இதழ்-30

சித்திராங்கதா – 30

அடுத்த திட்டம்

பறங்கியனின் கூடார வாயிலிலே காவல்வீரன் கால்சராயும் தொப்பியும் அணிந்து கையில் நீண்ட ஈட்டியுடன் காவல் இருந்தான். உக்கிரசேனன் வந்திருந்த செய்தியினை உள்ளே சென்று அந்நிய சிப்பாய்க்குரிய முறையில் ஒலிவேராவை வணங்கி அறியப்படுத்தினான். அனுமதி வந்ததும் உள்ளே சென்றான் உக்கிரசேனன்.

‘வா… வா… உக்கிரசேனா….
பரவாயில்லையே… உரிய நேரத்தில் நான் இருக்கும் இடத்தை அறிந்து வந்துவிட்டாயே. உன் விடயத்தில் நானும் கொஞ்சம் அவதானத்துடன் தான் இருக்க வேண்டும்’ என்று கூறி மேலுஞ் சிரித்தான் வன்னியத்தேவன்.

‘யார் இவன் வன்னியத்தேவரே; இவனிடம் நீங்கள் ஏன் அவதானமாக இருக்க வேண்டும்? ‘ என்று குழப்பமான முகத்துடன் கேட்டான் ஒலிவேரா.

‘இவன் தான் உக்கிரசேனன். என் நம்பிக்கைக்குரிய தூதுவன். வன்னி அரச ஒற்றன்’ என்று கூறியபடியே உக்கிரசேனனை நோக்கி

‘கூறு உக்கிரசேனா, ஏதோ அவசர செய்தியுடன் தானே என்னை இங்கு வரை தேடி வந்துவிட்டாய். முதலில் அச்செய்தியைக் கூறு’

‘பிரபு, யாழ்வேந்தர் வன்னியர் விழா பற்றிய அறிவிப்பை விடுத்திருக்கிறார். அவசரமாக நிகழ்த்தப் போகிறாராம்’

அதைக்கேட்ட வன்னியத்தேவனது முகத்திலிருந்த சிரிப்பு மெள்ள மறையத் தொடங்கியது.
‘என்ன வன்னியர் விழாவா? அதற்கு என்ன அவசியம் வாய்த்தது இப்போது? சங்கலியன் புதியாய் ஏதும் சதித்திட்டம் தீட்டுகிறானோ? இருக்கட்டும்’.

வன்னியர் விழா குறித்து வன்னியத்தேவன் ஏற்கனவே அறிந்திராதது உக்கிரசேனனிற்கு ஆச்சரியத்தை அளித்தது. சித்திரை முழுநிலவு நாள் குறித்து வன்னியத்தேவன் ஏற்கனவே கூறிய விடயம் எதுவென்றறியும் ஆவல் மிகுந்தது அவனிற்கு.

‘அரசே, வருகின்ற சித்திரை முழுநிலவு நாளிலே தான் வன்னியர் விழா நிகழ்த்தப்போகிறார்களாம்’

கூறிமுடித்த உக்கிரசேனன் வன்னியத்தேவன் முகத்தினை கூர்மையாக அவதானித்தான்.

வன்னியனின் விழிகள் பிதுங்கி வெளிவருவது போல் இருந்தன. கருவிழி முழுதும் வெளியே தெரியும் வண்ணம் ஒலிவேராவை நோக்கினான்.

‘என்ன சித்திரை முழுநிலவு நாளிலா? ‘

‘ஆம் பிரபு’
கூறிவிட்டு அமைதியாகவே நின்றான் உக்கிரசேனன்.

‘எப்படி… எப்படி…! அறிந்து கொண்டான் சங்கிலி எம் இரகசிய திட்டத்தை..
நிச்சயம் இது அந்த ஏகாம்பரம் தொட்டமனாரின் சூழ்ச்சி தான்… ஆ…’

மிகுந்த பணிவோடு உக்கிரசேனன் கேட்டான் ‘பிரபு, என்ன சூழ்ச்சியைப்பற்றிப் பேசுகிறீர்கள்?
எனக்கு எதுவும் விளங்கவில்லையே’

‘நீ கூட அறியாத அந்த இரகசிய திட்டத்தை அந்த மந்திரி எப்படி அறிந்தான்?
அடேய்……..’
கோபத்தில் செய்வதறியாது நின்றான் வன்னியத்தேவன்.

‘பிரபு, தாங்கள் ஏதோ இரகசியத்திட்டம் குறித்து கவலை கொள்கிறீர்கள். நான் அது என்னவென்று அறிந்து கொள்ளலாமா?’ என மெதுவான குரலில் வன்னியத்தேவனை நோக்கிக் கேட்டான் உக்கிரசேனன்.

வன்னியத்தேவன் கோபமாக உக்கிரசேனனைப் பார்த்தான். உக்கிரசேனன் பயங்கொண்டவன் போல் பாவனை செய்தான்.

‘அத்திட்டம் தான் இல்லை என்று ஆகி விட்டதே, இனி நீ தெரிந்து கொண்டு என்ற செய்யப் போகிறாய்?’
கோபம் அடங்காதவனாய்க் கொந்தளித்தான் வன்னியத்தேவன்.

அப்போது ஒலிவேரா வன்னியத்தேவனை நோக்கிக் கூறினான்.
‘இதனால் என்ன ஆகிவிடப்போகிறது வன்னியத்தேவரே, எம் திட்டத்தை முறியடிப்பதில் அவர்கள் வெற்றி கொண்டதாய் எண்ணிக் கொள்ளட்டும். பரவாயில்லை. எம் இலக்கை அவர்களால் ஒரு போதும் வெல்ல முடியாதே, நாம் அடுத்த திட்டத்தை நோக்கி முன்னேறிக் கொண்டே இருப்போம்’

‘சரியாகச் சொன்னீர் ஒலிவேரா அவர்களே, எங்கள் இரகசிய திட்டத்தை அந்த மந்திரி எப்படியோ மோப்பம் பிடித்து விட்டான். இருக்கட்டும். நீங்கள் சொல்வது போல் நாம் இப்போது அடுத்ததிட்டம் குறித்துச் சிந்தித்தாக வேண்டும்’

இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த உக்கிரசேனன் முகத்தில் இவர்களது இரகசியத்திட்டம் எதுவென்று புரியாத குழப்பம் தெளிவாகவே தெரிந்தது. சித்திரை முழுநிலவு நாளில் மந்திரியார் வன்னியர் விழாவை நடாத்துவதற்கு தீர்மானித்தமைக்கு ஏதோ வலுவான காரணம் இருப்பதாய் தான் சந்தேகித்தது சரிதான் என்று புரிந்து கொண்டான். ஆனால் அது என்ன இரகசியத்திட்டம் என்பது தான் அவனிற்கு இன்னும் விளங்கவில்லை.

ஆனால் வன்னியத்தேவன் அதை இனி கூறப்போவதில்லை என்பதையுணர்ந்த உக்கிரசேனன் ‘அதை எப்படியும் நான் தெரிந்து கொள்ளாமலா போய்விடுவேன்’ என்று தனக்குள் எண்ணிக் கொண்டான்.

‘என்ன உக்கிரசேனா, என்ன சிந்தனையில் இருக்கின்றாய்? இரகசியத்திட்டம் என்னவென்று உன் மேதாவி அறிவைக் கொண்டு சிந்தித்தே கண்டுபிடிக்க முயல்கிறாயோ’

‘ஐயோ, அது எங்ஙனம் என்னால் இயலும் பிரபு, நான் சிந்தித்துக் கொண்டிருந்தது வேறு விடயம் ஒன்றைப்பற்றி.
சித்திரை முழுநிலவு நாளில் வன்னியர் விழாவை நிகழ்த்துவது தங்களிற்கு ஏதோ இடர்பாட்டைத் தருகிறது என்று மட்டும் அறிகிறேன். அதேபோல் இன்னொருவரும் அவ்விழாவினால் பெருந்துன்பத்தைப் அனுபவிக்கப்போகிறார். அது குறித்துத்தான் சிந்தித்துக் கொண்டிருந்தேன் பிரபு’

‘யார் அது உக்கிரசேனா? ‘

‘சித்திராங்கதா பிரபு, பெருவணிகர் எச்சதத்தர் மகள். அவளுடைய நாட்டிய அரங்கேற்றமும் அந்நாளில் தான் நிகழ ஆயத்தங்கள் இருந்தன. எல்லாவற்றையும் மாற்றிவிட்டார் அரசர். இப்போது அவள் பெருங்கோபத்தில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். வரும் வழியில் இந்த விடயத்தை அவர்கள் காதிலும் சற்று அறியும்படி கூறிவிட்டுத்தான் வந்தேன்’

‘அந்த நாட்டியக்காரி கோபங் கொள்வதில் எனக்கென்ன ஆதாயம் இருக்கப்போகிறது உக்கிரசேனா? அவசியமற்ற விடயங்களை எதற்காக ஆர்ப்பரித்துக் கூறுகிறாய்?’

‘அவசியமிருக்கிறது பிரபு, சித்திராங்கதாவின் இல்லத்தைத் தேடி ஒரு மாவீரன் அலைந்ததாய் நான் முன்னர் ஒருமுறை கூறினேனே, ஞாபகமிருக்கிறதா பிரபு?’

‘ஓகோ….
புரிகிறது உக்கிரசேனா, புரிகிறது!
இது குறித்து நான் இன்னும் சிந்திக்கிறேன்’
என்று உக்கிரசேனனது தோள்களில் தட்டியபடியே கூறிய வன்னியத்தேவன் திடீரென்று அந்தக்கூடாரத்தின் மேற்கூரையை பார்த்தபடி கர்வத்தோடு பேசத் தொடங்கினான்.

‘அடேய் சங்கிலியா, உன்னை வீழ்த்துவதற்கு பேராயுதங்கள் திரட்ட வேண்டும் என்று நினைத்தேன். சிறு துரும்பு போதும் என்று நீயே உணர்த்தி விட்டாய். என் திட்டத்தை முறியடிக்க அவசரமாய் வன்னியர் விழா நிகழ்த்திகிறாயோ… வருகிறேன்.. வன்னியர் விழாவிற்குத் தக்க சன்மானம் கொண்டு வருகிறேன். காத்திரு…’
என்று கூறி மீண்டும் விலா நோகச் சிரித்தான்.

நீங்களும் காத்திருங்கள். இனி நாமும் வன்னியர் விழாவில் சந்திப்போம்.

Related posts

குறுக்கெழுத்துப்போட்டி – 27

Thumi2021

ஈழச்சூழலியல் 17

Thumi2021

சொந்தச் சிறைக்குள் சுதந்திரம்

Thumi2021

Leave a Comment