இதழ்-30

சிங்ககிரித்தலைவன் – 28

வந்தவர்கள் யார்?

கீழக்கரைத் துறைமுகத்தில், இருந்து வடக்கே ‘வத்தனூர்” என்கிற கிராமம். துறைமுகத்தில் பொருட்களை கப்பல்களில் இருந்து எடுத்துவரும் சிறிய சிறிய வத்தைகளை இங்கே அதிகம் செய்து கொடுப்பதனால் அந்தப் பெயர் வந்திருக்க வேண்டும்! வத்தைகளையும், மரக் கலங்களுக்கான, துடுப்புக்கள், பாய்மரக் கலங்களுக்கான கயிறுகள் போன்ற, கடலோடிகளுக்குத் தேவையான பாகங்களைச் செய்கிற மரத்தச்சர்கள் அந்த ஊரில் அதிகம் இருந்தனர்!

அந்த ஊரின் பிரதான சாலையின் ,இரு புறங்களிலும், மரவேலை செய்யும் பட்டறைகளும், கயிறு திரிக்கும் தொழில் செய்வோரின் வீடுகளுமாக நிறைந்து இருந்தது! உள்ளூர் கடலோடிகளும், வெளிநாடுகளைச் சேர்ந்த கடலோடிகளும், அவற்றை வாங்குவதற்காக அந்த ஊருக்கு அதிகம் சஞ்சரிப்பதனால். குதிரை வியாபாரமும் அங்கே ,இடம்பெற்றது! வெளிநாட்டவர்கள் தங்குவதற்கான சத்திரங்களும் அந்த ஊரின் எல்லைப் பகுதிகளில் இருந்தது. கீழக்கரை துறைமுகத்தைப்போலவே, வத்தனூரும் எப்போதும் பரபரப்பாகவே இருந்தது!

முகலனும், மகாநாமரும், உத்தமரால், அந்த வத்தனூரில் ஒரு சிறிய சத்திரத்துக்கு அருகில் உள்ள வீடொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். சீலகாலனும், சில வீரர்களையும் தவிர, முகலனோடுவந்த அரச குடும்பத்தினர் அனைவரும், அந்த ஊரின் வேறுபகுதிகளில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். உத்தமர் அமைத்துக்கொண்டிருந்த சிவாலயம் அந்த ஊரில் இருந்து கூப்பிடு தொலைவில் கடற்கரையோரமாக இருந்தது! கண்டல் தாவரங்களும், முட்புதர்களும் நிறைந்த ஒரு ஒன்றையடிப்பாதைவழியாக அங்கே மிக விரைவில் போய்விடலாம்! அந்த ஒற்றையடிப்பாதையில், முகலனும் சீலகாலனும், கோயிலில் இருந்து மாலையில் புறப்பட்டு, தாங்கள் தங்கியிருக்கும் வீட்டைநோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்கள். முகலனை, அவனது தந்தையின் நினைவுகள் அதிகம் வருந்தியது!

‘சீலரே, அனுராதபுரத்தின் காட்டு வழிகளில் என் தந்தை இப்படித்தான் என்னோடு நடந்து வருவார்! நான் பத்து வயதுப் பருவங்களில் இருக்கும் போது, காட்டினைப் பற்றியும், இராசரட்டைப் பாண்டியர்களை வெல்வதற்காக, காடுகளில் எப்படி அரண் அமைத்து இருந்தார் என்பதையும் எனக்கு அடிக்கடி சொல்வார்! அவர் ஒரு மகாவீரர்! இன்று எம்மோடு இருந்திருந்தால், அவருடன் மீண்டும் அந்த அனுராதபுரத்துக் காட்டுப்பாதைகளில் நடந்து போயிருப்பேன்.”

முகலனின் கண்கள் பனித்துப் போயிருந்தன!

‘இளவரசே கலங்க வேண்டாம்! இறைவன் எண்ணியபடி தான் அனைத்தும் நடக்கிறது! உங்கள் தந்தையின் ஆத்மா உங்கள் உள்ளேயே இருந்து உங்களை வழி நடாத்தும்! மீண்டும் இலங்கையின் பேரரசனாக, மன்னர் தாதுசேனர் உங்கள் வடிவத்தில் முடிசூட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை!”

முகலனின் முதுகில் தன்கையை அழுத்தியவாறே சீலகாலன் நம்பிக்கை வார்த்தைகளை விதைத்தான்! இப்போது முகலனுக்கு தேவையானதும் அது தானே!… முடியிழந்த மன்னனுக்கும் முடிவறியா நோயாளிக்கும், நல்ல மருந்து நம்பிக்கை தரவல்ல நல்ல வார்த்தைகளே, அதை மருத்துவம் கற்ற சீலகாலன் அறியாது போவானோ?

‘சீலரே, இலங்கையின் அரியணை மீதில் எனக்கு பற்று ஏதும் இல்லை! அதை காசியப்பனைத் தவிர வேறு யார் வேண்டுமென்றாலும் ஆளட்டும்!
என் தாய்நாட்டில் வாழக்கூடவா எனக்கு வாய்ப்பு இல்லை? கலாவாவியில் கால்நனைத்து, மாவலி நதியின் அழகை இரசித்து, அனுராதபுரத்தின் ஒரு குடிசையிலேனும் வாழ்ந்து விடவேண்டும்!”

முகலன் அரியணைக்கு ஆசை கொண்டவன் இல்லை என்பதை சீலகாலன் நன்கு அறிவான்! ஆனாலும் நாட்டை ஆளத்தகுதியானவனும் அவனே என்பதை மகாநாமர் நன்கு அறிவார் என்பதையும் அவன் அறிவான்!

‘இளவரசே! மகாநாமரின் சிந்தனை களும் செயலும், மகத்துவம் வாய்ந்தவை! உங்கள் தந்தையை வழி நடாத்தியவர்! உங்களை இன்று வழி நடாத்துகின்றார்! நம்பிக்கை கொள்ளுங்கள்! நாளைகள் நல்ல படியே நகரும்!”

முகலனின் கலக்கம் முற்றுப்பெறாவிட்டாலும் கூட மட்டுப்பட்டது!

இருவரும் கதைத்தபடியே நடந்து வந்ததால் நேரம் போனது தெரியவில்லை! தூரத்தில் கடற் கரையில் துறைமுகத்தில் ஒலிக்கும் சங்கின் சத்தம் கேட்டது! இன்னும் சற்றுநேரத்தில் இருள் கவிந்து விடும்! மகாநாமரை காண்பதற்கு சிலர் வந்திருந்தார்கள்!

முகலனையும், சீலகாலனையும் அனுப்பிவிட்டு மகாநாமரும் உத்தமரும், பின்னால் வருவதாகச் சொல்லியிருந்தார்கள். வந்தவர்களை அருகில் இருந்த சத்திரத்தில் சீலகாலன் சேர்ப்பித்தான்! வந்திருந்த நால்வரில் ஒருவனை சீலகாலன் முன்னர்எப்போதோ பார்த்ததைப் போல ஒரு உள்ளுணர்வு சீலகாலனுக்குத் தோன்றியது! ஆனாலும், தன்னைச் சந்திக்க இன்று சிலர் வருவார்கள், அவர்களிடம் பேச்சுக்கொடுக்காமல் சத்திரத்தில் தங்கவைக்க வேண்டும் என்று மகாநாமர் முன்னரே அறிவுறுத்தியதால் சீலகாலன் ஏதும் வினவவில்லை!

சத்திரத்தின் பராமரிப்பாளனிடம், அவர்களுக்கு உணவுகொடுக்க, உடனடியாக ஏற்பாடு செய்யுமாறு பணித்தான். வந்தவர்களில் ஒருவன் ஒரு பெரிய மூட்டையை முதுகில் சுமந்து வந்திருந்தான். அதை எப்போதும் அவன் அருகிலேயே வைத்திருந்தான்! சீலகாலன் தான் முன்னர் பார்த்ததைப் போல் உள்ளுணர்வு பெற்றவனை, அடிக்கடி ஏற இறங்கப் பார்த்தான்! அவன் அதைக் கண்டுகொள்வதாக இல்லை!

முகலன் உடைகளை மாற்றிக் கொண்டு சத்திரத்துக்கு வந்து சேர்ந்ததும், சீலகாலன் உடை மாற்றுவதற்காக வீட்டுக்குப் புறப்பட்டான்! முகலனைக் கண்டதும் வந்த நால்வரும் எழுந்து வணங்கி நின்றனர். அப்போது கூட, அந்த மூட்டைக்காரன் அந்த மூட்டையை கைவிடுவதாக இல்லை!

‘வரவேண்டும்! பாட்டனார், சொல்லிய நால்வரும் நீங்கள் தானே…?”

‘ஆமாம் இளவரசே! மகா நாமரின் வரவை எண்ணிக் காத்திருக்கின்றோம்.”

‘பாட்டனார் சற்றுநேரத்தில் வந்துவிடுவார். பசியாறி இளை ப்பாறுங்கள்”

என்ற முகலன் அவர்களிடம் விடைபெற்று சத்திரத்தின் வாசலுக்கு வந்தான்! மகாநாமர் தூரத்தில் வந்துகொண்டிருக்க வேண்டும். அந்த ஒற்றையடிப்பாதையில் தூரத்தே இரண்டு கைப்பந்தங்கள் தெரிந்தன. அவர்களின் வரவை எதிர்பார்த்தபடி நின்ற முகலனின் காலடியில் ‘தொப்” என்னு ஒரு மனிதத் தலை வந்து விழுந்தது!

வருவார்கள்…

Related posts

தொழிலாகி விட்டதா பணி…?

Thumi2021

குறுக்கெழுத்துப்போட்டி – 27

Thumi2021

தோற்றுவிட்டேன்

Thumi2021

Leave a Comment