இதழ்-28

தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் கமலாம்பாள் சரித்திரத்தின் முக்கியத்துவம் – 02

நாவலாசிரியர் பி. ஆர். ராஜமய்யர்

இவர் வத்தல குண்டில் 1872 ஆம் ஆண்டு பிறந்தவர். இவரின் நாவலின் கதையும் மதுரை ஜில்லாவைப் பற்றியதுதான். இவ் நாவலின் அட்டைச்சித்திரத்திலும் அஸ்தமன சமயத்தில் வானத்தை எட்டும் மதுரைக் கோபுரம் காணப்படுகின்றது. இவருடைய நவீனம் ஒன்றுதான். அதுதான் ‘கமலாம்பாள் சரித்திரம்” என்னும் நாவலாகும். இவர் விவேகானந்தர் மற்றும் பாரதியாரால் போற்றப்பட்டவர். விவேகானந்தர் சென்னையில் தொடங்கிய ‘பிரபுத்த பாரதா” அல்லது ‘விழித்துக் கொண்ட இந்தியா” எனும் ஆங்கிலப் பத்திரிகையின் முதல் ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கௌரவத்தினைப் பெற்றவர் பி. ஆர். ராஜமய்யர். இவருடைய காலத்தில் மத்தியதர வர்க்கத்தினர் ஆங்கிலம் கற்று அரசபதவிகளைப் பெறுவதில் ஆர்வம் காட்டினர். ராஜமய்யரும் சட்டம் பயின்று சட்டத்துறையில் முன்னேறுவதற்கே விரும்பினார். எனினும் சட்டப்பரீட்சையில் தவறிவிட்டார். இதனால் மனச்சோர்வடைந்து பின்னர் எழுத்துத் துறையில் ஆர்வம் காட்டினார். இதன் விளைவே ‘கமலாம்பாள் சரித்திரம்” ஆகும்.

தொடர்கதையாக வெளிவந்த நாவல்

பி.ஆர். ராஜமய்யர் அவர்களால் ‘விவேகசிந்தாமணி” என்ற மாத இதழில் 1893 ஆம் ஆண்டு தொடர்கதையாக எழுதத் தொடங்கினார். முதல் இரண்டு இதழ்களில் இப்புதினம் ‘அநியாய அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம்” என்ற தலைப்பிலும், மூன்றாவது இதழில் இருந்து ‘ஆபத்துக்கிடமான அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம்” என்னும் தலைப்பிலும் தொடர்ந்து 1895 வரை வெளிவந்தது. பின் 1896 ஆம் ஆண்டு இத்தொடர்கதை தனி நூலாக விவேகசிந்தாமணிப்
பிரசுரத்தின் மூலம் வெளிவந்தது.

நாவல் தரும் படிப்பினை

‘கடவுள் எல்லாவற்றிற்கும் அந்தம். எல்லாம் கடைசியில் அவனையே அடைகின்றன. என்ன நேர்ந்தாலும் அவைகள் எல்லாம் நமது நன்மைக்கே என்பதையும், நாம் அனுபவிக்கும் தண்டனைகள் கடைசியாக நமக்கு நன்மையாகவே முடியுமென்பதனையும் உணர்ந்து கொண்டு கர்மாவில் ஈடுபடுவது அவனை அடையும்படியான சுருக்கு வழி” என்பதனை ராஜமய்யர் இந்நவீனத்தின் படிப்பினையாக உணர்த்துகிறார்.

இந்துக் குடும்பத்தைச் சித்திரிக்கும் நாவல்

ஒரு இந்துக் குடும்பத்தைச் சித்திரிப்பது போல வேறெந்த நவீனமும் சித்திரிக்கவில்லை எனும் அளவிற்கு ஸ்திரீகளின் பெருமைகளும், சிறுமைகளும் இதில் விபரிக்கப்பட்டுள்ளன. எனவே இந்நாவல் மூலம் 19ஆம் நூற்றாண்டு மக்களின் வாழ்க்கை நிலையை, மனோநிலையை இந்நாவலின் மூலம் ராஜமய்யர் வெளிப்படுத்துகின்றார்.

நாவல் தலைப்பின் பொருத்தப்பாடு

இந்நாவலின் கதைத்தொடர் தொடங்கும் போது ‘அநியாய அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம்” என்று பெயரிடப்பட்டது. இரண்டாவது மாதத்தில் ‘ஆபத்துக்கிடமான அபவாதம்” என்று மாற்றப்பட்டு பின்னர் ‘கமலாம்பாள்
சரித்திரம்” என்றே அறியப்பட்டது.

நாவலிற்கு இரண்டு தலைப்புக்கள் வைப்பதனை முதலில் ராஜமய்யரே அறிமுகம் செய்தார். ‘சரித்திரம்” என்ற பதம் நல்ல ஆழமும், வீச்சும், விசாலமும் கொண்டது. உண்மையின் எதிரொலியை உள்ளடக்கிய தொனி அதற்கு உண்டு. மேலும், தமக்கு முந்தைய நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தினைப் பார்த்து இத்தலைப்பு வைத்தாரா? என்பதும் யோசிக்க வேண்டிய விடயம்.

கதை முழுக்க முத்துஸ்வாமி ஐயரை மையமிட்டு ஓடினாலும் பெண்கள் மீதான அபிமானத்தாலும் இத்தலைப்பு அவர் வைத்திருக்கலாம். கோள்மூட்டுதலால் ஏற்பட்ட கமலாம்பாள் பற்றிய அபவாதத்தினை நம்பி முத்துஸ்வாமி ஐயரும் கமலாம்பாளை ஆபத்துக்கிடமாக்குகின்றார். இதன் விளைவாகப் பெண்ணின் மௌனத் துயரும், ஒன்றும் செய்ய இயலாத தன்மையும் கதையில் முதன்மை பெறுவதால் இது கமலாம்பாள் சரித்திரமாகின்றது.

ஆய்வு தொடரும்…

Related posts

ஏகாதிபத்தியம் – Imperialism 04

Thumi2021

குறுக்கெழுத்துப்போட்டி – 25

Thumi2021

எங்கிருந்து வந்தான் இந்த இடையன்?

Thumi2021

Leave a Comment