இதழ்-30

முதலாளித்துவம் – Capitalism 01

முதலாளித்துவம் என்பது, உற்பத்திச் சாதனங்கள் பெரும்பாலும் தனிப்பட்டவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு பொருளியல் முறைமையாகும்.

அத்துடன் இம்முறையில், முதலீடு, விநியோகம், வருமானம், உற்பத்தி, பொருள்களின் விலை குறித்தல், சேவைகள் என்பன சந்தைப் பொருளாதாரத்தினால் தீர்மானிக்கப்படுகின்றன.

இதில், மூலதனப் பொருட்கள், கூலி, நிலம் மற்றும் பணம் ஆகியவற்றில் வணிகத்தில் ஈடுபடுவதற்கான தனிப்பட்டவர்களினதும், சட்ட அடிப்படையில் நபர்களாகச் செயற்படும் தனிப்பட்டவர்களைக் கொண்ட குழுக்களினதும், உரிமைகள் தொடர்புபடுகின்றன.

பல நூற்றாண்டுகள் கொண்ட சிக்கலான வரலாற்றை சுருக்கிக் கூற நினைப்பது ஒரு சிரமமானது தான். இருந்தும் அரசியலில் தவிர்க்க முடியாத பகுதி இது. இருந்தும் சுருக்கமாக எடுத்து நோக்குவோம்.

கார்ல் பொலொனி (Karl Polanyi)

முதலாளித்துவத்தின் பிறப்பு அதற்கு முந்தைய சமுதாய இயக்கங்களோடு ஒரு உண்மையான பிளவை ஏற்படுத்துகிறது.

இங்கு “சந்தைகளோடு செயல்படும் சமுதாயங்கள்” என்றும் “சந்தைச் சமுதாயங்கள்” என்றும் ஓர் அடிப்படை வேறுபாட்டை ஏற்படுத்துகிறது. ஆகவே சந்தை என்பது முதலாளித்துவத்தைக் குறிப்பதாகக் கொள்ளக் கூடாது, சந்தை என்பது முதலாளித்துவத்துக்கு முன்னாலும் இருந்தது என்கிறார்.

மேக்ஸ் வெபர் (Max weber)

தனி மனிதன் சந்தை பொருளாதாரத்தில் உறவில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் பொழுது, அவன் முதலாளித்துவ விதிகளுக்கு கட்டுப்பட வேண்டியுள்ளது. தொடர்ந்து கட்டுப்படாமல் நடப்பவன் தூக்கியெறியப்படுவான் என்கிறார்.

தாமஸ் ஜோசப் டன்னிங் (Thomas Joseph Dunning)

இயற்கை வெற்றிடத்தை வெறுப்பது போல் மூலதனம் இலாபமின்மையை அல்லது குறைந்த இலாபத்தை வெறுக்கிறது. இலாபம் சரிவரக் கிடைப்பதைப் பொறுத்துதான் அது பலமடைகிறது.

10% இலாபம் நிச்சயம் என்றால் அது எல்லா இடத்திலும் வேலை செய்யும். 20% இலாபம் என்றால் சூடு பிடிக்கும். 50% இலாபம் என்றால் அதன் தைரியம் அளவுக்கு மீறி அதிகரிக்கும். 100% என்றால் மனித நியாயங்களை எல்லாம் காலில் போட்டு மிதிக்கும். 300% என்றால் கொலைபாதகத்திற்கும் அஞ்சாது-தூக்குக் கயிறை எதிர் கொள்ள வேண்டுமென்றாலும் கூட என முதலாளித்துவ மனநிலையை விளக்குகிறார்.

நிலப்பிரபுத்துவத்தின் முடிவுக்குப் பின்னர், முதலாளித்துவம் மேலை நாடுகளில் முதன்மை பெற்று விளங்கியது.

16 ஆம் நூற்றாண்டுக்கும், 19 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் ஐரோப்பாவில் நிறுவனப்படுத்தப்பட்டது. வணிக முதலாளித்துவத்தின் தொடக்க வடிவங்கள் மத்திய காலத்தில் சிறப்புற்று விளங்கின.

இது இங்கிருந்து, சிறப்பாக இங்கிலாந்தில் இருந்து படிப்படியாக அரசியல் மற்றும் பண்பாட்டு எல்லைகளைக் கடந்து பிற இடங்களுக்கும் பரவியது. 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் முதலாளித்துவம், உலகம் முழுவதிலும் தொழில் மயமாக்கத்துக்கான முக்கிய காரணியாக விளங்கியது.

முதலாளித்துவ வகைகள்

  1. விவசாய முதலாளித்துவம்
  2. வியாபாரத்துவம்
  3. தொழில்துறை முதலாளித்துவம்
  4. நவீன முதலாளித்துவம்

இந்த பத்தி தினமணியில் வெளிவந்த முதலாளித்துவம் எனும் கட்டுரையினை தழுவி மாற்றங்களுடன் இலங்கைக்கு ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ளது.

சாரல் தூறும்………………………….!!!!!

Related posts

புதிர் 09 – காலத்தை வகுப்பவனே அரசன்

Thumi2021

குழந்தைகளில் ஏற்படும் கோவிட் பல்உறுப்பு அழற்சி நிலை (Multisystem Infalmmatory Syndrome in Children – MIS-C)

Thumi2021

தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் கமலாம்பாள் சரித்திரத்தின் முக்கியத்துவம் – 04

Thumi2021

Leave a Comment