணியாக அந்தப் பாதையில் இறங்கினர்… எருது பூட்டிய வண்டிகள் சதங்கைச் சத்தங்கள் ஒலிக்க அந்தப் பாதையில் இறங்கின… வீரர்களும் பணியாளர்களும் தூரத்தில் தெரிந்த அந்தக் குன்றைக்காட்டி தம்முள் கதைத்துக் கொண்டனர். லீலாதேவி ஆச்சரியமாக,

“பிரபு… இதுதான் நீங்கள் கண்ட குன்றா ? உன்னிச்ச இதனைப் பற்றித்தான் அடிக்கடி கூறுவான் உண்மையில் அதன் மேலே என்ன இருக்கிறது…?
பாவம் உன்னிச்ச நீங்கள் இளவரசர் என்பதை அறிந்த நாளில் இருந்து பிரமை பிடித்தவன் போல திரிகிறான்… உங்களை வணிகராக நினைத்து அவன் செய்த சேட்டைகளுக்கு தண்டனை கிடைக்கப்போகிறது என்று புலம்பிக் கொள்வான்”
காசியப்பன் கீழே எட்டிப் பார்த்தான் உன்னிச்ச மாட்டுவண்டியில் விறைத்துப் போய் வந்து கொண்டிருந்தான்… அவனின் நிலையை எண்ணிய காசியப்பன் கலகலவெனச் சிரித்தான்…. முன்னே சென்ற மீகாரன் திரும்பி நிமிர்ந்து காசியப்பனைப் பார்த்து தன் கைகளை உயர்த்தி ஏதோ சைகை செய்தான்! பதிலுக்கு காசியப்பனோ தன் தலையை அசைத்து மறுமொழி தந்தான்… யானை அசைந்து ஆடி மிதமான வேகத்தில் சென்றுகொண்டிருந்தது…
“பிரபு… ஏன் அந்தச்சிகரம் உச்சியில் தட்டையாக… வெட்டி எடுத்ததைப் போல இருக்கிறது? எப்படி அங்கே போவது? உச்சிவரைப் போகலாமா? அங்கே இருந்து பார்த்தால் எங்கள் ஊர் தெரியுமா??”
ஒரு குழந்தையைப்போல லீலா தன் கேள்விகளை அடுக்கிக்கொண்டு போனாள்! உண்மை தான்… எந்த இடத்தில் துன்பங்கள் தொலைகிறதோ… அந்த இடத்தில் மனது குழந்தையைப்போல் மாறிவிடுகிறது…
“தேவி… உன் கேள்விகளுக்கும் விடை தேடித்தான் இந்தப் பயணம்… இந்த யானையின் முதுகைப்போல, தட்டையாய் அது ஏன் இருக்கிறது என்ற கேள்வி என்னுள்ளும் எழுகிறது… இதோ பார்… வீரர்கள் இப்போது தான் பாதையமைத்துக்கொண்டிருக்கின்றார்கள்… உன் கேள்விகளுக்கும் பதிலாகிய வழிகள் பிறக்கும்…” என்றவன் தன் கையை உயர்த்தி வழியில் உயர்ந்திருந்த மரக்கிளையில் படர்ந்திருந்த காட்டு முல்லைக்கொடியை மலர்களோடு பிடுங்கிக்கொண்டவன், அதை ஒரு கிரீடம் போல சுற்றி லீலாதேவியின் தலையில் வைத்தான்! லீலா தேவி அந்தக் குன்றைவிட உயரமாக மேலே எங்கோ பறந்துகொண்டிருந்தாள்!

யானை நகரும்….

Related posts

3.47 வினாடிகள் தொடக்கம் முடிவிலி வரை

Thumi2021

நீயும் ஏழை தான்!!!

Thumi2021

சம்மதங்௧ள் உள்ள போதும்…!

Thumi2021

Leave a Comment