டென்னிஸ் உலகில் பிரதானமாக நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்கள் வருடாவருடம் நடைபெறுகின்றன: பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் (லண்டன்), அமெரிக்கன் ஓபன் மற்றும் அவுஸ்திரேலியன் ஓபன். இவற்றில் விம்பிள்டன் (Wimbledon) தொடர், பாராம்பரியத்தாலும் காலத்தாலும் முன்னிலை வகிக்கிறது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இரண்டாம் உலகப் போருக்குப்பின் முதல் தடவையாக நடை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு நடைபெற்ற தொடரின் விபரக்குறிப்புகளை தாங்கி வருகிறது இந்த பதிவு.
ஆடவர் ஒற்றையர் பிரிவு (Gentlemen’s Singles)
ஜூலை மாதம் 11ம் திகதி நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் முன்னணி வீரரும் முதல் நிலை வீரருமான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் முதல் முறையாக விம்பிள்டன் இறுதிக்கு முன்னேறிய ஏழாம் நிலை வீரரான இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி உடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் முதல் செட்டை 6-7 (4-7) என இழந்த செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், அடுத்த செட்களை 6-4, 6-4, 6-3 என கைப்பற்றி தனது ஆறாவது விம்பிள்டன் கோப்பையை வென்றார். இது ஜோகோவிச்க்கு இருபதாவது கிராண்ட்ஸ்லாம் தொடர் வெற்றியாகும். இதன் மூலம் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர்கள் என்கிற ரோஜர் பெடரர் மற்றும் ரஃபேல் நடால் ஆகியோரின் உலக சாதனை சமன் செய்தார்.
இதுவரை ஜோகோவிச் 30 கிராண்ட்ஸ்லாம் இறுதி போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் 2008 இல் தன் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அவுஸ்திரேலியன் பகிரங்க தொடரில் வென்ற போது, தன் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களில் 12 இனை பெற்றிருந்தார் பெடரர்.
2021இல் 34 வயதான ஜோகோவிச் 34 போட்டிகளிலும், 25 வயதான பெரெட்டினி 32 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் நடைபெற்ற அவுஸ்திரேலியன் பகிரங்க தொடர், பிரஞ்சு பகிரங்க தொடர், மற்றும் தற்போது விம்பிள்டன் தொடர் என மூன்று கிராண்ட்ஸ்லாம் தொடர்களிலும் வெற்றி பெற்றுள்ள ஜோகோவிச், அடுத்து வரவுள்ள அமெரிக்கன் பகிரங்க தொடரையும் வென்றால் ஓரே ஆண்டில் நான்கு பிரதான கிராண்ட்ஸ்லாம் தொடர்களை வென்ற வீரர் என்ற பெருமையை பெறுவார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு (Ladies’ Singles)
மகளிருக்கான விம்பிள்டன் தொடரின் (மொத்தமாக 116 போட்டிகள்) இறுதிப்போட்டி கடந்த 10ம் திகதி யூலை மாதம் நடைபெற்றது. இதில் உலகின் முதல் நிலை வீராங்கனையான அவுஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி (Ashleigh Barty) மற்றும் செக் குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா (Karolina Pliskova) போட்டியிட்டனர். 1977ஆம் ஆண்டுக்கு பிறகு, முதல் முறையாக இரண்டு வீராங்கனைகள் தம் முதலாவது புற்தடை கிராண்ட்ஸ்லாம் தொடரின் இறுதி போட்டியில் ஆடுவது குறிப்பிடத்தக்கது. முதல் செட்டை 6-3 என கைப்பற்றிய பார்ட்டி, இரண்டாம் செட்டை 6-7 என இழந்தார். பின் மூன்றாம் செட்டை மறுபடியும் 6-3 என கைப்பற்றிய பார்ட்டி தனது முதலாவது விம்பிள்டன் கோப்பையை வென்றார்.
ஆஷ்லீ பார்ட்டி க்கு இது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் வெற்றியாகும். இதற்கு முன்னர் 2019 இல் பிரெஞ்சு பகிரங்க (French Open) போட்டியை வென்று தன் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றிருந்தார்.
25 வயதான பார்ட்டி 2011 இல் இளையோர் விம்பிள்டன் (Junior Wimbledon) கோப்பையை வென்ற வீராங்கனை ஆவார். இதனால் இரு விம்பிள்டனையும் வென்ற நான்காவது பெண்மணியானார். 41 வருடங்களிற்கு பின் முதல் முறையாக ஒரு அவுஸ்திரேலியர் விம்பிள்டன் கோப்பையை வெல்வது குறிப்பிடத்தக்கது. அத்துடன் பார்ட்டியின் வழிகாட்டியும் (Mentor) இலட்சிய மனிதருமான (Idol) Evonne Goolagong Cawley, தனது முதல் விம்பிள்டன் கோப்பையை வென்ற 50வது ஆண்டு விழாவில் தன் முதல் விம்பிள்டன் கோப்பையை அவுஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி வென்றுள்ளார்.
ஆடவர் இரட்டையர் பிரிவு (Gentlemen’s Doubles)
இதன் இறுதிப் போட்டியில் முதல் நிலை ஜோடியான குரோவாசியாவின் (Croatia) Nikola Mektic மற்றும் Mate Pavic க்கெதிராக அர்ஜென்டினாவின் Horacio Zeballos மற்றும் ஸ்பெயினின் Marcel Granollers ஆடினர். இதில் 6-4, 7-6(5), 2-6, 7-5 என வென்ற குரோவாசியாவின் இரட்டையர்களான Nikola Mektic மற்றும் Mate Pavic; விம்பிள்டன் கோப்பையை வென்ற முதலாவது குரோவாசியா நாட்டு வீரர்களானார்கள். இது பவிக் (Pavic) க்கு மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் வெற்றி ஆகும். 2017இல் பவிக் விம்பிள்டன் இறுதியில் தோற்றிருந்தாலும், இது மெக்ரிக்கின் முதலாவது விம்பிள்டன் இறுதி போட்டியாகும். இந்த போட்டி இரண்டு மணிநேரம் 44 நிமிடங்கள் நீடித்திருந்தது.
மகளிர் இரட்டையர் பிரிவு (Ladies’ Doubles)
இரண்டரை மணி நேரம் நீடித்த இந்த இறுதி போட்டியில் ரஷ்யாவின் Elena Vesnina மற்றும் Veronika Kudermetova வை எதிர்த்து தாய்வானின் Su-Wei Hsieh மற்றும் பெல்ஜியத்தின் Elise Mertens இணை ஆடியது. இதில் ரஷ்ய இணையை 3-6, 7-5, 9-7 என தோல்வியுற செய்தனர் Hsieh மற்றும் Metens. Hsieh மற்றும் Metens இணை தனது ஐந்தாவது தொடரில் விம்பிள்டன் கோப்பையை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2013 மற்றும் 2019 இலும் வேறு வேறு இணைகளுடன் விம்பிள்டன் வென்ற Hsieh க்கு இது மூன்றாவது விம்பிள்டன் இரட்டையர் பட்டம் ஆகும். அத்துடன் இந்த வருடமும் வென்று தனது விம்பிள்டன் இரட்டையர் பட்டத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
கலப்பு இரட்டையர் பிரிவு (Mixed Doubles)
ஜூலை மாதம் 11ம் திகதி, மூன்று இங்கிலாந்து வீரர்கள் பங்கெடுத்த கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதி போட்டி, கடந்த 13 நாட்களாக நடைபெற்ற விம்பிள்டன் 2021 தொடரின் கடைசி போட்டியாக அமைந்திருந்தது. இதில் இங்கிலாந்தின் Neal Skupski மற்றும் அமெரிக்காவின் Desirae Krawczyk அணி, இங்கிலாந்தின் Joe Salisbury மற்றும் Harriet Dart அணியை 6-2, 7-6(1) என்கிற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த ஆண்டின் பிரஞ்சு பகிரங்க தொடரை ஜோய் (Joe Salisbury) உடன் வென்ற கலிபோர்னியாவின் 27 வயதான டிசிரே (Desirae Krawczyk), தற்போது விம்பிள்டன் 2021 பட்டத்தை நீல் (Neal Skupski) உடன் சேர்ந்து வென்றுள்ளார்.
இவற்றை விடவும் சக்கர நாற்காலி ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ஆட்டங்களும் ஆண்கள் (Boys’) மற்றும் பெண்களுக்கான (Girls’) ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ஆட்டங்களும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.