விக்ரமாதித்தன் சரியான பதிலைக் கேட்ட வேதாளம் முன்போலவே கட்டவிழ்த்துக் கொண்டு முருங்கை மரத்தில் தொற்றிக் கொண்டது. விக்ரமாதித்தன் மறுபடியும் வேதாளத்தைப் பிடித்துக் கொண்டு வரும்போது அது பின்வரும் கதையைச் சொல்லியது.
உஜ்ஜயினி நகரத்தில் ஹரிஸ்வாமி என்ற அந்தண சிரேஷ்டர் ஒருவர் இருந்தார். அவர் புண்ணியசேனன் என்னும் அரசனை அண்டிப் பிழைத்து வந்தார். ஹரிஸ்வாமிக்கு ஒரு மனைவியும், தேவஸ்வாமி என்ற ஒரு மகனும், அழகில் ஈடு இணையற்ற சோமப்பிரபை என்ற மகள் ஒருத்தியும் இருந்தனர். அவளுக்கு கல்யாண வயது வந்தது. தன் அழகில் பெருமிதம் கொண்ட அவள் தன் தாயார் மூலமாக “வீரம், ஞானம், விஞ்ஞானம் மூன்றில் வல்லவனுக்கே என்னை மணம் செய்து கொடுக்க வேண்டும். என் வாழ்க்கையில் உங்களுக்கு அக்கறை இருந்தால் என்னை வேறு யாருக்கும் மணம் செய்து கொடுக்க கூடாது.” என்ற செய்தியை தன் தந்தைக்கு அறிவித்தாள்.
இதைக் கேட்ட ஹரிஸ்வாமிக்கு ஒரே கவலையாக போய் விட்டது. இம் மூன்று துறைகளிலும் பாண்டித்தியமான மாப்பிள்ளையை எப்படிக் கண்டுபிடிப்பது என்ற கவலை அவரை வாட்டியது. அவர் இவ்விதம் இருக்கும் சமயம் அவர் குமாரியின் அழகைப் பற்றி கேள்விப்பட்டிருந்த சூஸ்திரவான் என்கின்ற பிராமண இளைஞன் ஒருவன் ஹரிஸ்வாமியை அணுகி அவர் மகளை தனக்கு மணம் செய்து தர வேண்டும் என கேட்டான். உடனே அவர் அவ் இளைஞனை நோக்கி வீரம், ஞானம், விஞ்ஞானம் ஆகியவற்றை பூரணமாக அறிந்தவனையே என் மகள் மணந்து கொள்வாள் என்று கூறி அவ் இளைஞனை சோதிக்கும் நோக்கில் புதிர் ஒன்றை விடுத்தார்.
5 | 11 | 23 | ? | 95 | 191 |
இவ் வரிசையில் நான்காவது எண் என்னவாக இருக்க வேண்டும் என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? இவ் எண்கோல சிக்கலைத் தீர்த்த்தால் எனது குமாரியை மணம் முடித்து தருவது பற்றி சிந்திக்கிறேன் என்று ஹரிஸ்வாமி கூற பிரமண இளைஞனும் யோசிக்கத் தொடங்கினான்.
விக்ரமாதித்தனே நீர் கூட பலதும் கற்றுத் தேர்ந்த பண்டிதராயிற்றே இக்கோலத்தில் நான்காவது எண் என்னவாக இருக்கும் என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என்று கூறி முடித்துக் கொண்டது வேதாளம்.
துமி அன்பர்களே!
மறுபடியும் விக்ரமாதித்தனுக்கு உதவிட உங்கள் பதிலை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.