இதழ்-29

பிளவுபட்ட உதடு மற்றும் அண்ணம் Cleft Lip and palate

சிகிச்சை முறைகள் [Treatment methods]

பிளவு பட்ட உதடு மற்றும் அண்ணத்துடன் பிறந்த குழந்தைக்கு சிகிச்சை பூரணமாகும் வரையில் சில சவால்கள் இருப்பதனால் குழந்தையின் வெவ்வேறு நிலைமைகளை கவனிப்பதற்கு வைத்திய நிபுணர் குழு ஒன்று உள்ளது. இந்த குழுவில் உள்ளவர்கள் ஒரு அணியாக செயற்படுவார்கள்.

குழந்தை நோய் நிபுணர் [Paediatrician], வாய் , தாடை மற்றும் முக சத்திர சிகிச்சை நிபுணர்[OMF surgeon] , பல் வைத்தியர் [Dental Surgeon], Cleft surgeon , போசணை நிபுணர் [Nutritionist] , பல் சீராக்கல் சிகிச்சை நிபுணர் [Orthodontist] , காது , மூக்கு மற்றும் தொண்டை  நிபுணர் [ENT surgeon], பேச்சு மற்றும் மொழி சிகிச்சை நிபுணர் [Speech and language therapist] , தாதியர்கள் [Nursing staffs] போன்ற பலர் இக்குழுவில் உள்ளடங்குவார்கள்.

உதடு அல்லது அண்ணப்பிளவுள்ள  குழந்தைகள் பிறந்து ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் வாய்,  தாடை மற்றும் முக சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவரை சந்திக்கவேண்டும். குழந்தையின் கண்காணிப்பும் பராமரிப்பும் பிறந்ததிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு 20 வயது வரை நீடிக்கப்படுகின்றது. புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பிளவுகள் வித்தியாசப்படுவதால், அறுவைச் சிகிச்சை முறைகளும் மாறுபடும்.

பிளவு பட்ட உதட்டுடன் பிறந்த குழந்தையின் பெற்றோர் தங்கள் குழந்தையினை முதல் தடவை பார்த்தவுடன் மன வேதனையடைவது இயல்பான விடயமாகும். எனினும் இதனை முற்றாக சரி செய்ய முடியும் என்பது மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு விடயமாகும். மேலும் இக்குழந்தையின் பராமரிப்பு மற்றும் சிகிச்சை முறைகளை பற்றி பெற்றோருக்கு தெளிவுப்படுத்துவது முக்கியமான ஒரு விடயமாகும். பிளவுபட்ட அண்ணத்துடன் பிறந்த குழந்தைகளுக்கு பாலூட்டும் பொழுது பால் மூக்கினுள் செல்லக்கூடும். பால் ஊட்டுவதினை சரி செய்வதற்கு feeding plates வழங்கப்படும். அறுவைச்சிகிச்சை செய்வதற்கு முதல் அறுவைசிகிச்சையினை இலகுவாக்குவதற்காக சில சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படும் [Presurgical orthopaedics].

அதன் பின்பு பிளவுபட்ட உதட்டினை சரி செய்வதற்கான அறுவைசிகிச்சை பிறந்து மூன்று மாதம்[10 weeks] தொடக்கம் 6 மாதங்களினுள் செய்யப்படும். இச்சிகிச்சை செய்வதற்கு குழந்தை 10 pounds[4.5kg] நிறையினை கொண்டு இருத்தல் வேண்டும், அத்துடன் குழந்தையினுடைய ஹீமோகுளோபின்[Haemoglobin] அளவானது 10% ஆக இருத்தல் வேண்டும். அதன் பின்பு அண்ணப்பிளவினை சரி செய்வதற்கான அறுவைச் சிகிச்சை பிறந்து 9-12 மாதங்களில் செய்யப்படும்.

பிளவு பட்ட அண்ணம் சரி செய்த பின்பு குழந்தைக்கு பேச்சு மற்றும் மொழி பயிற்சி (Speech and language theraphy) மேற்கொள்ளப்படும். ஊத்தேகியாவின் குழாயின் [Eustachian canal] நிலை மாறி இருப்பதினால் காதில் நோய்த் தொற்றுக்கள் ஏற்படக்கூடும். இதனால் ENT பரிசோதனை அவசியமாகும்.

முன்பு செய்த உதட்டினை சீர்செய்யும் சிகிச்சையின் பின்பு வடுக்கள் ஏதும் இருப்பின் அதனை திருத்தியமைக்கும் அறுவைச் சிகிச்சையானது [Revisional surgery] அடுத்ததாக மேற்கொள்ளப்படும்.
ஒன்பது வயது ஆனவுடன் SABG- secondary alveolar bone grafting என்கின்ற அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படும். அதன் பின்பு (11-13) வயதினில் பல் சீராக்கும் சிகிச்சை ஆரம்பிக்கப்படும்.

●குழந்தையின் போசாக்கு

பிறந்த குழந்தைக்கு போசணையானது தாய்ப்பால் மூலம் மட்டுமே கிடைக்கின்றது.
வாயினை சுற்றியும் தொண்டையிலும் உள்ள தசைகளின் இசைவான செயற்பாடுகளினால் குழந்தைகள் பால் பருகும் போது எதிர் அமுக்கம் [Negative pressure] உருவாக்கப்படும். குழந்தைகள் பாலினை உறிஞ்சி குடிப்பதற்கு உதடுகள் நன்றாக ஒட்டிபிடிப்பது அவசியமாகும். பிளவுபட்ட உதடுகளினால் இறுக்க கவ்விப் பிடித்து எதிர் அமுக்கத்தினை உருவாக்கி பாலினை அருந்த முடியாது.
பிளவு பட்ட உதடு மற்றும் அண்ணத்துடன் பிறந்த குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு சிறப்பான பால் புட்டிகள், பாலூட்டும் முறைகளும் உள்ளன.

தொடர்வோம்…..

Related posts

விபிள்டன் 2021

Thumi2021

தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் கமலாம்பாள் சரித்திரத்தின் முக்கியத்துவம் – 03

Thumi2021

அந்திமக் காலம்

Thumi2021

Leave a Comment