இதழ்-29

குட்டிச் சிவப்புப் பிரசங்கி இவள்!!!

மலர்கள் மகத்துவமானவை. சொற்பமான ஆயுள் இருந்தாலும் சிற்பமாக விருந்தளிப்பவை. மனிதன் பார்ப்பது போல் பிறப்பை வைத்து வர்க்க வேறுபாட்டை மலர்கள் பார்ப்பதில்லை. மனிதனின் சிறப்பு குணம். மலர்களின் சிறப்பு மணம். சேற்றுச் சகதியின் மணம் பலருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் அந்த சகதியில் வளரும் மலரில் சேறு மணப்பதில்லை. பூவின் வாசமே நிறைந்திருக்கும். சகதி மட்டுமா மலரின் இருப்பிடம்? காலூன்றிய இடமெல்லாம் பறங்கியர் கோட்டை கட்டியது போல வேரூன்றும் இடமெல்லாம் தாவரம் மலர்க்கொடியை பறக்க விடும். கற்பாறையோ, களிமண் தரையோ, தாவரம் இருந்தால் மலர் இருக்கும்.

இவ்வாறு அழகியலையும் வாழ்வியலையும் அடிநாதமாக கொண்ட பூக்களால் நிறைந்திருப்ப தால்த்தான் பூமி என்று பெயர் வந்திருக்க வேண்டும். நடந்தவற்றை விடுங்கள். அங்கே நடப்பதைப் பாருங்கள்.

பூமியைச் செம்பட்டுப் போர்வையால் போர்த்தியிருக்கிறது வைகறை. செக்கஞ்சிவந்த வானை நோக்கி மெல்ல விரிகிறது ஒரு செவ்விதழ்ப்பூ.

இரவெல்லாம் ஒற்றைக்காலில் கதிரவனை எண்ணி காதல்த் தவம் புரிந்த காதலி அதிகாலையில் வரம் பெறுகிறாள்.
நிலத்தில் நின்று நீரால் வளர்ந்து வான்நோக்கி வாசம் எனும்
தூது அனுப்புகின்ற அக்கினிச் சுவாலையாய் ஐம்பூதங்கள் சேர்த்து செதுக்கிய சிற்பமாய் செவ்விதழ் விரித்து மலர்கிறாள் மலர்.

காலையில் மலரும் பூ- மனைவி….
இரவில் மலரும் பூ- காதலி….

இதை எப்படி எடுத்துக் கொள்வது என்பது உங்கள் விருப்பம். ஒன்று மட்டும் சொல்கிறேன். காலைப்பூக்களின் வாழ்க்கை பட்டப்பகல் வாழ்க்கைதான். ஆனால் பகிரங்கமான வாழ்க்கை அல்ல.

இருட்டின் நடுவே ஒரு வியப்புக்குறி போல் காத்துநின்று விடியும் பொழுதினில் ஒரு விடையைச் சொல்கிறது இச்செவ்விதழ்ப்பூ.

இந்தக் குட்டிச்சிவப்புப் பிரசங்கி செங்கதிரோனிற்கே எதிரில் நின்று பிரசங்கம் செய்கிறது. தலைக்கணமும், தற்தாழ்வும் கொள்ளாது தலை நிமிர்ந்து பேசுகிறது. என்ன பேசுகிறது?

இரவெல்லாம் ஒளிந்திருந்து வானை உற்றுப்பார்த்து கண்டு கொண்ட இரகசியங்களை அதிகாலையில் பேசத் தொடங்குகிறது. நட்சத்திரங்கள் செய்கின்ற கண்சிமிட்டு சில்மிசங்களைஇ விடிந்ததும் மொய்க்கவென போட்டியிட்டு விழித்திருக்கும் பூச்சிகளைஇ சுவாலை என்றெண்ணி இதை ஊதி அணைக்க முயன்று முயன்று தோற்றுக்கொண்டிருந்த முட்டாள் காற்றை பற்றி என இரவிரவாய் நினைத்து சிரித்ததை எல்லாம் அதிகாலை முதல் பேசத் தொடங்கிறது செவ்விதழ் மலர்.

ஒரு சிறுமி வந்து மலர்ந்து கொண்டிருக்கும் மலரை ஆசையோடு பார்க்கிறாள். ஒரு குழந்தை ஆச்சரியத்தோடு பார்க்கிறது. ஒரு வாலிபன் காதலியாகப் பார்க்கிறான். ஒரு கவிஞன் கவிதையாய்ப் பார்க்கிறான். அது அனைவரையும் பற்றற்ற புன்னகையோடு பார்க்கிறது.

ஒருவன் நீரூற்றி விட்டுப் போகிறான். நனைந்த இழத்கள் கண்டு இன்னொருவன் பூக்களிற்கு வியர்க்கிறது என்று விசிறி விட்டுப் போகிறான். புன்னகை மாறாமல் ஒரு துறவியைப் போல் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிறது அந்தப் பேரழகு.

டாக்லியா பூ என்று தனக்கொருவன் பெயர் சொல்லிக் கொண்டே தன்னைச்சுற்றிச் சுற்றிப் புகைப்படம் எடுப்பதை பொறுமையோடு இரசித்துக் கொண்டிருந்தது அது. அவன் எடுத்த அத்தனை புகைப்படத்திலும் தெரிந்த அந்த சலிக்காத புன்னகையைக் கண்டு நெகிழ்ந்தவன் பூமியின் ஆகச்சிறந்த மாதிரியழகி நீதான் என்று தனது புன்னையால் அதற்குச் கிரீடம் இட்டுச் சென்றான்.

பசியோடு ஒரு ஏழைச்சிறுவன் அதைப் பழமென்றெண்ணிப் பறிக்க வந்தான். அருகில் வந்த பின்னும் அதன் ஆனந்தப் புன்னகை மாறாத விந்தை கண்டு ஆச்சரியப் புன்னகை கொண்டான். தன் புன்னகையில் இன்னொரு புன்னகை உருவாவதை எண்ணி தன் புன்னகை வென்றுவிட்டதாய் கைதட்டிச் சிரித்தது மலர்.

புத்தி பேதலித்த ஒரு முதியவன் என்ன நினைத்தானோ தெரியாது. பூவிதழ்களை நோக்கி கல்லெடுத்தெறிந்தான். பதறாதீர்கள். எந்தக்கல்லும் அந்த இதழ்களில் படவில்லை. ஆனால் அவன் எதற்காக கல்லெறிகிறான்?
பூவிதழை ஏதாவது கனியென்று நினைத்துக் கல்லெறிகிறானா? அல்லது சிரிக்கும் பைத்தியம் என்று நினைத்துக் கல்லெறிகிறானா? அல்லது புன்னகை தர வந்தவர்களுக்கெல்லாம் இந்த உலகம் தந்த மரியாதையைத் தருவதற்காய் கல்லெறிகிறானா?

வெளிச்சத்தின் உச்சமான பொழுதில் தட்டுத்தடுமாறி வந்த குருடன் ஒருவன் தவறி விழுந்ததில் பூவிதழிலும் பலமாக அடிபட்டு விட்டது. பூவைப் பாருங்கள். அதன் கண்களில் தெரிவதென்ன கண்ணீரா? அப்படியாயின் அவை இப்போது அழுகின்றனவா?

உண்மையைச் சொல்லுங்கள்!

அவை தன் இதழ்கள் பிய்ந்த வலியில் தான் அழுகின்றனவா?

Related posts

விபிள்டன் 2021

Thumi2021

ஈழச்சூழலியல் 16

Thumi2021

வெள்ளைக் காதல் – 04

Thumi2021

Leave a Comment