இதழ்-30

சொந்தச் சிறைக்குள் சுதந்திரம்

சிலந்தி யார் வீட்டுக்குள்ளும் தனக்கென்று தனிவீடு கட்டிக்கொள்ளும் தன்மரியாதைப் பூச்சி. உணவு, உடை, உறையுள் என மனிதனின் அடிப்படைத் தேவைகள் தனித்தனியானவை. ஆனால் வலை பின்னுகின்ற சிலந்திக்கு அவை மூன்றும் ஒன்றாகி விடுகிறது. எச்சில் நூலினாலே வலை எனும் உடை உடுத்தி அதன் மூலமே தனக்கொரு வீட்டைக் கட்டி அதைக்கொண்டே உணவையும் சம்பாதித்து விடுகிறது புத்திசாலிப் பூச்சி.

சிலந்தியைப் பார்த்த கண்களால் இப்போது உலகத்தையும் கொஞ்சம் பாருங்கள். எத்தனை வலைகள் இங்கு இரைக்காக காத்திருக்கின்றன என்று பாருங்கள்.

தன் கரிய இழைகளால் வலைபின்னுகிறது இரவு. அதில் சிக்கித் துடிக்கின்றன நட்சத்திர ஈக்கள்.

தன் கிரணங்களால் வலை பின்னுகிறது சூரியன். அதற்கு இருளே இரையாகிறது.

அதோ ஒருத்தி அலங்காரங்களால் வலை விரித்து இரைக்காகக் காத்திருக்கிறாள்.

பிரபஞ்சம் என்கிற வலையை பின்னி விட்டுக்கொண்டு யாருக்கும் தெரியாமல் ஒருவன் ஒளிந்திருக்கிறானே, அவனும் ஒரு சிலந்தியல்லவா?

சிலந்தியின் விம்பங்களை இப்படி எங்கும் காணலாம். ஆனால் வலைபின்னி இரைக்காகக் காத்திருக்கின்ற சிலந்திக்கு வலையில் இரை விழுகிறதோ இல்லையோ அவ்வலை தாண்டி சிலந்திக்கே விடுதலை இல்லை என்பது யாவரும் மறந்த ஓர் உண்மையாகும்.

சிலந்தி தன் சுதந்திரத்தை விரும்புவதில்லை போலும். ஏன் நாம் மட்டும் விரும்பிகிறோமோ?

சுதந்திரத்தைப் பேசுகின்றோம்? உண்மையில் அதை அடைய வேண்டும் என்று எண்ணம் கொள்கிறோமா? நாமும் சிலந்தியைப்போல் சிறைக்குள் இருக்கத்தானே விரும்புகிறோம். இரைக்காகக் காத்திருக்கும் அவசரத்தில் சொந்த சிறைக்குள்ளே நாம் சிக்குப்பட்டிருப்பதை மறந்து விடுகிறோம்.

அன்பு, பாசம், நேசம், நட்பு என்கிற வலைகளைப் பின்னிக்கொண்டு நாமே அதற்குள் சிறைப்பட்டு நிற்பதை பற்றி சிந்தித்திருக்கின்றோமா?

மனிதன் எப்போதும் இந்த சிறையிலிருந்து விடுபட விரும்புவதில்லை. சிலந்தியைப்போல சிறையே தன் ஆபரணம் என்றல்லவா எண்ணி இன்பம் கொள்கிறான்.

அடிமையாய் இருப்பதே ஆனந்தம் என்பதற்குக் காதல் துறையை விட வேறென்ன சான்று வேண்டும்?
அதுதான் எவ்வளவு அதிசயமான சிறை? அங்கே கைதியாகவல்லவா எல்லோரும் போராடுகிறார்கள்.

திறக்கின்ற பாடசாலைகள் சிறைச்சாலைகளைப் பூட்டுகின்றன என்றார் ஓர் அறிஞர். அறிவுக்கண் திறக்கையில் நம் சொந்த சிறைகள் அழிகின்றனவா? அல்லது உருமாறுகின்றனவா?
இசையோ, மொழியோ, அறிவியலோ, வணிகமோ நாம் கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு விடயங்களுக்கும் நாம் அடிமையாகிக் கொண்டுதானே செல்கிறோம். அதிக விடயத்திற்கு அடிமையானவனையே பேரறிஞன் என்று சொல்கிறோம். தத்துவம், சித்தாந்தம், லட்சியம் என்று எம் ஒவ்வொருவரையும் சுற்றி ஒவ்வொருவிதமாய் வலைச்சிறைகளை மூடியமைத்துள்ளோம்.

‘பற்றெல்லாம் விட்டுவிடு’ என்று உபதேசிப்பவர்கள் கூட விடுதலைக்கு வழிகாட்டவில்லை. புதியதோர் சிறையையே அறிமுகப்படுத்துகிறார்கள்.

சுதந்திரமாக இருக்க யாராலும் இங்கு முடிவதில்லை. ஏனெனில் யாரும் அதை விரும்புவதில்லை. உண்மையில் நம் சுதந்திரம் என்பதே எமக்கு விருப்பமான சிறையை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமைதான்.

ஆம். நாம் நமது சொந்தச்சிறைகளின் கைதிகளாக இருப்பதையே விரும்புகிறோம். அதையே சுதந்திரம் என்று கொண்டாடுகிறோம்.

நீங்கள் நேர்ந்தெடுக்கும் உங்கள் சொந்த சிறைகள் குறித்து இனி மிகுந்த எச்சரிக்கையோடு இருங்கள். ஏனென்றால் உங்களுடைய பெருமைகள் எல்லாமே நீங்கள் எந்தச்சிறையின் கைதி என்பதைப் பொறுத்தே இருக்கின்றன.

பட்டாம்பூச்சி போல் சிறகுகள் கொள்ள ஆசை கொள்ள முதல் சிலந்தியைப்போல் நீங்கள் கட்டிய கூட்டுக்குள் முதலில் மகிழ்ச்சியாய் சிறையிருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

Related posts

பிளவுபட்ட உதடு மற்றும் அண்ணம் Cleft Lip and palate

Thumi2021

தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் கமலாம்பாள் சரித்திரத்தின் முக்கியத்துவம் – 04

Thumi2021

தொழிலாகி விட்டதா பணி…?

Thumi2021

Leave a Comment