இன மத மொழி கலாசார பண்பாட்டு விழுமியங்களால் வேறாக்கப்பட்டிருந்த மேலைத் தேசத்திற்கும் கீழைத்தேசத்திற்கும் என்று பொதுவான சில ஒற்றுமைகளும் இருந்தன. ஆண்கள் வழியதுதான் வம்ச உரிமை, பெண்களுக்கு மறுக்கப்பட்ட மறுமணம் என்பன உலகமெங்கும் பொதுவான அங்கீகரிக்கப்பட்ட சாபமாகத்தான் அன்றும் இருந்தது. அந்த ஒரு சாபம் இன்னொரு சாபத்திற்கு சாபவிமோசனமானது தான் இங்கு ஆச்சரியம்!
ஒரு காலத்தில் ஒரு பிரித்தானிய இளவரசர் இன்னமொரு நாட்டு இளவரசியைத் திருமணம் செய்து கொள்வது பாரம்பரிய வழக்காகவிருந்தது. அரச வீட்டுத் திருமணங்கள் நாட்டின் பொருளாதார, பாதுகாப்பு வளத்தை முன்னெடுக்கும் விடயமாகக் கருதப்பட்டது.
16ம் நூற்றாண்டில் மன்னர் எட்டாவது ஹென்றி (மூன்று மனைவிகளின் தலைகளைக் கொய்தவர்) பல திருமணங்களைச் செய்து பல மாற்றங்கள் நடந்தாலும், அரச திருமணங்கள் இரு அரச குடும்பங்களுக்குள்ளேயே தொடர்ந்தது.
அரச குடும்பத்தினர், விவாகரத்து செய்தவர்களைத் திருமணம் செய்யக் கூடாது என்ற சட்டத்தால். அமெரிக்கப் பெண்ணான ‘வலிஸ் சிம்சன்” என்ற விவாகரத்துச் செய்த பெண்ணைக் காதலித்த இன்றைய மகாராணியின் பெரியப்பா எட்வார்ட் பிரித்தானியாவின் அரச ராகும் அவரின் தகுதியைத் துறந்தார். பூவை இழந்தவளுக்காக பதவியை இழந்ததாக எட்வார்ட்டை பத்திரிகைகள் எள்ளி நகையாடின. ஆனால் அந்த உன்னத காதல் மனித உணர்வுகளுக்கு அப்பாற்பட்டதென்பதை யாரும் உணர்ந்திருக்கவில்லை. இதனால் இளவலான எலிசபெத் தந்தை ஆறாம் ஜார்ஜ் அரியணை ஏறினார்.
இரு புத்திரிகளை மட்டுமே கொண்ட ஆறாம் ஜார்ஜ் 1952இல் மரணமடைந்தார். அரியணைக்கு ஆண் மகனில்லை. அரசர்களில்லாத ஆங்கிலேயருக்கு அரசியானார் எலிசபெத். விவாகரத்தான பெண்ணுக்கு வாழ்க்கையை வழங்கியது மட்டுமல்ல, வில்லங் கமான ஆணாதிக்க வம்ச முறைக்கு விதிவிலக்காயும் அமைந்தது இந்த வெள்ளைக்காதல்.
எலிசபெத்திற்கு வெறும் 25 வயதுதான் அப்போது. இளவரசர் ஃபிலிப்பிற்கு 30 வயது. ஃபிலிப்புக்கு இளவரசி எப்போது வேண்டுமானாலும் அரசி ஆவார் என்று தெரியும். ஆனால் அத்தனை சீக்கிரம் அது நடக்கும் என இந்த ஜோடி எதிர்பார்க்கவில்லை. இளவரசரை பொருத்தவரை அவர் அரசி ஆக பதவியேற்றால், கடற்படை குறித்து தான் கொண்டிருந்த லட்சியம் அத்தனையும் கைவிட வேண்டும். கடற்படையில் அதிகாரியாக இருந்த ஒருவர் சட்டென ஒரு துணை பாத்திரத்தை கையில் எடுப்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஆம்! அரச வம்சத்தை சேர்ந்தவர் அரசியாகும் போது அவரது கணவர் அரசராவதில்லை. இளவரசரெனும் ஸ்தானமே வழங்கப்படும். அந்தவகையில் தனது கிரேக்க மற்றும் டென்மார்க் இளவரசர் பட்டத்தை துறந்து எலிசபெத் மீதான காதலால் அவரை மணந்த பிலிப் இங்கிலாந்தின் இளவரசரானார்.
இது அத்தனையும் 1950களில் நடைபெற்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அப்போது கணவரை காட்டிலும் மனைவி ஒரு உயர்ந்த பதவியில் இருப்பது மிக அரிதான ஒன்று. உலகின் பார்வையில் வாழ வேண்டிய ஒரு ஜோடிக்கு இது மேலும் அவஸ்தை தரவல்லது. ஆனால் அனைத்தையும் ஒருவர் மீதான ஒருவரின் புரிந்துணர்வால் சமாளித்தது இந்த சோடி!
அரசியைப் பொருத்தவரை ஒரு இளம் தாயாக இருந்தாலும், அவர் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புதான் அவருக்கு முதன்மையாக இருந்தது. அவர்களின் பொறுப்புகள் மாறியதால் அவர்களின் உறவில் பிரச்சினை வந்திருந்தாலும் அது கதவுகளுக்கு பின்னேதான் இருந்தது.
ஆட்சி காதலிலும் நடந்ததா?
பார்ப்போம் அடுத்த இதழில்..
இப்படிக்கு,
சாவித்துணை