இதழ்-28

சிங்ககிரித்தலைவன் – 27

சிங்ககிரியின் வாசலில்

அணி அணியாக காசியப்பனின் படைவீரர்கள் அந்தக் குன்றை நோக்கி சென்று கொண்டிருந்தனர்… அந்த அணியை முன்னே தலைமை தாங்கி மீகாரன் சென்று கொண்டிருந்தான். அவனது குதிரை கம்பீரமாக சென்று கொண்டிருந்தத

அவனுக்குப் பின்னே காசியப்பனின் யானை காசியப்பனையும், லீலாதேவியையும் சுமந்தபடி வந்து கொண்டிருந்தது! குன்றின் அடிவாரத்தை நெருங்கியதும் காசியப்பன் யானைப்பாகனுக்கு சைகை செய்து யானையைப் பணிய வைத்து லீலாதேவியையும் கீழே இறக்கி அருகில் அமைத்திருந்த கூடாரத்தில் சென்று ஓய்வெடுக்க சொன்னான். தூரத்தில் காட்டு விலங்குகளின் ஒலிகளும் பறவையினங்களின் புதிய ஓசைகளும் அந்தச் சூழலை வித்தியாசமான ஒரு உணர்வு நிலைக்கு கொண்டு சென்றிருந்தது!

வானம் கறுத்து மழை வருமா? இல்லையா..? என்ற ஐயத்தை அனைவர் மனதிலும் ஏற்படுத்தியது!

‘மீகாரா எத்துணை பிரமாண்டமாக உள்ளது இந்தக் குன்றம்… உச்சியில் சென்று பார்ப்பதற்கு ஆவலாக உள்ளேன் ஏறும் வீரர்கள் தயார் நிலையில் உள்ளார்களா?” குதிரையை மரமொன்றில் கட்டி விட்டு குன்றத்தை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மீகாரன், காசியப்பனின் குரலைக் கேட்டு தன்னிலை அடைந்தவனாக, “மைத்துணா… மலையேறும் ஆற்றல் பெற்ற வீரர்கள் பல தடவை முயன்றும் இவ்வழியால் மேலே ஏற இயலவில்லை… அதனால் குன்றத்தைச் சுற்ற ஆராய்வதற்கு நேற்றைய தினமே உத்தரவிட்டிருந்தேன்!” காசியப்பனின் முகமும் அந்த வானத்தைப் போல கறுத்து விட்டது!

தனது ஆவலும் ஆசையும் மீகாரனின் வாரத்தைகளால் நடைபெறாமல் போய் விடுமோ என்று தன் உள்ளே எண்ணி கவலை கொண்டு…

‘மீகாரா இது எனது கனவு… எந்த கீழ் குலத்தில் பிறந்த ஒருத்தியின் மகனை இந்தநாடு தன் மன்னனாக ஏற்காது என்று புறகு சொல்லி என் இலட்சியப் பயணத்தின் இடையே தடை போட்டார்களோ… அந்தக் கீழ் குலத்தில் பிறந்த தாயின் மகனை எல்லோரும் நிமிர்ந்து பார்க்க வேண்டும்… இனியொரு படையெடுப்போ… அன்னிய சக்தியோ நெருங்க முடியாத அரணை உருவாக்கவும் வேண்டும்… அதற்கு இந்தக் குன்றம் எனது ஆளுகை அரணாகவும் அரண்மனையாகவும் மாற வேண்டும்… “
காசியப்பன் மீகாரனின் தோள்களைப் பற்றி உணர்ச்சி மேலோங்க சொன்னான்…
மீகாரன் காசியப்பனின் கவலையை உணராமலும் இல்லை… ஆனால் அந்தக் குன்றைப் பற்றி அறிந்த விடயங்கள் ஆபத்தையும் துரதிஸ்டமான சம்பவங்கள் நடைபெறும் என்ற எண்ணத்தையும் மீகாரன் மனதில் விதைத்திருந்ததால், அந்தக் குன்றில் ஏறுவதற்கே அரை மனதோடு தான் அவன் ஏற்பாடுகளைச் செய்துமிருந்தான்…

“காசியப்பா… என்னை மன்னித்து விடு. உன் எதிர்காலம் சிறப்பாக அமைய நான் அதிகம் விரும்புகின்றேன். அதற்கு என் ஆயுளையும் தருவதற்குத் தயாராக உள்ளேன் … இந்தக் குன்றைப் பிளந்தேனும் அதைத் துகள்களாக்கி உன் காலடியில் சேர்ப்பேன்… இது சத்தியம்”
காசியப்பன் மீகாரனின் வார்த்தை களால் நம்பிக்கை வரப்பெற்றான். மீகாரனை மார்போடு அணைத்து அவன் முதுகில் தட்டிக் கொடுத்தான். தூரத்தில் இரண்டு வீரர்கள் ‘தளபதியாரே… தளபதியாரே”என்று கத்திக் கொண்டு ஓடி வந்த வேகத்தில் மூச்சு வாங்கி நின்றனர்.

‘வீரர்களே என்னாயிற்று? ஏன் இந்தப் பதற்றம்” என்றான் காசியப்பன்.

‘மன்னா… பாதையை சீராக்கிக் கொண்டிருந்த வீரர்கள் இருவர் புதைகுழி ஒன்றில் விழுந்து இறந்து போனார்கள்… திடீரென தோன்றிய அந்தப் புதை குழி திடீரென மறைந்து போனது… ஏனைய வீரர்கள் அச்சத்தில் உள்ளனர்”

காசியப்பன் மீகாரனை ஆச்சரியத்தோடு பார்த்தான்…

‘மீகாரா… இப்படியாக வாய்ப்பு ஏதும் உள்ளதா? இது ஆச்சரியமாக உள்ளதே… உடனே வா சென்று பார்ப்போம்… புதை குழிகள் எப்படி மறைந்து போகும்…? அது புதைகுழியா இல்லையேல் வேறேதுமா என்பதை அறிய ஆவலாக உள்ளேன் உடனே புறப்படுவோம்”

‘இல்லை நண்பா கூடாரத்தில் பெண்களும் உள்ளனர் நீ இங்கேயே தங்கியிரு. நான் சென்று வருகின்றேன்… ஏதும் தகவல் இருந்தால் உடனே சொல்லி அனுப்புகிறேன்.”

மீகாரன் சொன்னது சரியாகப் பட்டாலும் காசியப்பனுக்கு ஒரு வித ஆர்வம் உள்ளே மேலோங்கியே இருந்தது. ‘மீகாரா அவதானமாகச் சென்று வா….”
மீகாரனின் குதிரை புறப்பட்டது!

மீகாரனின் குதிரை சென்றதும் காசியப்பன் சில வீரர்களை அழைத்து இரகசியமாக ஏதோ சொல்லி அனுப்பி வைத்தான் …
அந்தக் குன்று காசியப்பனுக்கு இனம்புரியாத ஈர்ப்பைக் கொடுத்தது.

கூடாரத்தில் இருந்து வெளியே வந்த உன்னிச்ச காசியப்பனைக் கண்டு தலைகவிழ்ந்தபடி அப்பாலே செல்ல எத்தனிக்க காசியப்பன் கையசைத்து அவனை அழைத்தான்.

பழைய நினைவுகள் உன்னிச்சவை கலக்கமடைய வைத்தாலும் மனத்தைத் திடமாக்கிக் கொண்டு காசியப்பன் அருகில் சென்றான்.

‘பணிகிறேன் அரசே அறியாமல் நான் செய்த பிழைகளைப் பொறுத்து மன்னிக்க வேண்டும்!.”

நெடுஞ்சாண்கிடையாக விழுந்தவனை காசியப்பன் அணைத்து மேலே
தூக்கினான்

“உன்னிச்ச… கலங்காதே என் கற்பனையில் மட்டுமே கிடந்த ஒரு காவல் கோட்டையை இந்தக் குன்றத்தின் வடிவில் நான் கண்ட போது என் அருகில் இருந்தவன் நீ… உன்னில் எனக்கு கோவம் ஏதும் இல்லை… கவலையை விடு”

‘மன்னா இந்தச் சிங்கச்சிகரத்தை!”

‘ஆகா… சிங்கச்சிகரம்! சிங்கஹிரி! உன்னிச்ச இந்தப் பெயரை கேட்கும் போதே என்னுள் ஏற்படும் ஆனந்தத்தை அளவிட முடியவில்லை.”

காசியப்பனின் முகத்தில் ஏற்பட்ட ஆனந்த பிரவாகத்தை உன்னிச்ச ஆச்சரியமாக பார்த்தபடி நின்றான்.
அந்த ஆனந்தம் எவ்வளவு நேரம் நிலைக்கப்போகிறதோ?

ஆனந்தம் தொடரும்…

Related posts

அட கலக்குது பார் இவ ஸ்டைலு!…

Thumi2021

வழுக்கியாறு – 21

Thumi2021

சித்திராங்கதா – 28

Thumi2021

Leave a Comment