இதழ்-29

கண்ணால் பேசும் பெண்ணே…!

“ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்

சோதியை யாம்பாடக் கேட்டேயும்…”

தொடக்கமும் முடிவும் இல்லாத கைலாசநாதனின் புகழ் அந்தாதி போல அடி முடி இல்லாத கைலாச  விருட்சத்தின் வேர் காதல்.

“குமரிப் பெண்ணின் உள்ளத்திலே

குடியிருக்க நான் வர வேண்டும்

குடியிருக்க நான் வருவதென்றால்

வாடகை என்ன தர வேண்டும்”

என்று இவன் காதல் விண்ணப்பம் போட, விண் அப்பம் போன்ற பதுமையாள் மொழிந்தாள்,

“குமரிப்பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சைத் தரவேண்டும்

காதல் நெஞ்சைத் தந்துவிட்டு குடியிருக்க நீ வரவேண்டும்”

இப்படி விண் அப்பம் இறங்கி வந்து காதல் விண்ணப்பம் எழுதாது, மனத் தெப்பம் தவழ காதல் கப்பம் கட்டாது கையொப்பம் இடம்மாற்றி சேர்ந்தவர்கள் இவர்கள்.

தரகர் வழி குறிப்புக்கொடுத்து பொருத்தம் பார்த்து, புகைப்படத்தில் முகம் பார்த்து பெரிய சம்பானைகள் எதுவுமில்லாது வீட்டுப் பெரியவர்கள் ஏற்பாட்டில் மணமேடையில் வந்தமர்ந்து,  மந்திரம் ஓதி அக்னி குண்டம் சுற்றி தாலி கட்டி அம்மி  மிதித்து அருந்ததி பார்த்து குங்குமம் தரித்து மாலை சூடி மணமக்களாய் காட்சி தந்து, இப்பொழுது முதலிரவு.

“ஆயிரம் இரவுகள் வருவதுண்டு

ஆனால் இதுதான் முதலிரவு

ஆயிரம் உறவுகள் வருவதுண்டு

ஆனால் இதுதான் முதல் உறவு”

முதலிரவில் முதல் அழைப்பு. கட்டிய தன் மனைவியை இப்படி அழைக்கிறான்,

//ஏய்! மாண்புறு மங்கையே!//

ஏய் இங்கே கொஞ்சம் திரும்பு! தலைவன் தலைவியை அழைக்கிறான். மனைவியின் மதிப்பறிந்த மணாளனின் அழைப்பு.

“என் மரியாதைக்கு உரியவளே

மனதிற்கு இனியவளே”

பேச்சு கொடுக்கிறான். பேச்சு தானே மானிட சமுதாயத்தின் இத்தனை பேராச்சரியங்களுக்கும் திறவுகோல். இவனும் தனக்கான உறவினை பேசச்சொல்லி வேண்டுகிறான்.

//செம்மாதுழை வாய் மொழி சொல்லாயோ//

அவள் பேசும் போது தேன் சிந்தும் சொற்கள். வாய்மொழி கேட்கையில் வரும் போதை இவனுக்கு தேவைப்படுகிறது.

“செங்கனி ஊறிய வாய் திறந்து

நீ ஒரு திருமொழி சொல்லாய்”

பேசடி சகியே பேசு!  காதல் – கவிதை, காமம் – கடவுள் அத்தனையும் காணப்போகும் உறவினை தொடங்குவதற்காக பேசு.  அகரம் தொட்டு ழகரம் வரை மொழி முடிசூடும் கலை எல்லாம் பேச வேண்டுமே! பேசுதலே இன்பம். அவளோ,

“பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்

கடற்கரை மணலில் இருப்போமா

மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில்

கதை கதையாக படிப்போமா”

என்று மௌனத்திலே உறவின் ஜீவனை மிக நெருக்கமாக தரிசிக்க விரும்புபவள். ஆனாலும் அவள் பேச்சின் இனிமையோ,

“தேன் ஊறும் வேர்ப்பலா

உன் சொல்லிலா”

வேரில் காய்க்கும் பலாப்பழத்தின் சுவை தண்டில் காய்க்கும் பலாப்பழத்தின் சுவையை விட அதிகம். அப்படியான வேர்ப்பலா சுளைகளை சுவைக்க முதல், அந்த சுளைகளை கொஞ்சி விழும் வார்த்தைகள் கேட்க ஆசை கொள்கிறான் இவன்.

“வலியா சுகமா தெரியவில்லை

சிறையா சிதையா புரியவில்லை”

என்ற காதல் போராட்டங்கள் காணாமல், மஞ்சத்தில் இரு நெஞ்சங்கள் கலக்க முதல் பேச வேண்டி நிலைக்கிறது மௌனம்.

“இதயம் ஒரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி

இது தான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி

கண்ணாடி விம்பம் கட்ட கயிறொன்றும் இல்லையடி

கண்ணாடி ஊஞ்சல் விம்பம் ஆடுதடி”

காதலனுக்கு காதலி ஆரம்பத்தில் தேவதையாக தெரிவாள். போக போக, மனக்கண்ணாடியில் அவள் விம்பம் தாண்டவம் ஆடத் தொடங்கும். இது உக்கிரமடைய சித்தமெல்லாம் காதலி மயம். சுற்றமெல்லாம் காதலி முகம். சர்வமும் காதலின் மாயம்.

“இது சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி

நான் வாழ்வதும் விடை கொண்டு போவதும்

உன் வார்த்தையில் உள்ளதடி”

இப்படியான காதலின் ஏக்கத்தை, அவள் மௌனத்தில் மோகனத்தை இசைக்கும் போது உணர்கிறான். அதே வேளை அவனின் செல்லமான வேண்டுகோளை ஏற்று வாய்திறந்தாள் பவளமல்லி.

“மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்

முட்டும் தென்றல் தட்டி தட்டி திறக்கும்

இது மலரின் தோல்வியா இல்லை

காற்றின் வெற்றியா”

தோல்வி காதலர்களுக்கு இல்லை. இது காதலின் வெற்றி. உள்ளம் கொண்டவளின் மௌனம் ஆணின் உயிரை பிழியும் வல்லமை கொண்டது.

“ரஷ்யாவின் வொட்காவா 

ஜப்பானின் ஹைக்கூவா”

அவள் பேச்சிலேயே கள் உண்ட மயக்கமும் நல்ல கவிதை படித்த நிறைவும் ஒரு சேர அடையும் காதலன், அவள் மௌனித்து விட்டால் அத்தனை புலன்களும் அடங்கி சுற்றம் அத்தனையும் இருண்டு சூனியவெளிக்குள் சிக்கிச் சுழல்வான். காதலென்றாலே சொந்தச் செலவிலே சூனியம் வைப்பது தானே!

சூனியம், ஒன்றுமே இல்லாத நிலை. பூச்சிய வெளி. புலங்கள் ஒன்றை ஒன்று புறந்தள்ளும் நிலை. இங்கே காதலினால் ஈர்க்கப்பட்டு அதுவே உடல், பொருள், ஆவியாக நினைத்து அது ஒன்றே கதிமோட்சமென்று உருண்டு பிறழ்வது. அதுவே வாழ்வென்று விம்மி விம்மி கொண்டாடி செத்து மடிவது. அந்த சூனியம் வைத்த சூனியக்காரியே தேவியென்று, அவள் காலடியை நாளும் பொழுதும் தொழுவது.

“வசியக்காரி வசியக்காரி

வலைய வீசி போறாளே

வசியக்காரி வசியக்காரி

வளைச்சி போட்டு போறாளே”

காதலி பேச்சு மயக்கும் மாய மந்திரம். அது தரும் போதை இவனை கட்டும் வசியம். அவள் செய்த ஏவல் காதலெனும் வைப்பு. பில்லி வைத்த சூனியக்காரி அவள். விரும்பியே செய்வினை வாங்கிய பொம்மை இவன். மனம் விரும்பி மாந்திரீகத்தில் மாட்டிக்கொள்கிறான்; சித்தம் கலங்கி தவிக்கிறான். நல்ல சூனியக்காரியை சேர்த்துக்கொண்டு சூனியம் வைப்பது வரம். அவளால் அவனும் இவனால் இவளும் ஆசிர்வதிக்கப்படும் பெருவாழ்வு அது.

//ஏன் கலித்தொகை மொழியில் பாடுகிறாய்

ஏன் குறுந்தொகை தமிழை தேடுகிறாய்

என் பாமர மொழியில் பாடாயோ//

அவள் குரல் கொடுத்த வெறியில் காதல் பித்து தலைக்கேறி  வசியம், செய்வினை என்று அவளுக்கு புரியாத கதைகளெல்லாம் பேசி சங்கத்தமிழில் அவள் மேல் பாசுரங்கள் கோர்க்கிறான்.

மானே! தேனே! மயிலே! குயிலே! மணிவிளக்கே! தேன்மலரே! பால்நிலவே!

இன்னும் பைத்தியம் முற்ற, சங்கத்தமிழும் சந்தத்தில் இணைகிறது.

நறுமுகையே! நீல ஆம்பலே! நன்நிலவே! வித்தாரக்கள்ளியே!

இவளுக்கு புரியவே இல்லை.

பழஞ்சோறே! பச்சை மிளகாயே! பாலாச்சுளையே! வறுத்த கச்சானே! புட்டே! முட்டைப்பொரியலே! ஆட்டிறைச்சிக்குழம்பே!

இது தானே இவன் வாழ்வாய் இருந்தது! இந்த பாமரனுடைய மொழி இது தானே! இவன் கவி பாடினாலும் இப்படித்தானே பாட வேண்டும்! இதென்ன? புரியாத சங்ககால தொகைகள் எல்லாம் இந்த பாமரன் நாவில் நர்த்தனம் ஆடுகிறது?

“காதலித்தால் கவிதை வரும் கண்டுகொண்டேன் பெண்ணாலே”

என்பது உண்மை தான் போல! என்று அவள் நினைக்க, இவனோ

//கண்கள் பார்த்தேன் கவி ஆனேன்

இன்னும் பார்த்தால் எங்கே போவேன்

உன்னாலே கம்பன் தாண்டுவேன்//

காதலில் மூழ்க, தமிழ் காதலனுக்குள் ஊறுகிறது. ‘கவி பாடு கள்வா” என்று அவள் கண் ஜாடை சொல்ல, அதுவும் எப்படியான கண்கள்?

//உன் வாட்டடங்கண் என்னை வாட்டுதடி//

வாட்டடங்கண் – நீண்ட வாள் போன்று பட்டொளி வீசும் கூரிய கண்கள்.

“வாட்டடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவி தான்”

இறைவனின் பெருமையை மணிவாசகர் பாடிக்கொண்டி வீதி வழியே செல்லும் போது, மணிவாசகரின் தோழிப்பெண் தூங்கிக்கொண்டிருக்கிறாள். அப்படி தூங்கிக் கொண்டிருந்தவளின் கண்களைப் போல இவளுடைய கண்களும் ஒளி பொருந்தியவை. வாட்டடங்கண்.

//உன் வளைவுகளோ என்னை வளைக்குதடி

உன் இதழ் மேலே எழுதுவேன்//

அவள் முன்னழகும் இடையழகும் பின்னழகும் அது கொண்ட நெழிவுகளும் வனப்பும் இவனை மதி மயங்கச் செய்கிறது. சற்று நேரத்தில், இவன் தொடப்போகும் பாவை உடலை இப்பொழுது காதல் அலைவரிசையில் கண்களால் அளக்கிறான். உதடுகளால் அளக்க ஒத்திகை பார்க்கிறான். தையலின் அழகு கொடுக்கும் போதையினால் கம்பனையும் தாண்டி பிரவாகம் எடுத்த கற்பனை ஊற்று, சங்கத்தமிழோடு சரசம் புரிந்து புனைந்த கவிதைகளை எங்கே எழுதித் தீர்ப்பது? இதழ்களில்!

“இதழில் கதை எழுதும் நேரமிது

இன்பங்கள் அழைக்குது ஆ ஆ ஆ”

அவன் மன்மத பேச்சில் மயங்கிய இவளும்,

//உந்தன் சேவை இவள் செய்யும் போது

என் தேவை அது தீருமே

என் வாழ்வே மாறுமே//

காதல் காய்ந்து கனிந்து வாசம் வீசும் போது, காதல் கொண்ட கன்னி காதலனுடன் ஊடல்  கண்டு பின் கட்டிலில் கூடுகிறாள். இவர்களோ, கட்டிலில் கூடிப் பின் காதலிக்கப்போகிறவர்கள். இப்படியாக, இல்லற இணைப்பில் தன்னவனுக்கு காதல் சேவை செய்து அதில் தனக்கான இன்பத்தை பெற்றுக் கொள்வேன் என்கிறாள் இவள். சிந்திய வெண்மணிகளெல்லாம் சிப்பியில் முத்தாக, நங்கை தாய் என பதவி உயர்வு பெறுகிறாள். வாழ்வே மாறுகிறது. தலைவனிடம் பாயானதன் இன்பத்தொடர்ச்சி. அதற்கான அரங்கேற்றம் இப்பொழுது,

//தம்தர தம்தர

கண்கள் சொந்தம் சொல்ல

தம்தர தம்தர

கண்கள் சொந்தம் சொல்ல

இதயத்தின் மொழியால்

இப்போது எழுதுங்கள் பல்லவியை//

Related posts

விபிள்டன் 2021

Thumi2021

ஏகாதிபத்தியம் Imperialism – 05

Thumi2021

நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே

Thumi2021

Leave a Comment