இதழ்-28

ஈழச்சூழலியல் 15

மண்ணின் தன்மை அறியாது செய்த விவசாயம் புண்ணின் தன்மை அறியாது செய்த சிகிச்சைக்கு சமம், என்பார்கள். இந்த வழக்கு மொழிக்கு ஏற்ப விவசாய அணுகுமுறை இருப்பது காலத்தின் கட்டாயம்.

மண்ணில் வேதியியல் உரங்களின் அதிகம் பயன்படுத்துவதினாலே மண் மலடாகிறது. பரிந்துரைத்த அளவை விட கூடுதலான உரங்கள், தேவையற்ற நேரத்தில் உரமிடுதலால் ஒரு சதுர அடி மண்ணில் இருக்க வேண்டிய 5 லட்சம் கோடி நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் அதன் வாழ்வாதாரம், ஸ்திரத்தன்மையை இழக்கிறது. மண்ணின் முக்கியத்துவமானது இன்று பல வழிகளில் எடுத்துக் காட்டப்படுகின்றது. ஓர் உயிர் வாழ்வதற்கும் அதன் அன்றாட செயற்பாட்டிற்கும் பயிர்வளர்ச்சிக்கும் ஆதாரமாக விளங்குகின்றது.

அதுபோல் சூழல் சுற்றுவட்ட செயற்பாட்டிலும் மண் ஒரு பகுதியாக இருக்கின்றது. இதனால் மண் தாவரங்களின் ஊடகமாகவும், விலங்குகளின் வீடாகவும் போசாக்கான மீழ் சுழற்சி ஒழுங்குத் தொழிற்பாடுகளுக்கு உதவியாகவும், பொறியியல் ஊடகமாகவும் தொழிற்படுகின்றது. மண் உருவாக்கமானது வானிலை யாலழிதல், பக்கப்பார்வை விருத்தி ஆகிய செயன்முறைகளின் மூலம் விருத்தி செய்யப்படுகின்றது. மண் உருவாக்கத்தில் தாய்ப்பாறை, காலம், காலநிலை, தரைத்தோற்றம், உயிரியல் நடவடிக்கைகள் என்பன முக்கியத்துவம் பெற்றனவாக உள்ளன.

இவ்வாறாக முக்கியத்துவம் வாய்ந்த மண்ணியல் ஆய்பரப்பில் உயிர்ப்பல்வகைமையினுடைய வகிபாகம் முக்கியமானதாகும்.நமது உயிர்ச்சூழலில் அல்கா வகை நுண்ணங்கிகளிலிருந்து செடி, மரஇனங்கள் உட்பட மூன்றரை இலட்சம் தாவரங்கள் உள்ளன. புரொட்டோசோவா எனும் ஒரு செல்(கலம்), உயிரினம் முதல் மனிதன் வரையிலான 68 300 விலங்கினங்கள் உள்ளன. இவற்றில் 60000 பூச்சியினங்களும், 1600 வகை மீன்கள் 372 பாலூட்டிகள் அடங்குகின்றன. இவற்றுள் வீட்டுவளர்ப்பு விலங்குகளான எருமை, ஆடு, மாடு, செம்மறி, பன்றி, கோழி, குதிரை, ஒட்டகம் முதலானவையும் அடங்கும். இவை எதுவும் தனித்து உயிர்வாழ முடியாதவையாகும். சூழலில் இவை அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்தே வாழ்கின்றன. தாவர உண்ணிகள், விலங்குண்ணிகள், அனைத்துமுண்ணிகள் ஆகியன அனைத்துமே தாவரங்கள் சேமித்த உணவு ஆற்றலில் தங்கியுள்ளன.

ஒரு பகுதியாகவுள்ள நிலம், கடல் மற்றும் ஏனைய நீர்சார் சூழலியல் முறைமைகள் மற்றும் வாழ்சூழலியற் தொகுதிகள் உட்பட்ட எல்லா இடங்களையும் சார்ந்த உயிரினங்கள் மத்தியிலான பல்வகைமை உயிரியற் பல்வகைமை எனப்படுகின்றது. இது உயிர்வகைகளுக்குள்ளும், அவற்றுக்கு இடையிலும், சூழலியல் முறைமை சார்ந்தும் உள்ள பல்வகைமைகளை உள்ளடக்கின்றது. (ஐக்கியநாடுகள் சபை புவி உச்சிமாநாடு – 1992 -றியோடி ஜெனீரா)

உயிரினப் பல்வகைமை அருகிச்செல்வதற்குரிய காரணிகள்

காடுகளை அழித்தல்

உலகின் உயிர்பல்வகைமையை அதிகளவில் கொண்டுள்ள பிரதேசங்களாக காடுகளே காணப்படுகின்றன. உலகின் அயன மழைக்காடுககள் பெருமளவில் உயிரினப் பலவகைமையைக் கொண்ட பகுதியாகும். இத்தகைய பகுதிகள் அழிவுக்குள்ளாக்குகின்றபோது அங்கு வாழ்கின்ற மிருகங்கள் பறவைகள் உணவின்றியும் தங்குமிடமின்றியும் அழிவடைந்தோ அல்லது வேறு இடங்களுக்கு நகர்ந்தோ செல்லவேண்டி ஏற்படும்.

முருகைக்கற்பாறைகளை அழித்தல்

சமுத்திரப் பகுதிகளில் அதிகளவு உயிரினங்களைக் கொண்டிருக்கின்றமையால் முருகைக் கற்பாறைகளை சமுத்திரத்தின் அயன மழைக்காடுகள் என அழைக்கப்படுகின்றன.

உலகிலுள்ள மீன் இனங்களில் 25மூ உயிர்வாழ்க்கைக்கு இச்சூழல் தொகுதியே உதவுகிறது. முருகைக்கற்பாறைப் பகுதிகளில் இவ்வாறு வாழ்கின்ற உயிரினங்கள் முருகைக் கற்பாறைகள் அழிவடைகின்றபோது தாமும் அழிந்துபோவதுடன், சில இடம்பெயர்ந்தும் செல்கின்றன.

ஈரநிலங்களை மீளப்பெறல்

ஈரநிலப்பகுதிகள் மீனினங்கள் முதலியவற்றின் வாழ்விடங்களாகவும், இனவிருத்திக்கு ஏற்ற இடங்களாகவும் விளங்குகின்றன. குடியிருப்புக்களை அமைத்தல் மற்றும் நகர விரிவாக்ககங்கள் என்பவ ற்றிற்காகவும், திண்மக்கழிவுகளை கொட்டுவதனாலும் ஈரநிலங்கள் மீளப்பெறப்படுகின்றன. இதனால் ஈரநிலங்களில் வாழும் உயிரினங்கள் அழிவடைய ஏதுவாயமைகின்றது.

இரசாயண உள்ளீடுகளின் பாவனை அதிகரிப்பு

அதிகரித்து வருகின்ற சனத் தொகைக்கு ஏற்ப உணவுற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் பசுமைப் புரட்சி போன்ற விவசாயத்தில் உற்பத்தியைப் பெருக்குவதற்காக ஏற்பட்ட புரட்சிகளின் பயனாக அதிகளவான இரசாயண உள்ளீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக இரசாயண உரங்கள், கிருமிநாசினிகள், களைநாசினிகள் என்பன இத்தகைய இரசாண உள்ளீடுகளாகும். இவ்வாறு இரசாயண உள்ளீடுகளை நிலத்தில் பயன்படுத்துகின்றபோது அவை மண்ணிலுள்ள நுண்ணங்கிகளின் செயற்பாடுகளை பாதிப்படையச் செய்கின்றன. இதனால் விவசாய நிலப்பரப்பில் காணப்படுகின்ற நுண்ணங்கிகள் அழிவடைகின்றன.

நெருப்பு வைத்தல்

பெயர்ச்சிப் பயிர்ச்செய்கை மற்றும் விலங்குகளை இலகுவாக பிடிப்பதற்கும் காடுகளுக்கு தீ வைக்கப்படுகின்றன. பெயர்ச்சிப் பயிர்ச்செய்கைக்காக தெரிவு செய்யப்படுகின்ற காட்டுப் பகுதிகள் தீவைத்து எரிக்கப்படுகின்றபோது அப்பகுதியில் வாழ்கின்ற பல்வேறு உயிரினங்கள் அழிவடைகின்றன. அத்துடன் இத்தீவைத்தல் செயற்பாடானது அருகிலுள்ள ஏனைய பகுதிகளுக்கும் பரவி அங்குள்ள உயிரினங்களின் அழிவிற்கும் வழிவகுக்கின்றது. ஆபிரிக்கா போன்ற நாடுகளில் மிருகங்களைப் பிடிப்பதற்காக ஏற்படுத்தப்படும் தீவளையங்களினாலும்
பெருமளவில் உயிர்ப்பல்வகைமை பாதிக்கப்படுகின்றது.

வேட்டையாடுதல்

சட்டவிரோதமாக விருத்தியடைந்து வருகின்ற சில நாடுகளில் காட்டு விலங்குகள் வேட்டையாட ப்படுவதுடன் வர்த்தக நோக்கத்தில் வனவிலங்குகளைச் சிறைப்பிடி த்தலாலும் உயிர்பல்வகைமை பாதிப்படைகின்றது. இந்நாடுகளில் பல விலங்குகளின் தோல், யானைகளின் தந்தம் என்பன சட்டவிரோத முறையில் பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இயற்கை அனர்த்தங்கள்

எரிமலை, வரட்சி, வெள்ளம், சூறாவளி, காட்டுத்தீ போன்வற்றாலும் உயிர்பல்வகைமை பாதிப்படைகின்றன. எரிமலை வெடிப்பு ஏற்படுகின்றபோது எரிமலைக் குழம்பு அயலிலுள்ள பிரதேசத்திற்கு பரவிச் செல்கின்றபோது உயிரிகள் அழிவடைய ஏதுவாகின்றது. அதேபோன்று வரட்சியின்போது நீர்த்தட்டுப்பாடு போன்றவற்றினாலும் அதிகளவில் விலங்குகள் அழிவடைகின்றன.
உதாரணம்
எரிமலை-கொலம்பியா,
வரட்சி- இலங்கை, இந்தியா,
வெள்ளப்பெருக்கு- இந்தியா, பங்களாதேஸ்

ஆற்றுவடிநில அபிவிருத்தித் திட்டங்கள்

ஆற்று வடிநிலங்களை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்திட்டங்களின்
மூலமும் உயிர்பல்வகைமை பாதிப்படைகின்றது. குறிப்பாக இத்தயை நிலைமை வளர்முக நாடுகளில் அதிகளவில் காணலாம். இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மகாவலி, கல்லோயா, உடவளவை நீர்த்தேக்கங்கள் நைஜீரியாவில் மேற்கொள்ளப்பட்ட நைகர் நதித் திட்டம், சம்பியாவில் மேற்கொள்ளப்பட்ட சாம்பசி திட்டம் என்பவற்றைக் குறிப்பிடலாம்.

பூகோள வெப்பநிலை அதிகரிப்பு

காலநிலை மாற்றமும் பூகோள வெப்பமயமாதலும் உயிரின பலவகைமை இழப்பில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. வெப்பநிலை தொடர்ச்சியாக அதிகரிக்கின்றபோது அதன் தீவிரத்தை தாங்கமுடியாத விலங்கினங்கள் உயரிழக்கின்றன. குறிப்பாக டைனோசர் முதலிய உயிரினங்கள் அழிவடைந்தன என்று கூறப்படுகின்றது.

ஆராய்வோம்.

Related posts

தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் கமலாம்பாள் சரித்திரத்தின் முக்கியத்துவம் – 02

Thumi2021

எங்கிருந்து வந்தான் இந்த இடையன்?

Thumi2021

மருத்துவம் போற்றுதும்

Thumi2021

Leave a Comment