பிரித்தானியா! பல தேசங்களுக்கு சுதந்திரம் கொடுத்த தேசம்! கடல் வழி சென்று நிலங்களை தனதாக்கிய நாடு! இன்று பல நாடுகள் சுதந்திர தினம் கொண்டாட காரணமான நாடு! இவ்வாறு பல பெருமைகளை கொண்ட பிரித்தானிய தேசத்தில் இன்றுவரை தொடரும் இன்னொரு பெருமைதான் பிரித்தானிய அரச வம்சம்!

சனநாயகமென்கிற மக்களாட்சி உலகெங்கும் பரவினாலும் மன்னராட்சிக்கு உரிய உயரிய மரியாதையை காலகாலமாக பிரித்தானியா அரச வம்சம் பெற்றுக்கொண்டு வருகிறது. ஆனாலும் இங்கிலாந்தின் அரச குடும்பம் என்பது மக்கள் வரிப்பணத்தை வீணாகவும், போலி ஆடம்பரத்திற்கும் செலவு செய்யும் மிக மோசமான அமைப்பாக உள்ளதாகவும் பலர் கருதுகிறார்கள். சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த கருத்துக்கணிப்பில் சுமார் 20 சதவீதம் முதல் 40 சதவீத மக்கள் இந்த அரச குடும்பம் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என கருதுகிறார்கள்.
ஆனாலும் கடல் கடந்து கண்டம் கடந்து அரச வம்சத்தவர் மதிக்கப்படக் காரணமானவர்களில் முக்கியமானவர் தற்போதய மகாராணியார் எலிசபெத். அவருக்கும் இளவரசர் பிலிப்பிற்குமான 74 வருட ஆழமான காதல் பற்றி நான் அறிந்ததை சொல்கிறேன்.
நான்கு பிள்ளைகள், 8 பேரக்குழந்தைகள், 7 கொள்ளுப்பேரர்கள் என பெரும் வாழ்க்கை வாழ்ந்த இளவரசர் ஃபிலிப்பின், குழந்தை பருவம் மிகவும் கொந்தளிப்பானது, சோகங்கள் நிறைந்தது. சொல்லப் போனால்… மகாராணி எலிசபெத்தின் இளமைப் பருவம் எவ்வளவுக்கெவ்வளவு மகிழ்ச்சியுடன் செழிப்புள்ள ஒரு அமைதியான வாழ்க்கையாக இருந்ததோ… அதற்கு அப்படியே நேர்மாறான இளமைப் பருவ வாழ்க்கை வாழ்ந்திருந்தார் ஃபிலீப் .

இரண்டாம் கிரேக்க – துருக்கி இன போர் உக்கிரமடைந்து, 1922-ல் துருக்கி வெற்றியடைய கிரேக்க அரச குடும்பங்களை சார்ந்த ஒரு குடும்பம், அவசர அவசரமாக உயிர் தப்பிக்கும் நோக்கத்தில் தங்கள் குழந்தைகள் மற்றும் நான்கு சிறுமிகளுடன், கூடவே பழங்கள் வைக்கும் மரத்திலான ஒரு பழக்கூடையையும் எடுத்து கொண்டு அங்கிருந்து ஓடுகிறார்கள். அந்தப் பழக்கூடையில் இருந்தது ஒரு அழகிய ஆண்குழந்தை. துணியால் பத்திரமாக சுற்றப்பட்ட அந்தக் குழந்தை தான் இளவரசர் ஃப்லிப். அப்படி தப்பிய குழந்தை தான் பிற்காலத்தில் இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத்தை திருமணம் செய்து இங்கிலாந்தின் இளவரசராக இங்கிலாந்து நாட்டு மக்களின் மனதிலும் நெடுங்காலத்திற்கு கோலோச்சியவர்.

ஜூன் 10, 1921-ல் கிரேக்கம் மற்றும் டென்மார்க்கின் இளவரசர் ஆண்ட்ரூவுக்கும் – பேட்டன் பெர்க்கின் இளவரசி அலைஸுக்கும் பிறந்த ஃபிலிப்பின் சிறு பிராயம் உண்மையில் மிக கொடுமையாக இருந்தது. தாய் அலைஸ் “ஐரோப்பாவின் மூதாட்டி” என்றழைக்கப்படும் மகாராணி விக்டோரியாவின் கொள்ளுப்பேத்தி மற்றும் லூயிஸ் மவுண்ட்பேட்டனின் மூத்த மகள் ஆவார். தந்தை வழியோ, ஐரோப்பாவின் Father-in-Law என்றழைக்கப்பட்ட டென்மார்க் மன்னர் கிறிஸ்டியன்IX. கிரேக்க துருக்கி இன போரில் தப்பியோடி அங்குமிங்கும் அலைந்ததில், ஃபிலிப்பின் தாயார் அலைஸுக்கு மனநிலை தவறி விட்டது. ஒரு நாள் காலையில், ஃபிலிப் மற்றும் அவரது சகோதரிகளை உறவினர் ஒருவர் வீட்டிற்கு வெளியே அழைத்துச் சென்றார். மாலையில் குழந்தைகள் திரும்பி வந்தபோது, அவரது தாயார் அங்கில்லை. கடுமையான மனப்பிறழ்வு (schizophrenia.) தாக்கத்தில் இருந்த அலைஸ், குழந்தைகளுக்கு தெரியாமல் ஸ்விட்சர்லாந்தில் இருந்த மனநல காப்பகத்தில் கொண்டு போய் சேர்க்கப்பட்டார்.
சிறிது காலத்தில், ஃபிலிப்பின் மூத்த சகோதரிகள் நால்வருக்கும் ஜெர்மன் அரச குடும்பத்து இளவரசர்களுடன் திருமணம் முடித்து செல்ல… தந்தையோ, தாய் இல்லாததால் வேறொரு பெண்ணுடன் வாழ்வதற்கு ஓடிவிட… 10 வயதான ஃபிலிப், அனாதையாக நின்றார். பின்பு அவரது மாமா லூயிஸ், அவரது வாழ்க்கைக்கு பொறுப்பேற்று கொண்டது உண்மையில் ஃபிலிப்பின் அதிர்ஷ்டமே… அவர்தான்.. நாடு, பணம், இருப்பிடம் எதுவுமே இல்லாத ஃபிலிப்பிற்கு இங்கிலாந்தின் இளவரசனாக மாற பாதை அமைத்துக் கொடுத்தவர். 13 வயது எலிசபெத்தை ஃபிலிப்பிற்கு அறிமுகமாக வாய்ப்பமைத்து கொடுத்து, அவர்களின் நட்பு வளர்ந்து திருமணத்தில் முடிய காரணகர்த்தாவாகவும் இருந்தவர்.

ஏற்கனவே ஒருவரை ஒருவர் சந்தித்திருந்தாலும், 1939ஆம் ஆண்டு டார்ட்மெளத் கடற்படை பயிற்சிக் கல்லூரியில்தாதான் அவர்கள் தங்கள் காதலுக்கான பிள்ளையார் சுழியை போட்டுக் கொண்டார்கள். வசீகரமிக்க 18 வயது படைப்பயிற்சி பெறுபவராக இளவரசர் ஃபிலிப், 13 வயதான இளவசரி எலிசபெத்தின் கண்களில் தென்பட்டார். பலரது காதலைப் போலவே இவர்களின் காதலும் கண்ணின் வழியே இணைந்தது. கண்கள் உருவாக்கிய உறவை கடிதங்கள் மாறி மாறி வளர்த்து விட்டன. ஒரு தடவை அழைப்பெடுத்து, பதிலளிக்கவில்லை என்றாலே பிரிவென்ற நிலைக்கு சென்றுவிடும் இந்தக் காலத்துக் காதலர்களுக்கு கடிதங்களின் வெகுமதியும், காத்திருப்பின் பெறுமதியும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம்! காதல் நிரம்பி வழியும் அந்த கடதாசிக்கான காத்திருப்பு என்பது மாதங்களைத் தாண்டிப் போனாலும் மனம் தினம் தினம் எதிர்பார்த்துக் காத்திருக்கும். அந்த காகித எழுத்துக்களை வாசிக்க ஆசை கொண்டு கண்ணீர் தாள் நனைக்கும். கண்ணீர் என்கிற பன்னீரால் குளிப்பாட்டப்பட்ட அந்த காகிதங்களின் பெறுமதி கடிதங்களால் காதலித்தவர்களுக்கே தெரிந்திருக்கும். இதற்கு நல்ல சாட்சியும் இவர்களே! எலிசபெத் தன் இளமைக்காலத்தில் பிலிப்பிற்கு எழுதிய கடிதமொன்று அண்மையில் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போயுள்ளது.
தொலைபேசி போலல்ல, கடிதங்கள் பெரும்பாலும் தாம் வளர்க்கும் காதலை கலியாணத்தில் சேர்த்து விடும். அந்த வகையில் நெடுநாள் காதலர்களான பிலிப் மற்றும் எலிசபெத்தும் கல்யாணத்திற்கு தயாரானார்கள். எலிசபெத்தின் 21ஆவது பிறந்தநாளில் அவர்களின் நிச்சயதார்த்தம் குறித்த அறிவிப்பு பொதுவெளியில் வெளியானது.
திருமணத்திற்கு முன் எலிசபெத்தின் தாய்க்கு இளவரசர் ஃபிலிப் கடிதம் ஒன்றை எழுதினார். அதில் “தான் காதலில் எந்த தடையுமின்றி முழுவதுமாக விழுந்துவிட்டேன்” என தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது. தனது தாய் அலைஸின் பழைய நகைகளை அழித்து, எல்லோரும் அசந்து போகும் விதத்தில் மிக அழகாக வடிவமைக்கப்பட்ட திருமண மோதிரத்தை ஆசையுடன் எலிசபெத்துக்கு அணிவித்து, தன் மனைவி ஆக்கிக் கொண்டார், ஃபிலிப்.

இரண்டாம் உலகப் போர் முடிந்து இரண்டே வருடங்கள்தான் ஆகியிருந்த நேரத்தில் 2,000 விருந்தினர்கள் முன்னிலையில் இந்த காதலர்கள் திருமணம் செய்து கொண்டனர். நாடு அப்போது போரின் தாக்கத்திலிருந்து மீண்டு வந்த தருணதாதில் இந்த திருமணம் ஒரு அரிதான கொண்டாட்டமாக நிகழ்ந்தது. “நமது கடினமான பாதையில் வண்ணங்களின் சாரல் இந்த திருமணம்” என சர்ச்சில் பிலிப் தெரிவித்திருந்தார்.
ஒருபுறம் இளவரசர் ஃபிலிப் கடற்படை அதிகாரியாக உயர் பதவிகளை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார். மறுபுறம் பிலிப் தம்பதிகள் பெற்றோராக வாழ்வியல் பதவிகளில் முன்னேறிக் கொண்டிருந்தனர். திருமணம் முடிந்த அடுத்த வருடம் அவர்களின் மூத்த மகன் சார்ல்ஸ் பிறந்தார். அடுத்ததாக மகள் ஏன் (Anne) பிறந்தார். இந்த இளம் அரச குடும்பம் மால்டாவில் வாழ்ந்து கொண்டிருந்தது. அது ஒரு சாதாரண வாழ்க்கை போலதான் இருந்தது. அந்த இளம் ஜோடி, ஒருவரின் துணையில் மற்றொருவர் எந்த கவலையுமின்றி அரண்மனை கடமைகளிலிருந்து தள்ளி ஒரு மகிழ்ச்சிகரமான காதலை முழுமையாக அனுபவிக்கக்கூடிய வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.

தென்றல்களுக்கு பழக்கப்பட்டவர்களுக்கு புயல்களை சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் வந்தது. இன்னொரு காதலால் இவர்கள் காதல் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது.
என்ன புயல்? யாருடைய காதல்? என்ன திருப்புமுனை?
அடுத்த இதழில் பார்க்கலாம்…