விவசாயம் நமது நாட்டின் முதுகெலும்பு என்கின்றோம். அதனால்தானோ என்னவோ யாரும் திரும்பி பார்க்க முடியாத துறையாக விவசாயத்துறை காணப்படுகின்றது.
உலளாவிய ரீதியில் பெரும் அச்சத்தை உண்டுபண்ணுகின்ற காலநிலை மாற்றத்தால் முதலில் பாதிப்புறுகின்ற தரப்பாக விவசாய சமூகம் காணப்படுகின்றது.அரசின் பொருளாதார கொள்கைகள், வரி நடைமுறைகள் என பல்வேறு தரப்பட்ட நெருக்குவாரங்களுக்கு உள்ளாகின்ற தரப்பாகவும் விவசாய சமூகமே காணப்படுகின்றது. இந்நிலை இவ்வாறாகவே தொடருமாக இருந்தால் காலப்போக்கில் விவசாயம் செய்ய ஆட்களை தேடுகின்ற நிலை நிச்சயம் ஏற்படும். பெயரளவில் புதுப்புது திட்டங்களை விவசாயத்துறை சார்ந்து நடைமுறைப்படுத்தினாலும் அவை முறையாக விவசாயிகளை சென்றடைகின்றதா? அவர்களுக்கு உரிய விதத்தில் குறித்த திட்டங்கள் பலன் தருகின்றதா என்ற பெரும் வினா தொக்கி நிற்கின்றது.

FAO(Food and Agriculture Organization) உடைய தரவுகளின் படி எமது நாட்டில் 33.7% வேலைவாய்ப்பு விவசாயத்துறையில் நேரடியாக தங்கியுள்ளன. இதில் நாம் உற்பத்தி செய்கின்ற விவசாயப்பட்டதாரிகள் விவசாயத்துறையில் பணியாற்றுகின்றார்களா?அதற்குரிய வழிவகைப்பொறிமுறை இருக்கின்றதா? என்ற கேள்வியும் எம்மில் எழாமல் இல்லை. எமது நாட்டின் நிலப்பரப்பில் 41.8% அளவான நிலப்பரப்பு விவசாயத்துறைக்கு பயன்படுத்தப்படுவதாகவும், நாட்டின் மொத்த GDPயின் 8%க்கும் அதிகளாவான வருமானப்பங்குதாரராக விவசாயத்துறை காணப்படுவதாகவும் FAO அறிக்கை கூறுகின்றது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாப்பது நாட்டின் முதற்கடமையாக அமைதல் வேண்டும். அந்த வகையில் தற்போதைய அரசாங்கத்தினால் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அசேதன பசளைகள் தொடர்பான திடீர் தடை விவசாய பெருமக்கள் மத்தியில் பெரும் விசனத்தையும் அதிருப்தியையயும் ஏற்படுத்தி உள்ளது. 1960களின் பின்னான காலப்பகுதிகளிலிந்தே அசேதன உரப்பாவனைகளுக்கு பழக்கப்பட்டு போன விவசாயிகளை ஒரு இரவுக்குள் இயற்கை விவசாயம்/ சேதன விவசாயத்துக்கு திரும்புங்கள் என்பது பொருத்தப்பாடான அல்லது நடைமுறைச்சாத்தியமான விடையமில்லை.
நிச்சயமாக சூழலை நேசிக்கின்ற எந்தவொரு நபரும் சேதன விவசாயத்தை விரும்புவார். ஆனால் அத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் என்பது நீண்ட படிமுறையாக்கல் செயற்பாட்டினூடாக மேற்கொள்ளப்பட வேண்டும். எந்த விவசாயியும் நாட்டின் செல்வந்தர்கள் பட்டியலில் முன்னிலையில் இல்லை. எனவேதான் விவசாயினுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு,அவர்களின் சிந்தனைப்புள்ளியிலிருந்து யதார்த்த நடைமுறைகளூடாக திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இன்று ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடியினால் 1500 ரூபாவாக இருந்ந அசேதன உரம் கறுப்புச்சந்தையில் 10000 ரூபாவாக விற்பானையாகின்றது. மாற்றாக சேதன உரம் என்றால் 35000 ரூபாவுக்கு கனரக வாகனத்தில் பறிக்கப்பட்ட எரு தற்போது 70000ரூபா ஆக விற்பனையாகிறது. எனவே பாதிப்பு யார் சார்ந்தது என்பது நமக்கு தற்போது புரிந்திருக்கும்.பாமர விவசாயி தனது உற்பத்தியினை விலை ஏற்றப்போக்கில் விற்பனை செய்ய வழி இருக்கின்றதா என்றால் நிச்சயம் இல்லை என்பதே பதிலாகும்.
இவ்வாறு நிலைமைகள் இருக்க அறிவியல் யதார்த்தக்கண்ணோடு அப்பிரச்சினையை அணுகினால் நாகரிக வளர்ச்சி, நவீன தொழில்நுட்பம், உலகமயமாக்கல் போன்றன விவசாய மண்ணை உயிர்ப்போடும் அடுத்த தலைமுறைக்கு உதவும் வகையிலும் பேணி பாதுகாத்து வருவதிலிருந்து தவறி விட்டது. இதன் காரணமாக இன்று உலகின் பல பாகங்களிலும் மண் வளம் பாதிக்கப்பட்டு வருகின்றது. 2015 ஆம் ஆண்டின் உலக மண் வள பாதுகாப்பு அறிக்கைகளின் பிரகாரம் சூழல் பாதிப்பில் பிரதான இடத்தை மண்மாசடைதல் பெற்றுள்ளது. இது நேரடியாக மனிதனின் உணவில் தாக்கம் செலுத்தக் கூடியதாகும்.

மண்மாசுறுதலில் பிரதான இடத்தை இரசாயன களை நாசினிகள் பெறுகின்றன. இன்று நவீன விவசாய நடவடிக்கைகளில் முக்கிய இடத்தை அதிக வீரியம் கொண்ட இராசாய களை நாசினிகள் பிடித்துள்ளன. தொடர்ச்சியான இரசாயன களை நாசினிகளின் பாவனையே விவசாய மண்ணை மலடாக்கியுள்ளதாக உலகின் பெரிய விவசாய நாடுகளில் ஒன்றான இந்தியாவைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகின்றனர். அந்த வகையில் மிகச்சிறிய விவசாய நாடான இலங்கையும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது. மண் வளம் பாதிக்கப்பட்ட பிரதான நாடாக தெற்காசியாவில் இலங்கை விளங்குவதாக உள்ளூர் ஆராய்ச்சியாளர்களே உறுதி செய்துள்ளனர்.
விவசாய நடவடிக்கைகளுக்கு அதிக பொசுபேட் மற்றும் ஆர்சனிக் கலந்த இரசாயன உரங்களை பயன்படுத்தி வருவதால் நாட்டின் வடமத்திய மாகாணத்தில் சிறுநீரக நோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சின் தகவல்களின் படி இவ்வகை சிறுநீரக நோயால் (Chronic Kidney Disease) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,479 ஆகும். இரசாயன களை நாசினிகள் விளை நிலங்களில் ஊடுருவப்பட்டு நீரில் கலப்பதால் அந்நீரை அருந்துபவர்களுக்கு இத்தாக்கம் அதிகம் என்கின்றது ஆய்வு. அதிர்ச்சி தரும் வகையில் அடுத்த ஆண்டே (2015) இந்த எண்ணிக்கை 20,828 ஆக அதிகரித்தது. மட்டுமன்றி இலங்கையில் மாதமொன்றுக்கு பார்வை குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 30 ஆக உள்ளதாகவும் சிறுநீரக நோய் மற்றும் புற்றுநோய்களின் தாக்கம் எப்போதுமில்லாது அதிகரித்து வருவதாகவும் மருத்துவர்கள் அச்சம் வௌியிட்டுள்ளனர்.

இவை அனைத்துக்கும் தீர்வாகவே திடீரென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த வாரம் இரசாயன களை நாசினி இறக்குமதிக்கு தடை விதித்துள்ளார். அதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட காரணங்களை முன்வைத்து அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட முடிவு வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் இது எந்தளவுக்கு நடைமுறைக்கு சாத்தியப்படப்போகின்றது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்தியாவானது தற்போது இரசாயனமற்ற இயற்கை உரங்களை பயன்படுத்த ஆரம்பித்து விட்டது. அதற்கான சகல வளங்களும் அங்குள்ளன. இலங்கையில் அவ்வாறில்லை. மேலும் இந்த திடீர் மாற்றங்களுக்கு விவசாயிகள் பழகி வருவதை விட, இத்தனை நாட்களாக இராசாயன உரங்களுக்குப் பழகிப்போன எமது நாட்டின் மண் மற்றும் கலப்பின பயிர் விதைகள் அதற்கேற்றவாறு தமது தன்மையை பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையிலிருந்து உள்ளூர் பயன்பாட்டுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் தாவர உணவுப்பொருட்கள் வரை இதில் தாக்கம் செலுத்துகின்றன.

இந்த அனைத்துத் தரப்பினரையும் ஈடு செய்யக்கூடிய இயற்கை சேதன உரங்கள் பயன்பாட்டில் இருக்கின்றனவா , இதற்கு முன்பு பெற்ற விளைச்சளை இதன் மூலம் பெற முடியுமா, இரசாயன களை நாசினி வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள், அவற்றை இறக்குமதி செய்யும் விநியோகிக்கும் நிறுவனங்கள் இத்துறையோடு நேரடியாகவும் மறைமுகமாகவும் இணைந்திருக்கும் இலட்சக்கணக்கானோரின் எதிர்காலம் குறித்து அரசாங்கம் யோசித்து தான் இந்த முடிவை எடுத்ததா போன்ற பல கேள்விகள் எழுகின்றன
ஆராய்வோம்……..
த.விதுர்ஷன்.
மாணவன்,
கொழும்பு பல்கலைக்கழகம்.