இதழ்-27

தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் கமலாம்பாள் சரித்திரத்தின் முக்கியத்துவம்

அறிமுகம்

உரைநடையில் எழுதப்படுகின்ற நீண்ட கதைகூறும் இலக்கியமாக நாவல் அமைகின்றது. வாழ்க்கையும், வாழ்க்கை பற்றிய நிகழ்வுகளும் உரைநடையில் எழுதப்படுமேயானால் அது நாவலாகும். ‘புதுமை’ என்ற பொருளைத் தரவல்லது நாவல் இச்சொல் ‘ழெஎநடய’ என்ற இத்தாலிய மொழிச்சொல்லில் இருந்து உருவாக்கப்பட்டது. இது மேற்குலகில் நிலமானிய சமுதாய அமைப்பின் சிதைவிற்குப் பின்னர் தோன்றிய முதலாளித்துவ சமுதாய அமைப்பின் தேவைகளுக்காக உருவாக்;கப்பட்ட இலக்கிய வடிவமாகும். பின்னர் ஐரோப்பியரின் கீழைத்தேய வருகையைத் தொடர்ந்து உரைநடையின் வளர்ச்சியாகத் தமிழிலும் நாவல் இலக்கியம் தோற்றம் பெற்றது.

தமிழ் நாவல் வரலாற்றில் ‘பிரதாபமுதலியார் சரித்திரம்’ வேதநாயகம் பிள்ளையால் முதலில் எழதப்பட்டது. ஆனாலும் நாவல் என்ற இலக்கிய வடிவத்திலும், திறனாய்வு அடிப்படையிலும் முதல் நாவல் என்ற தகுதியைப் பெற வேண்டியது ராஜமய்யரின் ‘கமலாம்பாள் சரித்திரம்;’ என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே இத்தகைய ‘கமலாம்பாள் சரித்திரம்’ எனும் நாவல் தமிழ் நாவல் வரலாற்றில் பெறும் முக்கியத்துவத்தினை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

நாவலாசிரியர் பி. ஆர். ராஜமய்யர்

இவர் வத்தல குண்டில் 1872 ஆம் ஆண்டு பிறந்தவர். இவரின் நாவலின் கதையும் மதுரை ஜில்லாவைப் பற்றியதுதான். இவ் நாவலின் அட்டைச்சித்திரத்திலும் அஸ்தமன சமயத்தில் வானத்தை எட்டும் மதுரைக் கோபுரம் காணப்படுகின்றது. இவருடைய நவீனம் ஒன்றுதான். அதுதான் ‘கமலாம்பாள் சரித்திரம்’ என்னும் நாவலாகும். இவர் விவேகானந்தர் மற்றும் பாரதியாரால் போற்றப்பட்டவர். விவேகானந்தர் சென்னையில் தொடங்கிய ‘பிரபுத்த பாரதா’ அல்லது ‘விழித்துக் கொண்ட இந்தியா’ எனும் ஆங்கிலப் பத்திரிகையின் முதல் ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கௌரவத்தினைப் பெற்றவர் பி. ஆர். ராஜமய்யர்.

இவருடைய காலத்தில் மத்தியதர வர்க்கத்தினர் ஆங்கிலம் கற்று அரசபதவிகளைப் பெறுவதில் ஆர்வம் காட்டினர். ராஜமய்யரும் சட்டம் பயின்று சட்டத்துறையில் முன்னேறுவதற்கே விரும்பினார். எனினும் சட்டப்பரீட்சையில் தவறிவிட்டார். இதனால் மனச்சோர்வடைந்து பின்னர் எழுத்துத் துறையில் ஆர்வம் காட்டினார். இதன் விளைவே ‘கமலாம்பாள் சரித்திரம்’ ஆகும்.

தொடர்கதையாக வெளிவந்த நாவல்

பி.ஆர். ராஜமய்யர் அவர்களால் ‘விவேகசிந்தாமணி’ என்ற மாத இதழில் 1893 ஆம் ஆண்டு தொடர்கதையாக எழுதத் தொடங்கினார். முதல் இரண்டு இதழ்களில் இப்புதினம் ‘அநியாய அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம்’ என்ற தலைப்பிலும், மூன்றாவது இதழில் இருந்து ‘ஆபத்துக்கிடமான அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம்’ என்னும் தலைப்பிலும் தொடர்ந்து 1895 வரை வெளிவந்தது. பின் 1896 ஆம் ஆண்டு இத்தொடர்கதை விவேகசிந்தாமணிப் பிரசுரத்தின் மூலம் தனி நூலாக வெளிவந்தது.

முன்மாதிரியாக அமைந்த நாவல்

‘கமலாம்பாள் சரித்திரம்’ இலக்கிய வடிவமும், நடையழகும், தீவிரமும் பாத்திரங்களின் அதீத மற்ற வண்ணங்களும் கூடிய முழுமையான நாவல். தமிழில் நாவல் இலக்கியத்தின் முன்மாதிரியாக அமைந்த இந்தநாவல் இத்தனை அழகோடும், தத்துவ வீச்சோடும் கச்சிதமான உருவ அமைப்போடும் அமைந்தமை சிறப்புக்குரியது. நாவல் என்ற இலக்கிய வடிவத்திலும், திறனாய்வு அடிப்படையிலும் தமிழின் முதல் நாவல் என்ற தகுதியைப் பெற வேண்டியது இந்நாவல் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நாவலின் நோக்கம்

ராஜமய்யர் பொய் என உலகத்தை நம்புவதால் தனது கதையையும் பொய்யாகவே காண்கிறார். இவரின் தத்துவம் அகவயமானதாகும். சமூகச்சிக்கல்களுக்குச் சிந்தனை அளவிலேயே தீர்வு காண முயல்கிறார். கடவுளைக் காணும் அகவாழ்வே இவருக்கு முக்கியமாகப்படுகின்றது. ‘இவ்வுலகில் உளன்று தவிக்கும் ஒரு அமைதியற்ற ஆத்மா, கடைசியாக நிர்மலமான ஒரு இன்பநிலை அடைந்ததை விபரிப்பதே இந்த நவீனத்தின் முக்கிய நோக்காகும்.’ என்று ராஜமய்யர் தன் சொந்த மொழிகளில் குறிப்பிடுகின்றார்.

நாவல் தரும் படிப்பினை

‘கடவுள் எல்லாவற்றிற்கும் அந்தம். எல்லாம் கடைசியில் அவனையே அடைகின்றன. என்ன நேர்ந்தாலும் அவைகள் எல்லாம் நமது நன்மைக்கே என்பதையும், நாம் அனுபவிக்கும் தண்டனைகள் கடைசியாக நமக்கு நன்மையாகவே முடியுமென்பதனையும் உணர்ந்து கொண்டு கர்மாவில் ஈடுபடுவது அவனை அடையும்படியான சுருக்கு வழி’ என்பதனை ராஜமய்யர் இந்நவீனத்தின் படிப்பினையாக உணர்த்துகிறார்.

ஆய்வு தொடரும்…

Related posts

சித்திராங்கதா – 27

Thumi2021

குறுக்கெழுத்துப்போட்டி – 24

Thumi2021

சிந்தனைக்கினிய கந்தபுராணம்

Thumi2021

Leave a Comment