இதழ்-27

சட்டவிழுமியம்

சட்டம் மற்றும் விழுமியம் இரண்டும் மிக சராசரியான வார்த்தைகள். சட்டம் எல்லோருக்கும்  சட்டம் பொதுவான ஒரு விழுமியத்தை சொல்கிறது என்று கொள்வோம். ஆனாலும் விழுமியம், தனிநபர்களின் கொள்கைகள் வாழ்வை எதிர்நோக்கும் விதம், கோட்பாடு, குடும்ப பின்னணி, வாழ்க்கைமுறை, மற்றும் அறிவு என பல காரணிகளின் பாதிக்கப்படுவதால் ஒவ்வொன்றும் முற்றிலும் மாறுபட்ட மட்டங்களில் இருப்பதைக்காணலாம். 

இலகுவாக விளங்கிக் கொள்ள வேண்டுமென்றால் ஒரு மனிதரைப் போன்றே உயிருள்ள அனைத்தின் மீதும் அன்பு காட்ட நாம் ஒவ்வொருவரும் வேறுபட்ட அளவுகோல்களை வைத்துள்ளோம். சிலர் ஜீவகாருண்யம் என்பது மிருகங்களை உயிரோடு துன்புறுத்தல் கடின வேலைகளை செய்ய வைத்தல் பரிசோதனைகளுக்காக பயன்படுத்தல் என்பன தடுக்கப்படல் என்றே கருதுகின்றனர். இன்னும் சிலர் கொல்லப்படுதல் தடுக்கப்பட வேண்டும் என்கின்றனர். இன்னும் சிலர் செல்ல பிராணிகளாக வளர்க்கப்படும் போதே சில நியமங்களை பின்பற்ற வேண்டுமென கருதுவதையும் காணலாம். இன்னும் தெளிவாகச் சொல்வதானால் கன்றுக்காக தாய்ப்பசு சுரக்கும் பாலை குடிப்பது ஒரு தவறான செயல் என விமர்சிப்பவர்கள் உள்ளனர். இதே இன்னும் சிலர் பாலைப் பெறுவதில் தவறில்லை ஆனால் பசுவைக் கொல்வது தவறு என்றும் இன்னும் சிலர் உணவுத் தேவைக்காக பசுவைக் கொல்வதற்கு ஒரு நியாயம் உண்டு என்றும் வாதிப்பர். அப்படிப்பட்டவர்களின் கண்களுக்கு பசுவை அடித்து துன்புறுத்துவதும் பரிசோதனை ஊசிகள் போடுவதும் மரபணு மாற்றம் செய்வதும் தவறு என தோன்றுகிறது. ஆகவே இங்கு ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் பல நியாயங்களும் சில நியாயமின்மைகளும் இருக்கக் காண்கிறோம். என்னுடைய கண்களிலே பாரதூரமான தவறு என்று தோன்றுகின்ற ஒரு விடயம் உங்களின் கண்களிலே மிகச் சாதாரணமாகத் தோன்றலாம்.

அப்படியானால் நியாயங்கள் எங்கிருந்து பிறக்கின்றன?  எல்லோருக்கும் இது சரி இது தவறு என நாம் ஒரே சட்டத்தையே பாவிக்க முடியுமா?  கொஞ்சம் உங்களை பின்னோக்கி அழைத்து போக நினைக்கிறேன். சில விடயங்கள் நமக்கு நியாயமாக தோன்றியது ஆனால் இன்றைக்கு அவற்றை கடந்து நிறைய தூரம் பயணம் செய்திருக்கிறோம். நரபலியை எடுத்துக்கொண்டால் ஒரு காலகட்டத்தில் புனிதமான சடங்காக இருந்தது பின்னர் தவறாக கருதப்பட்டு கொலை என்கின்ற நிலையில் வந்து நிற்கிறது. ஆனால் தனி மனிதனின் இறப்பு கொலைக்கு காரணமென்றாலும் கொலை நிகழும் இடம், சந்தர்ப்பத்தைப் பொறுத்து நாம் பல நியாயங்களைக் கற்பிக்கிறோம். தன்முனைப்பாக நாடுகளின் போரில் ஈடுபடும் போர்வீரர்களின் கொலை மரணமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் போரில் பங்குபற்றாத மக்களின் இறப்பு மாத்திரமே கொலையாக பார்க்கப்படுகிறது. தற்காப்பை முன்னிறுத்தி ஒருவன் செய்யும் முயற்சி கொலைக்குற்றத்தினை குறைப்பதற்கான எதிர்வாதமாகவே பார்க்கப்படுகிறது. ஆகவே விழுமியம் என்பது காலம் இடம் ஏதுக்களைக் கொண்டு கணிக்கப்படுகிறது.

விழுமியம் என்பது தனி நபர்களின் தனிப்பட்ட சிந்தனைகளின் மேலே கட்டமைக்கப்படுகிறது. அப்படியானால் சட்டம் எப்படிப்பட்ட ஒரு நியாயம்? அது ஒரு பொதுமைப் படுத்தப்பட்ட அடிப்படை நியாயம் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக சட்டத்தை பின்பற்றி நடந்தால் நாம் அனைவரும் நல்ல விழுமியமுடைய மனிதர்கள் என்ற எடுகோள் மிகப்பெரிய தவறு ஏனெனில் சட்டம் ஒரு அடிப்படை அளவுகோல் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டால் இந்த சட்டத்தை பின்பற்றி நடக்கிற சமூக விழுமியக்கேடுகளை எங்களால் தடுக்க முடியும். ஆனால் விழுமிய மட்டத்தை உயர்த்த முடியாது ஆகவே மனிதத்தை உயர்த்தும் நோக்கில் செயல்படும் மனிதர்கள் சட்டத்தை தாண்டிய விழுமிய பெறுமானத்தை பின்பற்ற வேண்டிய தேவை உள்ளது. இவை கலாசார பெறுமானங்கள் மூலமே கட்டமைக்கப்படும்.

கதிர்தர்சினி பரமேஸ்வரன்.
சட்டத்துறை மாணவி,
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்.

Related posts

வெள்ளைக் காதல்

Thumi2021

அந்த வேரை அறுத்து விடுங்கள்

Thumi2021

சம்மதங்௧ள் உள்ள போதும்…!

Thumi2021

Leave a Comment