அமைதியான குளத்தில் கல்லெறிந்தது போல மனதின் ஒவ்வொரு இழையும் அலைகிறது. முடியும் தாழியுமாய் குறுக்காய் அலையும் நீரலை போல், இவள் மனமும் உணர்வுகளின் ஏற்ற இறக்கங்களில் இரு முனைவுகளுக்கும் ஊசலாடுகிறது.
//நதியினில் ஒரு இலை விழுகிறதே
அலைகளில் மிதந்தது தவழ்கிறதே
கரைசேருமா உன் கைசேருமா
எதிர்காலமே//

அடி மனதில் சலன அலைகள் பிறந்திருக்கிறது. அந்த அலையின் போக்கில் அலையும் இலையாய் இவள்.
நடுக்கடலில் சுனாமி அலைகள் உருவாகும் போது, கடலின் ஆழம் அதிகம் என்பதால் அலையின் வேகம் அதிகமாயிருக்கும். இதனால் அலைநீளம் கூடிய வீச்சம் குறைந்த அலைகள் உருவாகும். அதே அலை கரையை அண்மிக்கையில், கடலின் ஆழம் குறைய அலையின் வேகம் குறையும். இதனால் அலைநீளம் குறைந்து வீச்சம் அதிகரிக்க இராட்சத அலைகள் உருவாகும்.
“தினம் மோதும் கரை தோறும்
அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே”

அதே போல ஆழ்மனதில் அமைதியாக தோன்றிய சலன அலைகளும் மனக்கடலின் ஓரங்களை தொட கரையோடு மோதி மணல் மீது மேவி குழி தேடி ஓடி மீண்டும் வந்த வழி தாவும் கடலலையாக ஆர்ப்பரித்து தெறித்து, தொடர்ந்து கரையை நோக்கி வந்து கொண்டிருக்கும் சலன அலைகளுடன் தலையீடு செய்கிறது.
//உன் சுவாசங்கள் எனைத் தீண்டினால்
என் நாணங்கள் ஏன் தோற்குதோ
உன் வாசனை வரும் வேளையில்
என் யோசனை ஏன் மாறுதோ//
கரையை நோக்கி வரும் சலன அலைகளும் கரையில் தெறித்த சலன அலைகளும் ஒன்றை ஒன்று தலையீடு செய்வதால் மேற்பொருந்தலடைந்து ஆக்கல், அழித்தல் தலையீடுகள் தோன்ற, நின்ற சலன அலைகளையும் புதிய பண்புள்ள அடிப்பு அலைகளையும் உருவாக்கி இவளை முற்றாய் ஆட்கொள்கிறது. மனவெளி எங்கும் பல சலன மீடிறன்களிலும் அதிர்வு நடனம் தொடங்கிறது.
“மனமெங்கும் மாய ஊஞ்சல்
உனதன்பில் ஆட ஆட
மழை பொங்கும் தூய மேகம்
உயிர் உள்ளே சாரல் போட”

மனநல மருத்துவத்தில் Bipolar Affective disorder என்ற ஒரு நோய் இருக்கிறது. மனமெனும் ஊஞ்சல் உணர்வுகள் நிலையான ஓய்வு நிலையிலிருந்து, உணர்வுகள் கட்டற்ற உச்சங்களை தொடும் அதீத உணர்ச்சிக் கொப்பளிப்புக்கும், அத்தனை உணர்வுகளும் அடங்கி முடங்கிய நிலைக்கும் அலையும் நிலை. அதாவது நிலையான Euthymic எனும் நிலையிலிருந்து உணர்வுகளின் கொப்பளிப்பான Mania எனும் நிலைக்கும் உணர்வுகள் அடங்கிய Depression என்ற நிலைக்கும் மனம் ஊசலாடும் நிலை.
இப்பொழுது இவள் இது போன்ற நிலையில் தான் தவிக்கிறாள்.
“உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம்
தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம்
எந்தன் நூலாடை பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம்
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்
ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல
சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல
பனித்துளிதான் என்ன செய்யுமா மூங்கில் காட்டில் தீ விழும்பொழுது
மூங்கில் காடென்று ஆயினள் மாது”
இவளது மனக்குளத்தில் கல்லெறிந்தது யார்? ஏன் இத்தனை மனக்குழப்பம்?
காரணம், நேற்றிரவு அவன் அனுப்பிய கடிதம்! காதல் கடிதம்!

“ஒரு கடிதம் எழுதினேன் என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே நான் என்னை அனுப்பினேன்
காதலி என்னைக் காதலி”
என்று அவன் காதல் விண்ணப்பம் வைக்க, பெண் அகம் இப்பொழுது தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
//யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான்
இவன் அன்பானவன்//
இவளிடன் தன் எதிர்கால துணைவன் எப்படியிருக்க வேண்டுமென்ற எந்த எதிர்பார்ப்பும் பெரிதாக இல்லை. ஆனாலும் யாரோ ஒருவன் நமக்கென்று இருப்பவன் வருவான் தானே என்றிருப்பவள். திடீரென்று இவனது வருகை.
“காதல் எந்த நிமிடம் பிறக்கும்
கடவுள் மனதும் அறிவதில்லை”
இவன் தான் என்னவனா? இவனுக்கு என்ன பதில் சொல்வது? அத்தனை நாட்களாக பார்த்துப் பேசி அளாவியிருக்கிறார்கள். அவன் தான் தன்னவன் என்ற எண்ணம் இதுவரை இவளிடம் வந்ததில்லை. ஆனாலும் அவன் மேல் இவளுக்கு மதிப்பு இருக்கிறது. இப்பொழுது அவனோ,
//உன் காதலில் கரைகின்றவன்
உன் பார்வையில் உறைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்//
என்ற உறுதிமொழிகளோடு வந்து, உன்னுடன் வாழ வேண்டும்; என்னுடன் கூட வா! என்கிறான்
“நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாற கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காக தானே
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்”
அவன் கடிதத்தை எத்தனை முறை படித்தாளோ தெரியாது. அத்தனை முறையும் புதிதாக தெரிந்தது! எனக்கு காதல் கடிதமா? அந்த ஆனந்த திகைப்பு இன்னும் போகவில்லை. இன்ப அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை. ஆனால் அவன் உன் பதிலுக்காக காத்திருப்பேன் என்று முடித்திருக்கிறானே! என்ன பதில் சொல்வது?

//என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெய்யிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்//
தன் கண்ணை பார்த்தே தன்னை புரிந்து கொண்டு தன் தேவைகள் அத்தனையும் அவன் சேவையாய் செய்வான் என்று மனதில் எங்கோ நம்பிக்கை மணி ஒலிக்கிறது. ஆனாலும் குழப்பம்!
//எங்கே உன்னை கூட்டிச்செல்ல
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல
என் பெண்மையும் இளைப்பாறவே
உன் மார்பிலே இடம் போதுமே//
அவன் தன்னை கொண்டாட வந்தவனென்ற உணர்வு பரவ, அவன் என்ன வேண்டும் என்று நாளை கேட்கும் போது என்ன பதில் சொல்வது? ‘ உன் மார்பில் என் பெண்மை இளைப்பாற இடம் போதுமடா!’ என்ற பதிலும் அவளறியாமல் பிறக்கிறது.
இப்படியே அவனினால் ஆட்கொள்ளப்பட,
//ஏன் இன்று இடைவெளி குறைகிறதே
மெதுவாக இதயங்கள் இணைகிறதே
உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே//
இவன் எனக்கானவன் தான். இனி வரும் காலமெல்லாம் அவன் விரல் பிடித்து நடை பழக தயாரானாள்.
//எனக்காவே பிறந்தானிவன்
எனை காக்கவே வருவானிவன்
என் பெண்மையை வென்றான்
இவன் அன்பானவன்//

தன் பெண்மை அவனிடம் தோற்று அவன் தன்னை வென்று விட்டான் என்பதை நினைத்து நாணி, அவனை தன் காதலில் வாழ் நாள் நெடுகிலும் திழைந்திருக்கச் செய்ய தன் சம்மதத்தை இப்படிச் சொன்னாள்,
“ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்
என் பாதத்தில் பள்ளிக்கொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன்
என் ஆடைதாங்கிக் கொள்ள
என் கூந்தல் ஏந்திக் கொள்ள
உனக்கொரு வாய்ப்பல்லவா
நான் உண்ட மிச்ச பாலை
நீ உண்டு வாழ்ந்து வந்தால்
மோட்சங்கள் உனக்கல்லவா
வானம் வந்து வளைகிறதே
வணங்கிட வா”