பல்உறுப்பு அழற்சி நிலை (MIS-C)என்பது கொவிட்- 19 நோய்த் தொற்றுடன் தொடர்புடையதாக ஏற்படும் ஒரு கடுமையான நிலமையாகும். இதுவே கோவிட் ஏற்படும் குழந்தைகளில் மரணத்திற்கான பிரதான காரணமாக அமைகின்றது.
குழந்தைகளில் கொவிட்- 19 நோய்த் தொற்று தீவிரம் குறைந்ததாக காணப்பட்டாலும், பல்உறுப்பு அழற்சி நிலை (MIS-C) ஆனது அரிதாக ஏற்படலாம். ஆனால் அந்நிலை ஏற்படுமிடது அதி தீவிர சிக்கல் நிலைமைகளை உருவாக்கும்.
இந்த நோய் நிலைமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடலில் இதயம், நுரையீரல், சிறுநீரகம், தோல் மற்றும் சமிபாட்டுத் தொகுதி போன்ற பல உறுப்புக்கள் அழற்சிக்கு உள்ளாகின்றன.
2020 ம் ஆண்டு சித்திரை மாதம் தொடக்கம் பல உறுப்பு அழற்சி நிலை (MIS-C) பற்றிய அறிக்கைகள் உலகளாவிய ரீதியில் வெளியிடப்பட்ட போதிலும், இலங்கையில் அண்மையிலேயே இந் நோய் நிலை ஏற்பட்டுள்ளது. வட மாகாணத்திலும் கடந்த மாதங்களில் இந்நோய் நிலமை சிறுவர்களை பாதிக்க தொடங்கியுள்ளது.
சில குழந்தைகள் கொவிட்-19 நோயின் எந்தவொரு அறிகுறிகளையும் வெளிக்காட்டாது, பல்உறுப்பு அழற்சி (MIS-C) நிலையின் அறிகுறிகளை வெளிக்காட்டலாம்.
பல் உறுப்பு அழற்சி நிலையின் (MIS-C) அறிகுறிகள்.
▪️காய்ச்சல்
▪️வயிற்றுவலி
▪️வயிற்றோட்டம்
▪️கழுத்துவலி
▪️தோலில் ஏற்படும் மாற்றங்கள்.
▪️கண்கள் சிவத்தல், உதடு, நாக்கு சிவத்தல்
▪️வழக்கத்திற்கு மாறாக சோர்வு மற்றும் களைப்பு ஏற்படல்.

அதிதீவிர நிலைக்கான அறிகுறிகள்
•சுவாசிப்பதில் சிரமம்
•மார்புப் பகுதியில் இறுக்கும் உணர்வு
•நித்திரையில் இருந்து விழிக்க இயலாமை
•வெளிறிய தோல்
•கடுமையான வயிற்றுவலி
•குருதி அமுக்கம் குறைவடைதல.
•வலிப்பு
எதிர்பார்க்கப்படும் பரிசோதனை முடிவுகள்
•செங்குருதிச் சிறுதுணிக்கைகள் குறைவடைதல்(Reduced Haemoglobin)
•நிணநீர்குழியங்கள் குறைவடைதல்( Reduce lymphocyte count)
•நடுநிலைநாடிகள் அதிகரித்தல் (Increase Neutrophil counts)
•ESR, CRP, LDH, Ferritin ஆகிய பரிசோதனைகளில் பாரிய அதிகரிப்பு
•ஈரல் காட்டிகளில் எற்படும் மாற்றங்கள்
•இருதய காட்டிகளில் ஏற்படும் மாற்றங்கள் – Troponin I அதிகரிப்பு
• எக்கோ(Echo) பரிசோதனையில் சில மாறுதல்கள்

எவ்வாறு சிகிச்சையளிப்பது ???
- தொடர்ச்சியான கவனிப்பு (Close monitoring)
- IVIG எனப்படும் Immunoglobulin
- Steroids
- குருதிஉறையா மருந்து (Enoxaparin)
5.தொடர்ச்சியான அளவீடுகளும் கவனிப்புக்களும்
ஆக குழந்தைகளுடன் தொடர்புடையவர்கள் கோவிட் நோயால் பாதிக்கப்படும் போது குழந்தைகளையும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி, குழந்தைகளுக்கான தொற்று இருக்கின்றதா என அறிய வேண்டும்.
குழந்தைகளுக்கு தொற்று ஏற்படும் போது அவர்களை சரியாக கவனிப்பதும் அவசியமாகும்.
