காதல் முருகனைக் காதலி முருகு என்பது அழகு. அதன் மறு பெயர் அன்பு. அவன் பால் காதல் கொண்டோர் அனேகர். இறைவனின் இரு-பெண் திருமணம் சமூக சமத்துவத்தைக் காட்டி நிற்கிறது. தேவலோக அரசனின் மகளைத் திருமணம் செய்த அதே இறைவன், தானே வலிய வந்து மனிதர்களில், அதிலும் சாதி முதலிய வேறுபாடுகள் பாராமல் வேடுவர் குல மகளைத் திருமணம் செய்திருக்கிறான். இதை நம் புராணங்கள் மிகவும் தெளிவாகக் காட்டி வந்துள்ளன.
இவை தவிர பூவுலகைச் சேர்ந்த வள்ளியம்மைக்குக் கொடுக்கப்படும் உயர்ந்த அந்தஸ்து தனிச்சிறப்பு. எவருமே ”முருகனுக்கு வள்ளி” என்றே கூறக் கேட்கிறோம். மேலும் வள்ளி தமிழ் மகள். இது தமிழுக்குக் கிடைத்த சிறப்பு.
”…ஒரு கோடி முத்தம் தெள்ளிக் கொழிக்கும் கடற் செந்தில் மேவிய சேவகனே
வள்ளிக்கு வாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமே..”
என்று இதைப் பற்றி அருணகிரிப் பெருமான் உருகிப்பாடுகிறார்.
ஆணும் பெண்ணும் கூடி வாழும் வாழ்விற்கு இந்துப்பண்பாடு கொடுத்த முதன்மையையும், காதற் சிறப்பையும், அன்னை உமையாளுக்கும் இறைவனுக்கும் நிகழ்ந்த திருமணமும் வெளிப்படுத்துகின்றது.
”கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே”
என்ற ஞானசம்பந்தர் வாக்கு சிந்திக்கத்தக்கது.
சைவ – வைஷ்ணவ ஒற்றுமை
கந்தபுராணக் கதையுடன் இராமாயணக் கதையை ஒப்பு நோக்கும் போது சைவ-வைஷ்ணவ ஒற்றுமையை உணரலாம். சைவசமயிகளின் பரம்பொருளான சிவபெருமானின் புதல்வன் முருகன். வைஷ்ணவர்களின் பரம்பொருளான விஷ்ணுவின் புதல்விகளாகவும் கொண்டாடப்பெறும் வள்ளி, தேவசேனா தேவியரைக் கல்யாணம் செய்தமை சமய ஒற்றுமை. தவிர முருகன் சிவகுமாரனே ஆகிலும் விஷ்ணு அம்சம் நிரம்பப் பெற்றவன். ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களில் நடைபெற்ற அற்புத நிகழ்ச்சிகளோடு அவனது ஒவ்வொரு செய்கையையும் இணைத்துப் பார்க்கும் போது ஏற்படும் இன்பமே தனியானது. அலாதியானது.
இதனை உண்மையிலேயே செயற்படுத்தியவர் சந்தக்கவி அருணகிரியார். திருப்புகழ் எங்கும் முருகன் பெருமை போலவே திருமால் பெருமையும் நிறைந்திருக்கிறது. தவிர, முருகனை அவர் ”பெருமாள்” என்றே விளித்துப் பெருமை செய்திருக்கிறார்.
”காலமாய்க் காலமின்றிக் கருமமாய் கருமமின்றி
கோலமாய்க் கோலமின்றி குணங்களாய் குணங்களின்றி
ஞாலமாய் ஞாலமின்றி அநாதியாய் நங்கட்க்கு எல்லாம்
மூலமாய் இருந்த வள்ளல் மூவிரு முகங்கொண்டுற்றான்”
என்ற கச்சியப்ப சிவாச்சாரிய சுவாமிகளின் திருவாக்கை மனங் கொண்டு அப்பெருமானின் திருவடிகளில் சரண்புகுவோம்.
முருகனுடைய ஆறுதிருமுகங்களும் அன்பு, அறிவு, ஆற்றல், அழகு, அமைதி, ஆளுமை ஆகிய பண்புகளை உணர்த்தும். நாற்றிசையும் மேலும் கீழும் ஆக, ஆறு பக்கங்களும் பார்த்து நிற்கும் இத்திருமுகங்களை நம்புவோருக்கு துன்பம் எத்திசையாலும் வாரா. அவனது கரங்கள் பன்னிரண்டும் கொடுப்பதற்கென்றே பிறந்தன. அதனை,
”முழுமதி அன்ன ஆறுமுகங்களும் முன் நான்காகும்
விழிகளில் அருளும் வேலும் வேறுள படையும் சீரும்
அழகிய கரம் ஈராறும் அணிமணித் தண்டை ஆர்க்கும்
செழுமலரடியும்…”
என்று தெவிட்டாத தேனாகத் தமிழில் பாடுவார் கச்சியப்பர். கந்தபுராண காவிய ரசனையை உளத்தில் கொள்வோம். செம்மொழியான செந்தமிழின் தலைவன் முருகன். அவனடி பணிவோம். தமிழ் இந்து தர்மம் சிறக்கப் பிரார்த்திப்போம்.