அதிசயம் நிகழ்த்த வேண்டும்
நல்லூர்க்கோட்டையின் மேற்கு வாசலை நோக்கி தொலைவில் வந்து கொண்டிருக்கிறது ராஜமந்திரியாரது ரதம். வீரமாகாளி கோயில் வாயிலில் நின்று கொண்டு அந்த ரதத்தை ஆவலோடு எதிர்பார்த்திருந்த வருணகுலத்தானிற்கு அது மந்திரியாரது ரதம் என இனங்கண்ட நொடி கொஞ்சம் ஏமாற்றத்தையே கொடுத்தது. ஆனால் அந்த ரதத்தை பார்த்தபிறகு தான் ஒரு புதிய யோசனை வருணகுலத்தானிற்கு தோன்றியது.
இந்த தருணத்தில் அரங்கேற்ற விழா நடந்தேறுவதற்கு மந்திரியார் மனம் வைத்தலே அவசியம் என உணர்ந்தான். அதற்காக தன்னால் ஆன சிறுமுயற்சியை தொடங்கியாக வேண்டும் என கணநேரத்தில் யோசித்தான். பல யோசனைகளையும் திட்டங்களையும் எண்ணியே ராஜமந்திரியார் முடிவு மேற்கொண்டிருப்பார் என்று தெளிவாய் அறிந்திருந்தும் சித்திராங்கதாவிற்காக அதனை மாற்றியமைக்க மந்திரியாரிடம் விண்ணப்பம் கோருவதற்காய் முன்னேறத் தயாரானான்.
ஆனால் அந்த ரதம் அவனிற்கு மீண்டும் ஏமாற்றத்தையே கொடுத்தது. கோட்டை வாசலிற்கு வந்துவிட்ட ரதத்தில் இராஜமந்திரியார் இருக்கவில்லை. ரதசாரதி மட்டுமே ரதத்தை செலுத்திக்கொண்டு கோட்டை நோக்கி வந்திருக்கிறான்.
திட்டமிட்டதை நிறைவேற்ற முடியாத வெறுப்போடும், தன் கண்களை தவிர்த்து விலகியோடிப்போன சித்திராங்கதாவின் அந்தத் குனிந்த வதனம் உள்ளத்தில் கிடந்து உண்டாக்கும் அளவிலா வேதனையோடும் அவன் உற்சாகமிழந்து மந்திரி மனை நோக்கிச் சென்றான்.
மனையிலே தன் அறையில் அமைந்திருந்த அந்த வட்டவடிவமான சாளரத்தின் வழியே தெரிந்த கோட்டையின் நெடுஞ்சுவர்களை நோக்கிய வண்ணம் அவன் தீரா யோசனையில் தன்னோடு பேசிக் கொண்டிருந்தான்.
‘தஞ்சை ரகுநாத நாயக்கரின் ஆணைக்குக் கட்டுப்பட்டே ஈழம் வந்தேன். வந்த இடத்தில் ஏதும் வழி தவறி நடக்கின்றேனா?
என் கடமைகளை ஆற்ற விடாது பெருந்தடையாய் நின்று இப்படி உள்ளத்தை வாட்டுவது எது? ஈழத்தின் அரச முடிவொன்றையே மாற்றுவதற்கு கோர தயாராகிவிட்டேனே? எதற்கு? எந்த வகையில் இது தகும்? முறையற்ற செயலை அல்லவா செய்யத் துணிந்து விட்டேன், இதற்கு என்னிடம் என்ன நியாயம் இருக்கிறது? இல்லையே, எதுவும் இல்லையா? இருக்கிறது தானே, சித்திராங்கதாவின் வாட்டத்தைப் போக்கத்தானே எண்ணம் கொண்டேன். அவளது வேதனையும் நியாயமானதன்றோ?
அரங்கேற்றம் மீது அளவில்லாக் கனவு கொண்டிருந்தவள் எனக்காகத்தானே அரங்கேற முன்னமே மேடை ஏறினாள். அந்த அரங்கேற்ற விழாவை நடத்தியாக வேண்டியதில் என்னுடைய கடமையும் இருக்கிறதல்லவா?
நான் என்னுடைய இக்கடமையை ஆற்றத் தவறிவிட்டேன் என்றுதானே இப்போது அர்த்தம். அதனால்த்தானே என்னை நிமிர்ந்து நோக்க மறுத்து என்மீதான நம்பிக்கையிழந்து விலகிச் சென்றுவிட்டாள்’
என்று அவன் எண்ணக் கோலங்கள் நீண்டு கொண்டே போயின.
‘தளபதியார் பார்வையாலேயே கோட்டைச்சுவர்களை இடித்து விடும் புதிய வித்தை ஏதும் முயற்சிக்கின்றாரோ?’
என்று தன் பின்னால் ஒரு பெண்குரல் கேட்டு சுயநினைவு பெற்றான் வருணகுலத்தான்.
‘வாருங்கள் தேவி…’
மாருதவல்லி வந்திருந்தாள்.
‘என்ன, தளபதியார் ஏதோ தீவிர சிந்தனையில் மூழ்கிக் கிடப்பது போல் தெரிந்தது. என் பங்கிற்கு நானும் கொஞ்சம் குழப்பிவிடலாமே என்று வந்தேன்’ என்று கூறிச்சிரித்தாள் மாருதவல்லி.
‘அதற்கென்ன தேவி; தங்களால் முடிந்ததைத் தாராளமாய்ச் செய்யுங்கள். ஆனால் தங்களை இப்படி சிரித்த முகத்தோடு பார்த்து நாட்களாகிவிட்டன என்று அரண்மனையில் எல்லாருமே பேசிக்கொண்டிருந்தனர். தங்களை மீண்டும் இந்த மலர்ந்த முகத்தோடு பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது தேவி’
‘உண்மைதான் தளபதியாரே, அந்தக் கொடிய சம்பவத்திலிருந்து நான் என்னை முழுமையாக மீட்டெடுக்க முடியவில்லை. அநாவசியமான பேராசைகளை மனதில் வளர்த்துக் கொண்டதால் நான் பெற்ற பரிசு எனக்குப் பெரிய பாடத்தை புகட்டிவிட்டது. ஏதோ தங்களால்த்தானே இன்று உயிர் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்’
‘அப்படிச் சொல்லாதீர்கள் தேவி, தங்களின் துணிச்சலான செயலினாலே எமக்கு மிக்கபிள்ளையை சிறைபிடிப்பது அனுகூலமாய் முடிந்தது. எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கிறதல்லவா? இதில் தங்கள் தவறு என்று சொல்ல என்ன இருக்கிறது? வீண் யோசனையை விடுங்கள் தேவி’
‘என் தவறும் இருக்கிறது தளபதியாரே. மகாராணி நானாவேன் என்கிற அர்த்தமற்ற கற்பனைகளாலான ஆசைகளை உள்ளத்தில் வைத்துக் கொண்டு அலைந்தவள் நான்தானே. சிறு வயதில் மகாராணி மஞ்சரிதேவி என்மீது காட்டிய கரிசனையை கருதி நானே அடுத்த மகாராணி என்று எண்ணிக் கொண்டேன். காலஞ் சென்றபின் அது சாத்தியமேயில்லை என்று உண்மை புரிந்தும் ஏனோ அதை ஏற்க மறுத்து மகாராணி நானே எனும் எண்ணத்திலே திரிந்தேன். அந்த எண்ணம் என்னை இப்படி ஒரு ஆபத்துப்பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று நான் ஒரு கணம் கூட நினைத்துப்பார்க்கவில்லை’
உறுதியான குரலோடு மாருதவல்லி வெளிப்படையாகப் பேசியது வருணகுலத்தானிற்கு ஒரு புரிதலை உண்டுபண்ணியது. நடந்த முடிந்த சம்பவங்களால் அவள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டான்.
‘தேவி, நடந்தவை எல்லாமே நல்லபடியாகத்தான் நடந்திருக்கிறது. மிக்கபிள்ளை போன்றவனின் முடிவு தங்களால் நிகழ வேண்டும் என்பதே விதி போலும். இதற்காக தாங்கள் வருத்தம் கொள்ளத் தேவையில்லை. முடிந்தவை முடிந்தவையாகவே இருக்க இனி தாங்கள் மகிழ்வாய் இருங்கள் தேவி’ என்றான் வருணகுலத்தான்.
‘நன்றி தளபதியாரே… பார்த்தீர்களா? தாங்கள் ஏதோ சிந்தனையில் இருக்கிறீர்கள் என்று பேச வந்து என் கதையைக் கூறிக் கொண்டிருக்கிறேன்’
‘அப்படியொன்றும் இல்லை தேவி . என் சிந்தனையெல்லாம் யுத்தகளம் பற்றியதே. அது எப்போதுமே என் சிந்தையில் உடன் இருந்து கொண்டுதான் இருக்கும்’
‘நான் மனந்திறந்து தங்களிடம் உண்மைகளைக் கூறினேன். நீங்கள் என்னை நம்பவில்லை என்று நீங்கள் சொல்கிற பொய்யே எடுத்துக்கூறுகிறது அல்லவா?’
‘அப்படியில்லை தேவி…’ என்று கூறியவனால் அதற்கு மேல் பேச முடியவில்லை. தன் வேதனையை மாருதவல்லியிடம் பகிர்ந்து கொள்வது ஏனோ ஆறுதலாய் இருக்கும் என அந்நேரம் வருணகுலத்தானிற்கு தோன்றியது.
‘பிறகு எப்படித் தளபதியாரே? கூற விருப்பம் இல்லாவிட்டால் கூறத் தேவையில்லை. இந்தச் சிறு பெண்ணால் தங்களிற்கு என்ன உதவமுடியப் போகிறது’
‘கூறுகிறேன் தேவி…..
தாங்கள் இந்த ஈழவளநாட்டின் நாட்டிய வித்தகி சித்திராங்கதாவை அறிவீர்களா?’
‘அறியாமல் இருப்பேனா? கூறுங்கள் தளபதியாரே’
கூறினான். எல்லாவற்றையும் கூறினான். தன் மனதின் ஓரங்களில் தேக்கி வைத்த வார்த்தைகளை எல்லாம் முதன் முதலாய் இப்போதுதான் ஒரு சக மனிதரிடம் அவன் கூறுகிறான். தன் உள்ளத்தின் மொழிகளை எல்லாம் அவன் மாருதவல்லியிடம் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தான்.
தன் பார்வையை விலக்கி அவள் சென்ற விதத்தை கூறுகையில் தான் அவன் குரல் மெல்ல உடையத் தொடங்கியது.
‘புரிகிறது தளபதியாரே, ‘ என்று கூறி தானும் மௌனமானாள் மாருதவல்லி.
சிறிது நேரம் கழித்துத் தொடர்ந்தாள்.
‘நான் வேண்டுமென்றால் தந்தையிடம் வேண்டுகோள் விடுக்கவா? என் சொல்லை தந்தை மறுக்கமாட்டார் என்று கருதுகிறேன்’
‘இல்லை தேவி, மந்திரியார் வேண்டுமென்றே இதைத் திட்டமிட்டுச் செய்யவில்லை. அவர் பல விடயங்களை கருத்திற் கொண்டே திட்டம் தீட்டியிருப்பார்.’
‘உண்மைதான் தளபதியாரே, ஆனால் வன்னியர் விழாவிற்கு குறிக்கப்பட்ட நாளில் தானே சிக்கல் உருவாகியுள்ளது. அதனை மாற்றுவதற்கு கோருவதில் தவறேதுமில்லையே. தந்தை மன்னரைச் சந்திப்பதற்காக சென்றிருக்கிறார். வந்தவுடன் நான் இது குறித்து அவரிடம் வினவுகிறேன்’ என்றாள் மாருதவல்லி.
‘’என்ன ? மந்திரியார் மன்னரைப் பார்க்கச் சென்றுள்ளாரா? அவர் இவ்வேளை கோப்பாய் மாளிகையிலல்லவா இருக்க வேண்டும். இன்று மாலையில்த் தானே என்னை சந்திக்க அங்கு வந்திருந்தார். அத்தோடு அவரது ரதம் கூட இப்போதுதானே கோட்டைக்குள் வந்தது. அதில் கூட மந்திரியார் வரவில்லை. பிறகு எப்படி?’
‘என் தந்தை எப்போது எங்கிருப்பார் என்று யாராலும் கூற முடியாது. அதுதான் அவரது பெருந்திறமை. ஆனால் இப்போது சில நாழிகைக்கை முன் தான் மன்னரைச் சந்தித்து வருவதாய் கூறி மனையிலிருந்து வெளியேறினார். அவர் மன்னரைச்சந்தித்து விட்டு வந்ததும் நான் இது குறித்து தந்தையிடம் வினவுகிறேன். நீங்கள் கவலை விடுங்கள் தளபதியாரே’
‘எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை தேவி, என் சிந்தை தெளிவில் இல்லை. எல்லாம் குழப்பமாகவே இருக்கிறது. தாங்கள் கூறுவது போல் நடந்தால் உண்மையில் பெரு மகிழ்ச்சியே’
சிரித்தாள் மாருதவல்லி.
‘நிச்சயமாக தளபதியாரே…’
‘மகாராணி நினைத்தால் முடியாததா?’ என்று கேளிக்கையாய்ச் சொன்னான் வருணகுலத்தான்.
‘ஐயையோ.. வேண்டவே வேண்டாம். நான் விடைபெறுகிறேன் தளபதியாரே’ என்று கூறிச் சிரித்தபடியே வெளியேறினாள் மாருதவல்லி.
தான் ஆற்றுகிற காரியம் சரி தவறு என சிந்திக்கும் எல்லையைத் தாண்டி விட்டிருந்தான் வருணகுலத்தான். எப்படியாவது அரங்கேற்ற விழா உரிய நாளில் நிகழ ஏதாவது அதிசயம் தன்னால் நிகழ்த்த முடியுமா என்கிற சிந்தனையிலே அவன் இருந்தான்.