சவால்களும், நீண்ட கால நிலைப்படுத்துகையும்
வழுக்கியாற்றுப்படுக்கையானது 1995 உள்நாட்டுப்போரின் பிற்பாடு அழிவுக்கான பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி உள்ளமை கவலைக்குரிய விடயமாகும். 1995 ம் ஆண்டளவில் உள்நாட்டுப் போர் காரணமாக இடம்பெற்ற யாழ்ப்பாண இடப்பெயர்வைத் தொடர்ந்து மக்களின் வாழ்வியலானது உடல், உள, சமூகரீதியிலாக பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளானதாக கொள்ள முடிகின்றது. மக்களிடையே கூட்டுறவுத்தன்மை குறைந்தமையினால் குளங்கள் கால்வாய்களை துப்பரவு செய்வதில் மக்களின் பங்களிப்பு குறைவடைந்து அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மக்கள் மத்தியில் சுயநல எண்ணம் அதிகரித்து பொதுநல எண்ணம் குறைவடைந்தமையினால் அவர்கள் குளங்கள், கால்வாய்களில் குப்பைகள், கழிவுகளை கொட்டுவதுடன் கால்வாய்களையும் குளங்களையும் பயிர்ச்செய்கைக்காக ஆக்கிரமிப்புச் செய்கின்றனர். 1995 இற்கு பிற்பட்ட காலத்தில் ஏறக்குறைய 10 உப கால்வாய்கள் பகுதியளவிலோ அல்லது முழுமையாகவோ சில விவசாயிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப் படுகின்றன. இதனால் நீரோட்ட வடிகாலமைப்பு தடைப்பட்டு குடியிருப்புப்பகுதிகளில் வெள்ள அனர்த்தம் ஏற்பட வாய்ப்பேற்படுகின்றது. நச்சுத்தன்மையான கழிவுகள் நீரிலும் மண்ணிலும் கலக்கப்படுவதனால் இவை உணவுச்சங்கிலியில் திரட்சியடைந்து தொற்றும், தொற்றா நேய்களை உயிரங்கிகளில் ஏற்படுத்துகின்றன. அத்துடன் இயற்கை அழகையும் கெடச்செய்கின்றன.
மக்கள் பயிர்செய் தாழ் நிலங்களை நிரவி வீடுகளை நிர்மானிப்பதால் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதுடன் பயிர்செய் பரப்பும் குறைவடைகின்றது. 50 தொடக்கம் 100 குடும்பம் வரையில் ஆண்டு ஒன்றுக்கு வெள்ள அனர்த்தால் பாதிக்கப்படுகின்றனர். ஆனாலும் அவர்களின் வாழ்வாதாரமானது இவ்வடிநிலப்பகுதியை சார்ந்து காணப்படுவதனால் அவர்கள் வேறிடங்களுக்கு குடிபெயர முடியாதுள்ளது.
முன்னைய காலங்களில் இருந்த கிணறுகளைவிட இன்று கிணறுகளின் எண்ணிக்கையானது வெகுவாக அதிகரித்து காணப்படுகின்றது. பங்குக்கிணறு என்பது 3 தொடக்கம் 5 குடும்பங்கள் பாவனைக்கான கிணறு ஆகும். இக்கிணறுகளே ஆரம்ப காலம் தொட்டு பாவனையில் இருந்த போதும் இன்று மக்கள் தமது சுயதேவையின் பொருட்டு வீட்டுக்கு ஒன்று அல்லது இரண்டு என்ற ரீதியில் கிணறுகளை அமைத்துள்ளனர் அத்துடன் ஆழ் துளை குழாய்க்கிணறுகளின் எண்ணிக்கையும் வெகுவாக இப்பிரதேசத்தில் அதிகரித்தே காணப்படுகின்றது. 36 அடிகளுக்கு மேல் ஆழ்துளை இடுவது யாழ்ப்பாண புவியியல் அமைப்பிற்கு பொருத்தமற்றதாவதுடன் நிலத்தடிநீரையும் மாசாக்கும் என பல்வேறு ஆராச்சி முடிவுகளில் வெளிபபட்டிருந்தாலும் மக்கள் 40 அடிகளுக்கு மேலே தோண்டுவதை அவதானிக்க முடிகின்றது.
இன்றைய காலங்களில் மக்கள் தமது வீட்டு முற்றங்களை கொங்கிரீட் தடடுகளை கெண்டு மூடுவதனால் மழைநீர் மண்ணில் ஊடுபுகும் பரப்பளவு குறைந்து மேற்பரப்பால் வழிந்தோடும் நீரின் அளவை அதிகரிக்கின்றது. மக்கள் போக்குவரத்தை இலகுபடுத்த அமைக்கப்பட்டுள்ள கொங்கிரீட் வீதிகளும் தார் வீதிகளும் நீரின் மேற்பரப்பு ஓட்டத்தை மேலும் சாதகமாக்குகின்றன. இதனால் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதுடன் பெருமளவு மழை நீர் வீணாக கடலில் சேரும் அளவு அதிகரிக்கின்றது. இதனால் நிலத்தடி நீரின் மீள்நிரம்பலானது குறைவடைகின்றது. ஆனால் ஆழ்துளை கிணறுகளில் இருந்து தொடர்ச்சியாக பொறுப்பற்ற விதத்தில் பாய்ச்சப்படும் நீரானது கட்டாயமாக நிலத்தடி நீர் வளத்தை குன்றச்செய்யும் என்பதை யாராலும் மறுக்கமுடியாத உண்மையாகும்.
விவசாயத்தில் பயன்படுத்தப்படும் இரசாயன உரங்கள், பூச்சி கொல்லிகள், களை கொல்லிகள் என்பவை மண்வளத்தை மாசாக்குவதுடன் மழை மற்றும் நீர்ப்பாசன நீரினால் கழுவிச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் சேருகின்றது இதனால் நீர் மண்டலத்தில் நைத்திரேற்று, பொசுப்பேற்று அயன்களின் செறிவு அதிகரித்து நற்போசனையாக்கம் எனப்படும் ஒருவகை நஞ்சாதல் ஏற்படுகின்றது. இதனால் புற்றுநேய் போன்ற தொற்றா நோய்கள் ஏற்படக் காரணமாவதுடன் நீலக் குழந்தைகளின் பிறப்புக்கும் காரணமாகின்றன. விலங்குகளிலும் இதன்தாக்கத்தை இனம்காணக்கூடியதாக உள்ளது நீர்நிலைகளில் மீன்கள் இறப்பதும் கால்நடைகள் நோய் வாய்ப்படுவதையும், இறப்பதையும் கிராமவாசிகள் கண்கூடாக கண்டுள்ளனர்.
மக்களின் வறுமையும், அறியாமையும், சுயநலப்போக்கும், பொறுப்பற்ற நடவடிக்கைகளும் இவ்வழுக்கியாற்று சூழல் தொகுதி நீடித்து நிலைபெறுவதற்கு சவாலாக அமைவதுடன். நம்பிக்கைகளும் பாரம்பரியங்களும் இண்று வரை இத்தொகுதியின் இயக்கத்தின் அச்சாணியாக விளங்குகின்றது.
‘நீரின்றேல் மரம் இல்லை
மரம் இன்றேல் உணவில்லை
உணவின்றேல் உயிர்கள் இல்லை
உயிர்கள் இன்றேல் உலகமே இல்லை”
‘‘எதிர்கால சந்ததிக்கான நீர் மேலாண்மை மிகப்பெரிய சேமிப்பு”
(நிறைந்தது)