இதழ்-30

தோற்றுவிட்டேன்

நான் தோற்றுவிட்டேன்!

அப்படியென்றால் நான் வெல்ல வில்லை என்று அர்த்தமா? இல்லவே இல்லை! எது வெற்றி? நாம் எதிர்பார்த்தது கிடைத்தால் அது தான் வெற்றியாம்! இப்போது நான் எதிர்பார்த்தது தந்தையாக நான் தோற்பதைத் தானே! அப்போது தானே உறவினனாக நான் வெல்ல முடியும். தோற்றதனால் வென்றவர்கள் பலர். நானும் அதற்கு விதிவிலக்கல்ல!

என் சமூகத்தில் மீண்டும் எனக்கு மரியாதை கிடைக்கப்போகிறது. அண்ணன் மகளின் திருமணத்தில் நான் முன்னால் நின்று கருமங்கள் ஆற்றலாம்! யாரும் எனக்கு கேட்குமாறே என்னை நக்கலடிக்கமாட்டார்கள். கிண்டலடித்தாலும் திருப்பி பதிலடி கொடுக்க என்னால் முடியும். மூத்தவனால் போன மானம் இளையவனால் திரும்பக் கிடைக்கப் போகிறது.

ஆம்! கண்ணுக்கு கண்ணாக இரு சிங்கக் குட்டிகள் எனக்கு! மூத்தவன் எட்டடி பாய்ந்தால் இளையவன் பத்தடியாவது பாய்வான். ஆனால் அதே திசையில் தான் பாய்வான். மூத்தவன் விரும்பிப் படித்த பாடங்களையே இளையவனும் விரும்பிப் படித்தான். ஆனால் அவனை விட சற்றே மதிப்பெண்கள் அதிகமாக எடுப்பான் இளையவன்! மூத்தவன் நன்றாக சித்திரம் கீறுவான் என்றால் இளையவன் கீறிய சித்திரம் தேசிய ரீதியில் முதலிடம் பிடித்தது. விருப்பத்துடனேயே மூத்தவனின் பாதையில் மூத்தவனை விட அழுத்தமாகவே வெற்றி நடை போட்டான் இளையவன்! ஆனால் அண்ணன் தம்பி இருவருக்குள்ளும் நிறைந்திருந்த அன்பில் எள்ளளவும் எப்போதும் குறைந்ததே இல்லை.

மூத்தவன் மருத்துவபீடம் தெரிவானான். அங்கே கல்வியை மட்டுமல்ல காதலையும் கற்றான். காதலை கல்யாணத்தில் முடிக்க ஆசை கொண்டான். கேட்டான். விசாரித்தோம். வில்லங்கம் ஆரம்பமானது! அவனது காதலி சாதியில் குறைந்தவள்! காதலுக்கும் சாதிக்கும் எப்போதுமே பொருத்தம் இருந்ததில்லை. அதே சாதியில் காதலித்தவர்களை விட அடுத்த சாதியில் காதலித்தவர்கள்தான் அதிகம்! சாதியை காதல் சாகடிக்கிறதா? காதலை சாதி சாகடிக்கிறதா என்கிற போட்டியில் பெரும்பாலும் வெல்வது சாதிதான்! பெற்றோர், உறவுகள், பாசம், கௌரவம் என்கிற பல சக்திகளுக்கு முன்னால் காதலின் சக்தி காலாவதியாகிப் போவதுதான் யதார்த்தம்!

ஆனால் என் மூத்தவன் மூர்க்கமாக காதலித்திருக்க வேண்டும். மணந்தால் அவள்தான் என்று ஒற்றைக்காலில் நின்றான். எனக்கு பாரதியைப் பிடிக்கும் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். அந்த பாரதியை வைத்தே என்னை ஊமையாக்கி விட்டான்.

சாதீயத்தை எதிர்ப்பவர்கள் குறைவு என்றால் உயர் சாதியில் இருந்து கொண்டே சாதீயத்தை எதிர்ப்பவர்கள் மிகக்குறைவு. அப்படிப்பட்டவர்களிலிருந்து பாரதி அப்பாற்பட்டவனாக காணப்பட்டான். அக்கிரகாரத்தில் இருந்து கொண்டே அக்கிரகாரத்தின் அக்கிரங்களை எதிர்ப்பது அவ்வளவு சுலபமல்ல. அவன் நினைத்திருந்தால் அந்தணர்களின் செல்லப்பிள்ளையாக, அரசின் ஆஸ்தான கவிஞனாக பேரோடும் புகழோடும் ஒரு ராஜ வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவன் சமூக விரோதியாக, தேசத்தின் தீவிரவாதியாக, ஊரோடு ஒத்துப் போகாமல், தர்மத்தில் இருந்து ஒதுங்கிப் போகாமல் கொண்ட கொள்கையிலிருந்து பிறள்வடையாத ஒரு சத்திய வாழ்க்கையை வாழ்ந்து, சரித்திரத்தில் நீங்கா இடம் பிடித்தான். இதற்காக அவன் இழந்தவை அதிகம். இந்த தைரியம் தான் அவனில் எனக்கு அதிகம் பிடித்தது. பாரதியை மூத்தவன் முன்னிலைப்படுத்தியதும் என்னால் ஒன்றுமே செய்யமுடியவில்லை.

எங்கள் உறவுகள் எதிர்த்தார்கள். எங்கள் உடன் பிறந்தவர்கள் எதிர்த்தார்கள்.

“சாதிகள் இல்லையடி பாப்பா
குலத்துயர்ச்சி இகழ்ச்சி சொல்லல் பாவம்”

என்று சிறுவயதில் சொல்லிக்கொடுத்து விட்டு இப்போது மாற்றிச் சொல்ல எங்களால் முடியவில்லை. எல்லோரையும் மீறி திருமணம் செய்து வைத்தோம். காதல் கல்யாணம் என்பதால் பெரிதாக செய்ய முடியவில்லை. நெருக்கமானவர்களுக்கு மட்டுமே சொன்னோம். ஆனால் அவர்களும் பலர் வரவில்லை. எதிர்பார்த்தது தான். அதனாலேதான் வெளியூரில் திருமணத்தை ஏற்பாடு செய்தோம். பயணத்தூரம் என்பதால் பலரும் வரவில்லை என்று போலிக்காரணம் எமக்கு நாமே சொல்லிக்கொண்டோம்.

என் மூத்தவனின் திருமணத்தைத்தான் உறவுகள் புறக்கணித்ததாக நினைத்திருந்தேன். ஆனால் ஒட்டுமொத்தமாக எங்கள் குடும்பத்தையே புறக்கணிக்க தொடங்கி விட்டார்கள். யாரும் எங்களை ஆதரித்தால் அவர்களையும் புறக்கணிக்கத் தொடங்கினார்கள். இதனால் எங்களை ஆதரிப்பவர்களும் இல்லாமல்ப் போனார்கள். இவையெல்லாம் எப்படிப்பட்ட சூழ்ச்சிகள். இந்த மாயமான சதி வலைகளில் பின்னப்பட்டது தான் இந்த சமூக கட்டமைப்பு. மகனின் திருமண நாளிலிருந்து இன்றுவரை உறவினர்களின் எந்த ஒரு நல்லது கெட்டதுக்கும் எமக்கு அழைப்பில்லை. தகவல் அறிந்தால் மரண வீடுகளுக்கு அழையா விருந்தாளிகளாக சென்று விடுவேன். அங்கே இருக்கும் எந்த சடலத்திற்கும் என் சடலம் தெரிவதே இல்லை.

சொந்த ஊரில் எல்லோரும் இருந்தும் யாரும் இல்லாதது போன்ற வாழ்க்கை! கௌரவமாக தலை நிமிர்ந்து வாழ்ந்த நாங்கள் செய்யவே கூடாத குற்றம் செய்த குற்றவாளியைப் போல தலைகுனிந்து வாழ வேண்டிய நிலை. சாதி மாறிய கல்யாணத்திற்கு சம்மதித்தால் எங்களுக்கு நேர்ந்த கதிதான் நேரும் என்று எல்லோரையும் பயப்பட வைத்து சாதியை வளர்த்தது எங்கள் சமூகம்.

காதலை ஆதரித்தால் மானம் போகுமா? என்ன முட்டாள்த்தனம்? என்றெல்லாம் இனியும் நினைக்க முடியவில்லை. இழந்த கௌரவத்தை மீட்க வழியே இல்லையா? தெரிந்தவர்களிடம் தெரியாமல் கேட்டேன்.

“மூத்தவனால் விட்டதை சின்னவனை வைத்துப்பிடி” என்று தெரிந்து சொன்னார்கள்.

இதுவரை அவன் பாதைதான் இவன் பாதையும். அவன் கற்ற மருத்துவத்தைத்தான் சின்னவனும் கற்றுக் கொண்டிருக்கிறான்.

அப்படியென்றால்…
காதலையும் கற்கத் தொடங்கிவிட்டானா?

வினாவே விடை…
விடையோடு அடுத்த இதழில் சந்திக்கிறேன்.

இப்படிக்கு,
அப்பா

Related posts

தொழிலாகி விட்டதா பணி…?

Thumi2021

ஈழச்சூழலியல் 17

Thumi2021

குறுக்கெழுத்துப்போட்டி – 27

Thumi2021

Leave a Comment