இரகசிய காரணம்
தன் உயிரின் மிச்சமும், கற்பின் கண்ணியமும் வருணகுலத்தானது வீரத்தயவால் வாய்த்தது என்கிற நன்றியுணர்வால் மிகுந்திருந்த மாருதவல்லி வருணகுலத்தானுக்காய் அவ்வுபகாரத்தை தான் செய்தே ஆகவேண்டும் எனத் துணிந்தாள். எப்படியாவது சித்திரை முழுநிலவு நாளிலே சித்திராங்கதாவின் அரங்கேற்ற விழாவை நிகழ்த்திவிட ஆவன செய்ய வேண்டும் என மந்திரியார் வரும் வரை மந்திரிமனை வாசலிலே காத்திருந்தாள்.
அரசருடனான சந்திப்பை முடித்து வந்த மந்திரி ஏகாம்பரனார் வாசலில் காத்துக்கொண்டிருந்த மகளைக் கண்டதும் முதலில் உள்ளம் குளிர்ந்தார். மிக்கபிள்ளை கடத்திச்சென்று மீட்டுவந்த நாளில் இருந்து அவள் அமைதிப் போக்காகவே இருந்தாள். யாருடனும் பேசுவதில் நாட்டம் இல்லாதவளாய் தனிமையிலே பெரும்பாலும் கழித்தாள்.
வாசல் வரை வந்து தன்னை கலகலப்பாய் வரவேற்கும் தன் மகளினை மந்திரியார் இத்தனை நாளும் வெகுவாக இழந்திருந்தார் என்பதே உண்மையாகும். அந்த வேதனை அவருக்குள்ளே இருந்தாலும் அத்துயர சம்பவத்திலிருந்து அவளாய் மீண்டுவர அவளிற்கான போதிய காலத்தை- தனிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். ஆனால் நெடுநாட்களிற்குப் பின் இன்று மீண்டும் வாசல் வரை வந்து தனக்காய் காத்துநிற்கும் மகளைக் கண்டதும் உள்ளத்தில் பாயந்த இன்ப அருவியின் தெறிப்பு அவர் கண்களையும் நனைக்கச் செய்தது.
மீண்டு வந்த மகளிடம் இனி அந்தக் கரியசம்பவம் குறித்து எதுவும் பேசக்கூடாது என்ற உறுதியுடனே தொடர்ந்தார்.
‘ஏன மகளே? எதற்காக இத்தனை நேரம் காத்திருக்கிறாய்? நான் வர தாமதமாகும் என தெரிந்தால் உறங்கியிருக்கலாமல்லவா?’
‘ஒரு சில நாட்களிலே பழக்கத்தை மறந்துவிட்டேன் என நினைத்துவிட்டீர்களா தந்தையே’
‘அப்படியில்லை மகளே, எனக்கு காரியங்கள் இப்போது அதிகம் இருக்கின்றன. அதற்காக நீயும் ஏன் வீணாய் விழித்திருக்க வேண்டும் என்று கேட்டேன்?’
‘நானும் அரச குலப்பெண் தானே அப்பா, எனக்கும் அந்தக் கவலையும் பொறுப்பும் இருக்கக்கூடாதா? ஒருவேளை காணாமல் போனால் மட்டுந்தான் அரச குல மகளிரை காணவில்லை என்பார்களோ! மற்றபடி எனக்கு அரசில் எந்தக் கவலையும் இருக்கக் கூடாது. அப்படித்தானே’
‘யார் கூறியது மகளே, நீ எப்போதும் அரச குல மகளேயாவாய். அதில் வீணாய் சந்தேகம் எதற்கு?
‘அப்படியாயின் நான் ஒன்று கேட்டால் மறுக்க மாட்டீர்களா?’
‘என் மகள் கேட்டதை நான் எப்போது மறுத்திருக்கிறேன் தாயே, அப்படியொரு துர்பாக்கிய நிலை எனக்கு எப்போதும் வந்துவிடக்கூடாது. நீ கூறம்மா’
‘பயங்கொள்ள வேண்டாம் தந்தையே, நான் இப்போது- இதற்கு பிறகும் கூட- நான் மகாராணியாகவேண்டும் என்று கேட்க மாட்டேன்’ என்று கூறிக் கலகலவெனச் சிரித்தாள்.
அந்தச்சிரிப்பு எத்தனை நாட்களிற்குப் பிறகு மந்திரியாரின் செவிகளை நனைக்கின்றன தெரியுமா? இந்நேரம் தன் உயிரைக் கேட்டால் கூட மந்திரியார் கொடுத்து விடுவார். அத்தனை ஆனந்தம் அவருக்கு.
‘என்ன வேண்டும் கேள் தாயே’
‘அப்பா, எனக்காய் நான் எதுவும் கேட்கப்போவதில்லை. ஆனால் எனக்குத் தெரியும். தங்களைப் பொறுத்தவரை முக்கியமான ஒன்றைத்தான் கேட்கப் போகிறேன். இன்று அரண்மனைச் சேவகி ஒருத்தி என்னிடம் இந்த விடயத்தைக் கூறியதும் நான் துடித்துப்போனேன். வேதனைக் கடலில் மூழ்கியே கிடந்த எனக்கு அவள் கூறிய செய்தியின் வலியை நன்றாகவே உணரமுடிந்தது. நாட்களை எண்ணி எண்ணிக் காத்திருந்த ஆடலரசி சித்திராங்கதாவின் அரங்கேற்றம் தடைப்பட்டுவிட்டதாமே. அவள் அன்னை வீரமாகாளியின் சந்நிதானத்தை விட்டு விலகாமல் நேற்றைய பொழுது முழுவதும் அன்னையின் பாதங்களில் அழுது தீர்த்துவிட்டாளாம். அவளால் வேறு என்னதான் செய்யமுடியும்? ஆடற்கலையை தன் உயிரினும் மேலாக கருதுபவளிற்கு இப்படியொரு நிலையை ஏன் ஏற்படுத்தினீர்கள் அப்பா? ‘
‘மகளே, இது திட்டமிட்டுச் செய்த செயலன்று தாயே, அவசரமாய் வன்னியர் விழாவை நடாத்தியாக வேண்டும் என்பதாலே அப்படியொரு முடிவு எடுக்க நேர்ந்து விட்டது. சித்திராங்கதாவின் நடன அரங்கேற்றம் இன்னொரு நாளில் நிகழ்த்துவது கூட சாத்தியமாகும் தானே மகளே’
‘சாத்தியமானாலும் நாள் குறித்து வாக்குக் கொடுத்தது அரசர் தானே அப்பா, அரசரின் வார்த்தைகள் மீதுகொண்ட நம்பிக்கையில்த் தானே அவள் காத்திருந்தாள். இப்போது அரசரே மறுத்தால் அரசரின் மீது நம்பிக்கை வைப்பதே அர்த்தமல்ல என்றல்லவா யோசிப்பாள். கொடுத்த வாக்கில் அரசரின் கடமையும் இருக்கிறது தானே அப்பா’
‘எல்லாம் உண்மைதான் மகளே, ஆனால் ஆட்சியில் எடுக்கப்படும் சில முடிவுகள் பலநேரங்களில் பலபேரைக் காயப்படுத்தலாம். ஆனால் அரசர் இராச்சியத்தின் நன்மை கருதியே கருமமாற்றுவார். இதில் பாதிக்கப்படும் ஒரு சிலரை கவனத்தில் கொண்டு நின்றால் இராச்சியத்தை காப்பதில் தேவையற்ற சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம் மகளே, இப்போதிருக்கும் இடரும் அத்தகையதே. வன்னியர் விழாவை நடாத்தியாக வேண்டும் என்பதே இப்போதைய இக்கட்டு நிலை மகளே’
‘அவ்வளவு அவசரமாக நடத்தியாக வேண்டுமென்றால் நாளைக்கே நடத்தலாமே, அல்லது நாளை மறுநாள் நடத்தலாமே, எதற்காக அச்சித்திரை முழுநிலவு நாளிலே நடாத்தியாக வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்கிறீர்கள்?’
‘பிடிவாதம் பிடிக்கவில்லை மகளே, அன்றைய தினத்திலே நடாத்தியாக வேண்டும். அதற்குக் காரணங்கள் வேறும் இருக்கின்றன. ஆனால் மன்னித்து விடு மகளே, அரச இரகசியங்களை என்னால் இப்போது கூற முடியாது. தந்தையின் செயலின் அர்த்தங்களை நீ பின்னர் புரிந்து கொள்வாய். இப்போது இது குறித்து நீ அதிகம் கவலை கொள்ள வேண்டாம் மகளே’
‘ஒருவேளை சித்திராங்கதாவின் இடத்தில் நான் இருந்திருந்தாலும் நீங்கள் இந்த முடிவைத்தான் எடுத்திருப்பீர்களா அப்பா?’
‘யார் இருந்தாலும் இந்த சமயத்தில் இதுதானம்மா வழி, சித்திராங்கதா மீது மட்டும் எனக்கென்ன விரோதமா இருக்கிறது. யாராக இருந்தாலும் இராச்சியத்தின் நன்மை கருதி மட்டுந் தானம்மா என்னால் சிந்திக்க முடியும். அதைத்தவிர இந்த யாழ்ப்பாண இராச்சிய ஊழியன் வேறொன்றும் அறியேன் தாயே’
என்று தன் மகளினை அன்பு மிகுந்த கண்களால் நோக்கியபடியே கூறினார் ராஜமந்திரியார்.
மந்திரியாரின் கூற்றுப்படி எக்காரணம் கொண்டும் தந்தை வன்னியர் விழா நாளை மாற்றியமைக்க வாய்ப்பில்லை என மாருதவல்லி உணரந்து கொண்டாள். அதற்காக தந்தை மேல் கோபங் கொள்ளும் நிலையிலும் அவள் இருக்கவில்லை. ஓடி வந்து தந்தையின் தோள்களில் சாய்ந்து கொண்டாள். இருவர் கண்களும் குளமாகின.
ஏகாம்பரனார் சொன்னது போல சித்திரை முழுநிலவு நாளில் சித்திராங்கதாவின் அரங்கேற்றத்தை நிறுத்தி வன்னியர் விழாவை நடாத்துவதற்கு இன்னொரு பிரதான காரணமும் இருக்கிறது. அது என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமாயின் நாம் வன்னிப்பக்கம் சென்றாக வேண்டும்.
முதன் முதலாய் வருணகுலத்தானிற்கு சித்திராங்கதா இல்லத்தினை வழிகாட்டிய உக்கிரசேனன் இப்போது வன்னி நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறான். வாருங்கள். அவன் உதவியுடனே நாமும் அங்கு செல்லுவோம்.
இரகசியங்கள் அறிவோம்…