இதழ்-29

சித்திராங்கதா – 29

வெள்ளையனும் வன்னியனும்

இது உத்தராயண காலமாகையால் வன்னிமண்ணின் கனல் அதியுச்சமாக இருந்தது. அடங்காப்பற்றின் குடியேற்றம் பற்றி நாம் ஏற்கனவே கூறியிருக்கிறோம். பெரும்பாலும் பாரிய மரங்களினால் சூழப்பட்ட வனாந்தர பிரதேசமாகவே காணப்பட்டது. ஆங்காங்கே சில குடியிருப்புக்கள். ஆனாலும் வளம் மிகுந்த ஒரு பிரதேசமாய் அதன் அடையாளங்கள் தெளிவாய்த் தென்பட்டன.

வன்னியத்தேவனை தேடி வந்த உக்கிரசேனன் அரண்மனையில் வன்னியத்தேவன் இல்லாததை அறிந்து அவன் மனக்கணக்கின்படி மேற்குக் கடற்கரை நோக்கி விரைந்தான்.

அந்தக்கடற்கரைப் பகுதியிலே ஏரளமான கூடாரங்கள் புதிதாக அமைக்கப்பட்டிருந்தன. உக்கிரசேனனது மனக்கணக்கு சரியாகத்தான் இருந்தது. அந்தக் கூடாரங்களிற்கிடையில் நிறுத்தப்பட்டிருந்த பீரங்கிகளிற்கு அடுத்திருந்த ஓரளவு பெரிதாய்த் தெரிந்த கூடாரத்தின் வாயிலில் வன்னியத்தேவனது குதிரையை இனங்கண்டு கொண்டான். அவை யாவுமே போர்த்துக்கேயரால் நிறுவப்பட்ட கூடாரங்கள்தான் என்பதை அதன் லட்சணங்களைக் கொண்டு அவன் ஊகித்தறிந்து கொண்டான்.

வன்னியர் விழா பற்றிய செய்தியை உடனடியாக வன்னியத்தேவனிற்கு கூறியாக வேண்டும் என்று அவசரமாக விரைந்து வந்த உக்கிரசேனனிற்கு இப்போது அந்தக் கூடாரத்திற்குள் என்ற பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவதிலுள்ள ஆர்வமே அதிகமாக இருந்தது.

பறங்கி வீரர்கள் யாரும் தன்னைக் கண்டு கொள்ளாதபடி அக்கூடாரத்தின் பின்புறமாகச் சென்று ஒளிந்து கொண்டான் உக்கிரசேனன். கடலலைகளின் ஓசையைத் தாண்டி அந்த உரையாடலைச் செவிமடுப்பது அவனிற்கு உண்மையில் பெருஞ்சிரமமாகவே இருந்தது. அதனிலும் அந்த பறங்கித் தளபதி பேசுகிற விதத்தை புரிந்து கொள்வது கூட அவ்வளவு இலகுவானதல்ல.

‘தமிழ்தான் பேசுகிறான் என்றாலும் எப்படிப் பேசுகிறான். அதைப் பொருத்திப் பார்த்துப் பொருள் தேடுவதிலே போதும் போதும் என்றாகிவிடும்’
என்று தனக்குள்ளே சலித்துக் கொண்டான் உக்கிரசேனன். இருந்தாலும் ஒற்றனல்லவா? உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டேயிருந்தான்.

‘டாம் லூயிஸ் தலைமையில் நடந்து கொண்டிருந்த கலவரங்களை எல்லாம் தஞ்சைப்படை வீரன் வந்து அடக்கி விட்டானாமே? யார் அந்த வருணகுலத்தான்? அவனைப்பற்றியே எங்கு பார்த்தாலும் பேச்சு இருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. மாமன்னர் சங்கிலி சரியான ஆளைத்தான் அழைத்து வந்திருக்கிறார் போலிருக்கிறதே’

என்று அந்தப்பறங்கியன் கூறி முடிப்பதற்கே ஒரு நாழிகைப் பொழுது தேவைப்பட்டது போல் உக்கிரசேனனுக்குத் தோன்றியது.

தொடர்ந்து வன்னியத்தேவனின் குரல் ஒலித்தது.

‘திருவாளர், பிலிப் டி ஒலிவேரா அவர்களே, என்ன இது? நீங்களே நம் எதிரிகளைப் பாராட்டத் துவங்கி விட்டீர்கள்? சங்கிலி எப்போது மாமன்னன் ஆனான்? அதுவும் தங்களிற்கு! ‘

அந்தப் போர்த்துக்கேயக் குரல் தொடர்ந்தது.
‘எங்களிற்கு அவன் மாமன்னன் இல்லை. வெறும்மன்னன் தான். ஆனால் வன்னியத்தேவரே, உங்களவர்கள் சங்கிலியை மாமன்னன் என்றுதானே சொல்கிறார்கள். அதனால்த்தான் உம்மிடம் அப்படிச் சொன்னேன்.’

‘என்னைப் பொறுத்தவரை அவன் வெறும் மன்னன் கூட இல்லை. அரச வழித்தோன்றல் என்கிற ஒரே காரணத்திற்காய் அரசானான துரோகி இந்தச் சங்கிலி. இவனெல்லாம் மன்னன் என்றால் நானும் மன்னன் தான். வன்னிக் குடிகளை என் ஆணை தான் இங்கு ஆள்கிறது. நான் போர்த்துக்கீசர்களின் நட்போடு சங்கிலியை வென்று இந்த ஈழத்திருநாட்டின் மாமன்னன் ஆவேன். இது நிச்சயம். இது குறித்து நான் ஏற்கனவே உங்கள் மேலதிகாரி கொன்ஸ்டாண்டின் டி சாவிடன் சொல்லியிருக்கிறேன்’
என்று ஓங்காரமான குரலில் கூறி முடித்தான் வன்னியத்தேவன்.

‘உண்மைதான்- உமக்கு ஆதரவாகத்தானே நாங்கள் செயல்ப்படுகிறோம். ஆனால் இப்போது நிலைமை எமக்கு எதிராக மாறிக் கொண்டிருப்பது போலிருக்கிறதே’

‘அது எப்படி மாறும் ஒலிவேரா அவர்களே? போர் என்பது என்ன மந்திர வித்தையா?’

‘அந்த வருணகுலத்தான் ஒரு மாபெரும் வீரன் என்று எல்லோரும் கூறுகிறார்கள். பத்துப்பேர் சூழ்ந்து கொண்டாலும், அவன் வாளை உருவினால் அடுத்த கணமே எதிரிகளின் தலைகள் இலையுதிர் காலத்துச் சருகுகள் போல மண்ணில் உதிர்கின்றனவாம். மின்னல் வேகத்தில் வாளைச் சுழற்றுகின்ற அவனை எதிர்க்க இந்த இலங்கை மண்ணில் எவருமே இல்லை என்று அனைவருமே பேசிக்கொள்கிறார்கள்’

என்று பறங்கித்தளபதி கூறியதும் கைகொட்டிச் சிரித்தான் வன்னியத்தேவன்.

‘ஒலிவேரா அவர்களே, இங்கே பெருங்கதைகள் இப்படித்தான். தாங்கள் அறிந்த கிரேக்க புராணக்கதைகளையும் மிஞ்சும் கற்பனைச் சாகசங்களை ஒரு தனிமனிதன் மீது ஏற்றிச் சொல்வதில் எங்களவர்கள் மிகவும் வல்லவர்கள். இதையெல்லாம் கேட்டு நீங்களுமா நம்புகிறீர்கள்? வருணகுலத்தான் என்ன வானிலிருந்து குதித்த கடவுளின் அவதாரமா? இது பீரங்கி யுகம் தளபதியாரே, அதுவும் உங்கள் போர்த்துக்கீசர்கள் மூலம்தானே இந்த மண்ணிலும் அந்த யுகம் தோன்றியுள்ளது’
என்று கூறி மேலும் சிரித்தான் வன்னியத்தேவன்.

‘வன்னியத்தேவரே, நீர் மகா புத்திசாலிதான். எங்கே வருணகுலத்தானைப் பற்றி மக்கள் பேசுவதை எல்லாங் கேட்டு நீர் மனந் தளர்ந்து விட்டீரோ என்று நினைத்தேன். உம்மைப் பரீட்சித்துப் பார்க்கவே இப்படிப் பேசினேன். நம்மிடம் ஏராளம் பீரங்கிகள் இப்போது இருக்கின்றனதான். ஆனால் போர் என்று துவங்கி விட்டால் இன்னும் நிறையத் தேவைப்படும். அதற்காகவே கொன்ஸ்டாண்டின் டி சா அவர்கள் கோவாவிலிருந்தும், நாகை பட்டினத்திலிருந்தும் ஏரளமான பீரங்கிகளும், வெடிமருந்துகளும் உள்ள மரக்கலங்களை வரவழைத்திருக்கிறார். அவை மன்னார்க்குடாக் கடலை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. இனி அடுத்த திட்டத்தைப் பற்றி நீர் தான் கூற வேண்டும்’

‘அற்புதம் ஒலிவேரா… அற்புதம்….
சங்கிலி எப்படியும் இந்த மரக்கலங்கள் வருவது குறித்து அறிந்திருப்பான். அவன் பெரும் கிலி பிடித்த நிலையிலே இப்போது இருப்பான். நீங்கள் தைரியமாக புத்தளம், சிலாபம், முள்ளிக்குளம் வழியாக உங்கள் படை வீரர்களுடன் பூநகரியை நோக்கிப் புறப்படுங்கள். அங்கே நீங்கள் பாசறை அமைத்துத் தங்கினால்க் கூடப் போதும். சங்கிலி கதி கலங்கிப் போவான். பின்னர் தூதுவன் ஒருவன் மூலம் குடாக்கடலை கடந்து யாழ்ப்பாணம் சேர உதவ வேண்டும் என சங்கிலியனிடமே கோரிக்கை விடுங்கள். கதி கலங்கிப்போன தெளிவில்லாப் புத்தியோன் அதற்குச் சிலவேளைகளில் சம்மதம் தெரிவிக்கக் கூடும் என்றே கருதுகிறேன். இல்லாது போய்விடினும் குடாக்கடலைக் கடக்க நான் வேறு உபாயம் கூறுவேன். அதற்கான ஏற்பாடுகளை நானும் செய்து கொண்டுதான் இருக்கிறேன். வருகின்ற சித்திரை முழுநிலவு நாளில் மட்டும் என் திட்டம் வெற்றி பெற்று விட்டால் சங்கிலியன் சரிவை யாராலும் தடுக்க முடியாமல் போய்விடும்’
என்று கூறி வன்னியத்தேவன் தன் விலா நோகச் சிரித்தான்.

கூடாரத்திற்குப் பின்புறம் மறைந்து கேட்டுக் கொண்டிருந்த உக்கிரசேனனிற்கு வன்னியத்தேவனது மேற்படி வார்த்தைகள் ஆச்சரியத்தை அளித்தன.

‘சித்திரை முழுநிலவு நாளில் என்ன திட்டம் குறித்துப் பேசுகிறார். ஒருவேளை வன்னியர் விழா குறித்து ஏற்கனவே அறிந்திருப்பாரோ? அதற்குத்தான் வாய்ப்பேயில்லையே’
என பல குழப்பங்கள் அவனிற்குள் எழ இனி மறைந்திருக்க பொறுமையில்லாமல் கூடார வாசலை நோக்கி வந்தான்.

Related posts

கண்ணால் பேசும் பெண்ணே…!

Thumi2021

பிளவுபட்ட உதடு மற்றும் அண்ணம் Cleft Lip and palate

Thumi2021

அந்திமக் காலம்

Thumi2021

Leave a Comment