இதழ்-30

தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் கமலாம்பாள் சரித்திரத்தின் முக்கியத்துவம் – 04

நிகழ்ச்சிப் போக்குகளை முன்பே கோடிட்டுக்காட்டுதல்

கமலாம்பாள் சரித்திரத்தில் பல நிகழ்ச்சிப் போக்குகளை முன்பே ராஜமய்யர் கோடிட்டுக்காட்டுகிறார். ஆருத்ரா தரிசன நாளை, குழந்தையை முத்துஸ்வாமி ஐயர் பறிகொடுத்த நாளாகவும், பின் அவர் தான் தற்கொலை செய்ய முயலும் நாளாகவும் காட்டுதல் இங்கு முக்கியமானதாகும். இதில் பழைய ஆருத்ரா தரிசன நாளின் நினைவே மீண்டும் வருகிறது. இவ்வாறு பல நயமான பகுதிகளால் நாவலை அமைத்துள்ளார். புதுமைப்பித்தன் சொல்வதுபோல் ‘கமலாம்பாள் சரித்திரம்” முற்பகுதி – நாவல், பிற்பகுதி – கனவு என்ற பெரும் அமைப்பில் அமைந்துள்ளது.

பாத்திரப்படைப்புக்கள் மூலம் அக்காலச் சமூகத்தைக் காட்டுதல்

‘நல்ல நாவல்களின் அடிப்படையே பாத்திரப்படைப்புத்தான்” என்ற கூற்றினை இந்நாவலில் வரும் பாத்திரப்படைப்புக்கள் உறுதி செய்கின்றன. கதை எழுந்த காலத்தில் தமிழ்நாட்டில் நற்குணம் பொருந்திய குடும்பப் பெண்கள் எவ்வாறு இருந்தார்கள் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு ‘கமலாம்பாள்” என்னும் பாத்திரமாகும். முத்துஸ்வாமி ஐயரின் வாழ்க்கைச்சரித்திரத்தினூடாக அக்காலத்தில் நிலவிய பிராமணிய சமூக நடைமுறைகளை விளக்கிச் சொல்வதற்கு இவள் உற்ற துணையாகிறாள். நிலமானிய சமூகத்தில் கூட்டுக் குடும்பப் பெண்கள் அந்த உறவு நிலையைத் தக்க வைத்துக்கொள்ளப் பாடுபட்ட மையை கமலாம்பாடாக ராஜம ய்யர் காட்சிப்படுத்துகின்றார்.

நிலச்சுவாந்தார்களின் குடும்ப அமைப்பு, நிலமானிய சமூக வீழ்ச்சி, கூட்டுக்குடும்பச் சிதைவு, நிலச்சுவான்தார்களுக்கு சமூகத்தில் இருந்த மதிப்பு முதலியவற்றை விளக்குவதில் முத்துஸ்வாமி ஐயர் செல்வாக்குச் செலுத்துகின்றார். ‘பெண்களுக்கே கலகம்தான் தொழில் – இப்படித்தான் கோளும் புரலியும் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்” என்று கூறுவதன் மூலம் அக்காலப் பெண்களின் நிலையை இப்பாத்திரம் மூலம் ராஜமய்யர் நிரூபிக்கின்றார். மேலும், கதை எழுந்த காலத்தின் கல்விநிலை, மாணவர்களின் மனநிலை, பால்ய விவாகம், திருமணம், களியாட்டங்கள் முதலிய நிகழ்வுகளுக்குச் சமூகத்தில் நிலவிய செல்வாக்கு, ஆசிரிய – மாணவ உறவுநிலை முதலிய பல விடயங்கள் ஸ்ரீநிவாசன் எனும் பாத்திரம் மூலம் ராஜமய்யர் வெளிக்காட்டுகின்றார். ‘பெண்களே கெட்டவர்கள்” என்ற முத்துஸ்வாமி ஐயரின் கருத்தை உறுதிப்படுத்துபவளாகப் பொன்னம்மாள் படைக்கப்பட்டு ள்ளாள். அக்காலத் தமிழ்ப் பண்டிதர்களின் நிலைமை அம்மையப்பிள்ளை எனும் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது. மேலும், சுப்பு எனும் பாத்திரத்தின் மூலம் அக்காலச் சமூகப் பெண்களின் முக்கிய செயலான ‘வம்பளத்தல்”, ‘கோள்மூட்டுதல்” முதலிய செயற்பாடுகள் இவ;டாக விபரிக்கப்படுகின்றன. எனவே ராஜமய்யர் தான் வாழ்ந்த காலத்தில், தான் கண்ட அனுபவங்களை, அக்காலச் சமூகநடைமுறை களைக்காட்ட அதற்கேற்ற வகைமாதிரியான பாத்திரங்களைப் படைத்து அக்காலச் சமூகத்தைக் காட்டுவதில் வெற்றிபெற்றுள்ளார்.

நாவலின் தொடக்கம்   

அவசரமில்லாத நிதானத்துடன் ‘கமலாம்பாள் சரித்திரம்” ஆரம்பிக்கின்றது. ‘மதுரை ஜில்லாவில் சிறுகுளம் என்ற ஒரு கிராமம் உண்டு. அந்தக் கிராமத்தின் நடுத்தெருவின் மத்தியில் ‘பெரிய வீடு” என்ற பெயருள்ள ஒரு வீடு இருந்தது.” என்று ஆரம்பிக்கின்றது. முத்துஸ்வாமிஐயர் தன் மனைவியுடன் உரையாடுவதும், தன்பிள்ளை கல்யாணியின் திருமணப் பேச்சை எடுக்க, அவரது தம்பியின் பையன் மூலம் வாத்தியார் அழைத்துவரப் படுவதுடன் முதல் அத்தியாயம் முடிகின்றது. சற்றுப் பெரிய பரந்த விஸ்தாரத்தைக் காட்டி மெதுவாய்க் கதைக்குள் புகுவது ராஜமய்யரின் இயல்பாக உள்ளது.

நாவலின் முடிவு

அடுக்கடுக்கான துயரச் சம்பவங்கள் பிற்பகுதியில், கதைத்தன்மையுடன் திருப் பங்களாய் நிகழ்ந்தாலும் முடிவென்ற தெளிவை நெருங்குகின்ற ஆசிரியரின் பரவசமும், ஞானமும், தீவிரமும், எழுத்து வன்மையும் பிரமிக்கத் தக்க அளவில் காணப்படுகின்றன. அந்த உணர்வு சாதாரண யதார்த்த வட்டத்திலிருந்து கூரிய ஓர் ஆன்மீக வட்டதிற்குள் வாசகனை இழுக்கிறது. நாவலின் முடிவிலே வேதாந்தப் பக்திச் சிந்தனைகள் சற்று அதிகமாகவே இருப்பது போலக்காணப்பட்டாலும், அந்தச் சிந்தனைகளும், விபரங்களும் கமலாம்பாள் சரித்திரத்திற்கு ஓர் ஆழத்தைத் தருகின்றன. எனவே நாவலின் பிற்பகுதி இவரது வேதாந்தக் கருத்துக்களின் பிரதிபலிப்பாகவே உள்ளது. இதனால் இந்நாவலின் பிற்பகுதியைக் கனவு எனக் கூறுவோரும் உளர். இவரின் ஞான மார்க்கச் சிந்தனையும், ஆத்மீக நாட்டமும் நாவலின் பிற்பகுதியைக் கனவுபோல மாற்றிவிட்டன எனலாம்.

ஆய்வு தொடரும்…

Related posts

சிந்தனைக்கினிய கந்தபுராணம் – 04

Thumi2021

ஆஹா! கல்யாணம்…!

Thumi2021

புதிர் 09 – காலத்தை வகுப்பவனே அரசன்

Thumi2021

Leave a Comment