இதழ்-30

புதிர் 09 – காலத்தை வகுப்பவனே அரசன்

மீண்டும் காட்டின் வழியே வேதாளத்தை விக்ரமாதித்தன் சுமந்து வந்து கொண்டிருந்த போது, அந்த வேதாளம் அவனிடம் இந்த கதையை கூறியது.

சொர்ணபுரி என்ற நாட்டை மன்னன் வீரபாகு சீரும் சிறப்புமாக ஆண்டுவந்தான். ஆனால் அவனுக்கு வாரிசு இல்லை. தனக்கு பிறகு தன் நாட்டை ஆள வாரிசு இல்லையே என்று கவலை கொண்ட மன்னன், வீரமும் அறிவாற்றலும் மிக்க ஒருவன் தன் காலத்திற்கு பிறகு இந்த நாட்டை ஆளவேண்டும் என எண்ணினான். இதை பற்றி தனது மந்திரியிடம் ஆலோசித்தான். அப்போது இந்நாட்டின் எல்லையில் இருக்கும் ஆச்சிரமத்தில் ஒரு துறவி, இளைஞர்களுக்கு வீரக்கலைகளை கற்றுத்தந்து, அவர்களை மிகச் சிறந்த வீரர்களாக்குவதாகவும், அங்கு சென்று பார்த்தால் இந்நாட்டை ஆளும் தகுதியுடைய நபர் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறினார்.

அதன் படி மன்னன் வீரபாகுவும், அவன் மந்திரியும் அந்த ஆச்சிரமம் சென்று தங்களின் எண்ணத்தை அந்த துறவியிடம் கூறினர். இதை கேட்ட அந்த துறவி, தான் அவர்களுக்கு உதவுவதாக கூறி, தனது ஆச்சிரமத்தின் மிகச் சிறந்த வீரர்களான ராமன், ஜெயன், கௌதமன் என்ற மூவரை அழைத்து, ஆளுக்கு ஒரு திசையில் பயணிக்குமாறும், ஒரு மாதத்திற்கு பிறகு இந்த ஆச்சிரமத்திற்கு திரும்பி வந்து தங்களின் அனுபவத்தை கூற வேண்டும் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.

ஒரு மாதத்திற்கு பிறகு அந்த மூவரும் ஆச்சிரமத்திற்கு திரும்பினர். அங்கு மன்னன் வீரபாகுவும் அவனது மந்திரியும் அந்த துறவியுடன் இருந்தனர். அப்போது ராமன், தான் வடதிசை நோக்கி பயணித்ததாகவும், அப்போது ஒரு நாட்டின் மன்னனுக்கு எதிராக சில இளைஞர்கள் ஒருவனின் வழிகாட்டுதலின் படி புரட்சியில் ஈடுபட, காட்டின் மறைவான இடத்தில் ஆயுத பயிற்சி மேற்கொண்டிருந்ததாகவும், எனவே அக்கூட்டத்தின் தலைவனை தான் அம்பெய்தி கொன்று விட்டதாகவும் கூறினான்.

இப்போது ஜெயன், தான் தென் திசையை நோக்கி பயணித்ததாகவும், அந்த திசையின் பல இடங்களில் கொள்ளையர்களின் அட்டகாசங்கள் அதிகமிருந்ததால் அங்குள்ள இளைஞர்களுக்கு, தான் வாள் போர் கலையை கற்றுத்தந்து அவர்கள் தங்களை தற்காத்து கொள்ள தான் உதவியதாக கூறினான்.

மூன்றாவதாக கௌதமன், தான் கிழக்கு திசையை நோக்கி பயணித்ததாகவும், வழியில் காட்டின் ஓரத்திலுள்ள ஒரு குளத்தில் ஒரு யானை சிக்கி தவித்ததைக் கண்டு, யானையை மீட்டு அதன் கூட்டத்தில் சேர்த்ததாகவும் கூறினான்.

இதையெல்லாம் கேட்ட வீரபாகுவும், அவன் மந்திரியும் வீரம் நிறைந்த இவர்களில் யாரை தங்கள் வாரிசாக தேர்ந்தெடுப்பதென குழப்பம் கொண்டனர். சிறிது நேரம் ஆலோசித்த பின்பு அவர்களின் அறிவாற்றலின் அடிப்படையில் வாரிசை தேர்ந்தெடுக்கும் படி கூறினார் அந்த துறவி.

இக் கடிகாரத்தின் முகத்தில் இரண்டு நேர் கோடுகளை வரைய வேண்டும் எவ்வாறெனில், இரண்டு நேர்கோடுகளால் கடிகாரத்தில் உள்ள இலக்கங்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுவதுடன் அம் மூன்று பிரிவுகளிலுமுள்ள நான்கு எண்களின் கூட்டுத்தொகையும் சமனானதாக இருக்க வேண்டும்.இதனை முதலில் தீர்ப்பவரை தமது வாரிசாக தேர்ந்தெடுக்கலாமென ஆலோசித்தனர்.

விக்ரமாதித்தனே நீர் இதற்கான பதிலை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் பதிலளிக்காவிடின் உமது தலை சுக்குநூறாக உடைந்து விடும் என்று கூறி முடித்தது வேதாளம்.

துமி அன்பர்களே,

மன்னர் சரியான பதிலழிக்க நீங்கள் உதவிடுங்கள்.

உமது பதிலை எமது மின்னிதழிற்கு அனுப்பி வையுங்கள்.

Related posts

குறுக்கெழுத்துப்போட்டி – 27

Thumi2021

பிளவுபட்ட உதடு மற்றும் அண்ணம் Cleft Lip and palate

Thumi2021

தோற்றுவிட்டேன்

Thumi2021

Leave a Comment