இதழ்-27

ஈழச்சூழலியல் 14

முதிர்ச்சியில்லாக் கபிலநிறமண் :- முதிராக் கபிலநிறமண்ணானது மலைநாட்டின் கண்டி, மாத்தளை, மாவனெல்ல போன்ற ஈரவலய பகுதிகளிலும் , உலர்வலயத்தின்  அம்பாறையின் மேற்கு எல்லை, பதுளையின் வடகிழக்கு எல்லை போன்ற பகுதிகளிலும் காணப்படுகின்றது. அதிக ஆழமற்ற, பூரண வடிதலுக்குட்பட்ட, கடும் கபில நிறம் முதல் மஞ்சள் கலந்த கபில நிறம் வரையான நிறமாறுபாடு கொண்டதாகவும், மத்திம இழையமைப்பையும், ஓரளவுக்கு அமிலத்ன்மை வாய்ந்ததாகவம் இம் மண் விளங்குகின்றது. செங்குத்தான தேய்ந்த சாய்வுகள் முதல் இன்று நிலத்தோற்றம் வரை இம்மண் பரந்தள்ளது. காட்டுவளப்பிற்கு ஏற்றதாகும். அத்துடன் நீர்ப்பாசன வசதியுடன் காய்கறிப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளலாம்.

அண்மைக்கால மணல் மண் (மணல்சார் றெகோசோல்ஸ்) :- இலங்கையின் கரையோரங்களில் அண்மைக்கால மணற்படிவுகளைக் காணலாம். இவை கடலோரங்களில் மணற்குன்றுகளாகவும், கடற்கரைகளாகவும் உருப்பெறுகின்றன.  அதிகமாக யாழ்ப்பாணம் மேற்குகரையோரம், தலைமன்னார், கற்பிட்டி, மட்டக்களப்பு முதலான கரையோரங்களில் இவ்வகை மண் காணப்படுகின்றது. இம் மண் மிகவும் ஆழமானதாகும் அதாவத 3 மீற்றருக்கு மேற்பட்ட தடிப்பையுடையதாகும். வெள்ளை நிறத்துடனும், தனி மணியுருத் தன்மையான இழையமைப்புடனும் காணப்படுகின்றது. நீர் வடிந்த செல்லும் தன்மை அதிகமாகக் இம் மண் கொண்டுள்ளது.. வரண்ட வலயத்தில் மரமுந்திரிகைப் பயிர்ச்செய்கைக்கும், ஈரவலயங்களில் தென்னைப் பயிர்ச்செய்கைக்கும் பொருத்தமானவையாகக் காணப்படுகின்றது.

வண்டல் மண் :- நீரினால் அரித்துக் காவி வரப்பட்ட அடையல்களானது நதிப்பள்ளதாக்குகள், நதி வடிநிலங்கள் என்பவற்றில் வண்டல் மண்ணாகப் படிந்துள்ளன. மண் இழையமைப்பானது மணல் தன்மை முதற்கொண்டு களித்தன்மை வரையில் காணப்படுகின்றது. மண்ணின் நிறமானது வெள்ளை, செங்கபிலம், சாம்பல், கறுப்பு எனப் பலவாகும். அத்துடன் இம்மண்ணின் நீர்வடிந்து செல்லும் தன்மை அதிகளவில் வேறுபட்டுக் காணப்படுகின்றது.நீர் அதிகம் வடிந்து செல்லாத களித்தன்மை கொண்ட மண் நெற் பயிர்ச்செய்கைக்கு உகந்ததாகும். மென்மையான இழையமைப்பைக் கொண்ட மண் உப உணவுப் பயிர்ச்செய்கைக்கு உகந்ததாகவும் காணப்படுகின்றது.

கருமண்(கிரமுசோல்ஸ்) :- இது கரும் பருத்தி மண் எனவும்  கிரமுசோல்ஸ் எனவும் அழைக்கப்படுகின்றது. இவ்வகை மண்ணானது முருங்கன், கெட்டிபொல(மாத்தறை), அம்பேவில(ரத்னபுரி) போன்ற உலர்வலயப் பகுதிகளில் காணப்படுகின்றது. இது பருத்திப் பயிர்ச்செய்கைக்கும், நெற்பயிர்ச்செய்கைக்கும் ஏற்றது.

உவர்நிலமண்(சொலோடைஸ் சொலோநெற்ஸ்) :- சொலோடைஸ் சொலோநெற்ஸ் எனப்படும் உவர்நில மண் வகைகளைக் கரையோரக் களப்புக்களையடுத்துக் காணலாம்.  குறிப்பாக மகாவலி Bபிரதேசத்தின் கிழக்கு மற்றும் உள்ளக சமவெளிகள் (கண்டக்காடு – திரிகோணமடு) போன்ற பகுதிகளிலும் ஆணையிறவு, பூநகரி போன்ற பகுதிகளிலும் காணலாம்.  கபில நிறத்திலிருந்து கடும் கபில நிறம் வரை காணப்படுகின்றது. மண்ணின் இழையமைப்பு கரடு முரடானதாக இல்லாமலும் அமிலத்தன்மை குறைந்த மண்ணாகவும் காணப்படுகின்றது. இது காரத்தன்மையுடையதாயினும் இயற்கைப் பசளைகளைப் பயன்படுத்தி நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.

சதுப்பு நில மண் :- சதுப்பு நில மண்ணானது கரையோரம் சார்ந்த நீர் தேங்கிநிற்கும் சேற்றுப் பாங்கான பகுதிகளில் குறைந்தளவு வடிதலுக்குட்பட்ட இம்மண் காணப்படுகின்றது.  குறிப்பாக கொழும்பு, கழுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி போன்ற பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களில் காணப்படுகின்றது. குறைந்தளவு வடிதலுக்குட்பட்ட மண் மேற்பரப்புப் படையானது கடும் கபில நிறம் முதல் கறுப்பு சேதனப் பொருட்களைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. இம்மண் நெல் மற்றும் நாணற்புல் உற்பத்திக்கு பொருத்தமானதாகும்.

செம்மஞ்சள் மண்மீதுள்ள லற்றோசோல் மணல்சார்ந்த மண் :- இவ்வகை மண்ணானது மாதம்பை, நீர்கொழும்பு ஆகிய தாழ்நில ஈரவலயப் பகுதிகளில் காணப்படுகின்றது.

கைவிடப்பட்ட நீர் நிலைகளில் படிந்துள்ள கியுமிக் மண் :- இவ்வகை மண்ணானது ஈரவலயத்திலும் உலர்வலயத்திலும் காணப்படுகின்றது. குறிப்பாக மத்திய மலைநாட்டின் கிழக்குப் பகுதிகளில் இது காணப்படுகின்றது. கைவிடப்பட்ட நீர்நிலைகளில் இவ்வகை கியுமிக் மண்கள் படிந்துள்ளன.

கல்சியம் நிறைந்த செம்மஞ்சள் லற்றோசல் :- கல்சியம் நிறைந்த செம்மஞ்சள் லற்றோசல் மண்ணனாது பெரிதும் செம்மஞ்சள் லற்றோசல் மண்வகையை ஒத்தாகும். இருப்பினும் இவை இரண்டிற்கும் இடையிலான வேறுபாடு கல்சியம் நிறைந்த செம்மஞ்சள் லற்றோசல் மண்ணானது ஒரு சில சென்ரி மீற்றர்கள் தொடக்கம் பல மீற்றர்கள் வரையில் ஆழத்தில் வேறுபடுகின்ற  சுண்ணாம்புக் கற்களை அடியில் கொண்டுள்ளமையே ஆகும். நீர்ப்பாசனம் செய்யப்படுகின்ற உப உணவுப் பயிச்செய்கைக்கு இம்மண் மிகவும் பொருத்தமானதாகும்.

ஆராய்வோம்……..

Related posts

மருத்துவம் போற்றுதும்

Thumi2021

தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் கமலாம்பாள் சரித்திரத்தின் முக்கியத்துவம் – 01

Thumi2021

சித்திராங்கதா – 27

Thumi2021

Leave a Comment