இதழ்-28

நவீன வேதாள புதிர்கள் 07 – சுத்தும் சக்கரமும் சுத்தும்!!!

எண்கோலத்தில் அடுத்து வர வேண்டிய எண்ணை சரியாக கூறிய மன்னனின் பதில் கேட்டு சுடுகாட்டிற்கு பறந்து சென்றது வேதாளம். விக்ரமாதித்தன் மறுபடியும் முருங்கை மரத்திலிருந்து வேதாளத்தை பிடித்து வரும் போது வேதாளம்

இராஜனே!

இரவு வேளையில் இவ்விதம் மயானத்தில் அலைந்து திரிவது அரச பதவிக்கு ஏற்றதல்ல. அந்த யோகியை திருப்திப்படுத்துவதற்காக நீ ஏன் இவ்வளவு தூரம் விடாப்பிடியாக நடக்க வேண்டும்? நானும் உனக்கு கதை சொல்லி சலித்து விட்டேன். தேவ சன்னிதானங்கள், ஆல விருட்சங்கள், தடாகக்கரைகள் பொருந்தப்பெற்ற வளம் நிறைந்த விசாலமான பிரதேசத்தில் நீர் தலைநகர் அமைத்த கதையை எனக்கு கூறுங்கள் என்றது வேதாளம்.

விக்ரமாதித்தனும் கதை கூறத் தொடங்கினான்.

‘எனது தமையனான பர்த்ருஹரி ராஜன் துறவியாகி காட்டிற்கு சென்ற பின் இராட்சியப்பொறுப்பு என்னிடம் வந்து சேர்ந்தது. ஒரு நாள் நானும் எனது மந்திரி பட்டியும் அரசசபை விவகாரங்கள் பற்றி கலந்துரையாடும் பொழுது, நாம் ஆட்சி செய்யும் பூமி மிகவும் சிறியதாய் இருக்கிறது இன்னும் பல நாடுகளைச் சம்பாதித்து நம் பெயர் உலகம் முழுவதும் பரவும் வகையில் நாம் பரிபாலனம் செய்ய வேண்டும். விசாலமான ஒரு தலைநகரை நிறுவி ஆட்சி செய்ய வேண்டும் என்று ஆலோசித்தோம். அதன் பிரகாரம் பட்டி என்னிடம் விடைபெற்று அதற்கு தகுதியான இடத்தை அறிந்து வர புறப்பட்டான்.

பட்டி அவ்விதம் தேடி அலைகையில் வளம் நிறைந்த விசாலமான மனித சஞ்சாரம் அற்ற பிரதேசமொன்றில் பத்ரகாளியம்மன் கோவிலொன்று இருப்பதை அவதானித்தான். அங்கே ஒரு குத்துக் கல்லில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது. ‘எவனொருவன் எந்த குலத்தில் பிறந்தவனாயிருந்தாலும் இப்பொய்கையில் ஸ்நானம் செய்து இங்கே நிற்கும் ஆல விருட்சத்தில் தொங்கும் ஏழு உறிகளையும் ஒரே வெட்டில் வீழ்த்தி அவை கீழே விழுவதற்குள் ஆகாய மார்க்கமாக பொய்கையின் நடுவில் இருக்கும் வேலின் முனையில் பாய்கிறானோ அத்தகைய வல்லமைசாலிக்கு தேவி சகல சௌபாக்கியங்களையும் அருளி ஆசீர்வதிப்பதுடன் ஐம்பத்தாறு அரசர்களையும் வெற்றி கொண்டு அனைவருக்கும் அதிபதியாகி அரசாள்வான்”. என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அவ்விதம் செய்தே இத்தலைநகரை அடைந்தேன் என விக்ரமாதித்தன் கூறி முடிப்பதற்குள் வேதாளம் தொடங்கியது.

நானும் அத்தலத்தை தரிசித்துள்ளேன். அங்கு 1 தொடக்கம் 11 வரை இலக்கமிடப்பட்ட சக்கரமொன்றை அவதானித்திருக்கிறேன். அதை அடிப்படையாக வைத்து உமக்கொரு கேள்வி. அச்சக்கரத்தை நீர் ஓய்வுபடுத்தும் போது ஒரே நேர்கோட்டில் உள்ள மூன்று இலக்கங்களின் கூட்டுத்தொகை 18 ஆக அமைய வேண்டும் ஒரு இலக்கம் ஒருதடவை மட்டுமே இடம்பெற முடியும். இவ் விதம் நீர் ஒழுங்குபடுத்தினால் அங்கு தலைநகர் அமைத்து ஆட்சி புரிவதற்கு நீர் பொருத்தமானவர் என ஒப்புக் கொள்கிறேன் என்று கூறி தனது மாய வித்தையால் அச்சக்கரத்தின் விம்பத்தை விக்ரமாதித்தன் முன் தோன்ற வைத்தது வேதாளம்.

விக்ரமாதித்தனோ கடுமையாக யோசிக்கத் தொடங்கினான்.

துமி அன்பர்களே, நீங்களும் விக்ரமாதித்தனுக்கு உதவிடுங்கள். உங்கள் பதிலை எமது மின்னிதழிற்கு அனுப்பி வையுங்கள்.

Related posts

சிந்தனைக்கினிய கந்தபுராணம் – 02

Thumi2021

மருத்துவம் போற்றுதும்

Thumi2021

குறுக்கெழுத்துப்போட்டி – 25

Thumi2021

Leave a Comment