இதழ்-30

பிளவுபட்ட உதடு மற்றும் அண்ணம் Cleft Lip and palate

தாய்ப்பாலின் முக்கியத்துவம்

-பிறந்ததிலிருந்து 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே உங்கள் குழந்தையின் ஒரே உணவு.

-வேறு வகையான பால் கொடுப்பதாயின் அது வைத்தியரின் சிபாரிசுடன் மட்டுமே கொடுக்க வேண்டும். அவ்வாறு போ(f)ர்முலா பால் கொடுப்பதாயின் அதனை அளந்து கொடுத்தல் வேண்டும்.

-குழந்தைக்கு மிகச் சிறந்த உணவு தாய்ப்பாலாகும். தாய்ப்பாலினை எவ்வளவு ஊட்ட முடியுமோ அவ்வளவு ஊட்டுங்கள்.

-தாய்ப்பால் குழந்தைக்கும் தாய்க்கும் உள்ள பிணைப்பை அதிகரிக்கின்றது

-தாயின் உணவுகளில் மீன், முட்டை, இறைச்சி, பழங்கள் போன்றவற்றை சேர்த்துக்கொள்வதினால் தாய்ப்பாலின் அளவு அதிகரிக்கும்.

-உதட்டினை சீர் செய்யும் சிகிச்சைக்கு குறைந்தது 10 pounds நிறை அடைய வேண்டும் என்பதனால் வாராந்தம் குழந்தையின் நிறையினை அளத்தல்  வேண்டும். சராசரியாக 150g எடை வாராந்தம் அதிகரிக்க வேண்டும்.

பிளவுபட்ட உதடு மட்டும் உள்ள குழந்தைக்கு எவ்வாறு பால் ஊட்டுவது

பிளவுபட்ட உதட்டுடன் பிறந்த குழந்தைக்கு சாதாரண குழந்தைகளுக்கு பால் ஊட்டுவது போல் ஊட்டமுடியும். பிளவின் அளவினை பொறுத்து சில சமயங்களில் உதவிகள் தேவைப்படும். குழந்தையின் உதட்டினை அதன் பிளவுக்கு ஏற்ப தாயின் முலையினுள் பொருந்தும் படி குழந்தையின் நிலையினை மாற்றுதல் வேண்டும். உறிஞ்சும் போது காற்று உள்ளே போகுமாயின் சத்தம் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் குழந்தையின் நிலையினை மாற்றி சத்தம் வராதது போல் பாத்துக்கொள்ள வேண்டும். குழந்தையினை படத்தில் [படம் 1] உள்ளவாறு நிமிர்த்தி பிடித்துக்கொள்வதினால் மூச்சுத்திணறல்   ஏற்படுவதினை தடுக்க முடியும்.

பிளவு பட்ட உதடு மற்றும் அண்ணத்துடன் பிறந்த குழந்தைக்கு பால் ஊட்டும் முறை

அண்ணத்தின் பிளவு சிறிதாக இருக்குமாயின் குழந்தைகள் சாதாரணமாக உறிஞ்சிக் குடிக்க முடியும். முலைகாம்பினை அந்த பிளவில் வைத்து பால் ஊட்டுவதினால் குழந்தை நாக்கின் உதவியுடன் பாலினை உறிஞ்சி குடிக்க முடியும். பாலினை உறிஞ்சி குடிக்க முடியாவிட்டால் தாய்ப்பாலினை படத்தில் [படம் 2] உள்ள போன்ற பால் புட்டிகளின் மூலம் ஊட்டலாம். பால் ஊட்டும் முறைகளை நிபுணர் குழுவிடம் கேட்டு அதற்கான அறிவுரைகளை பெற்றுக்கொள்ளலாம்.

பால் புட்டியினால் பால் ஊட்டுதல்

பால் புட்டியினால் பால் ஊட்டும் பொழுது குழந்தையினை படத்தில் காட்டியவாறு வைத்திருக்க வேண்டும்

-தாய்ப்பாலினை தவிர வேறு பால் கொடுப்பதாயின் வைத்தியரின் சிபாரிசு இல்லாமல் கொடுக்க வேண்டாம்.

-நாள் ஒன்றுக்கு சாதாரண குழந்தைகளுக்கு கொடுக்கும் அளவிலேயே இந்த குழந்தைகளுக்கும் பால் கொடுக்க முடியும்.

-பால் ஊட்டும் பொழுது 30-40 நிமிடங்களுக்கு மேலே எடுக்குமாயின் உறிஞ்சுதல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை காட்டும். அவ்வாறு நேரம் எடுக்குமாயின் விசேட சூப்பியினை பாவியுங்கள்.

சாதாரண சூப்பியினை சரி செய்தல்

ஒரு சூடான ஊசியினால் அல்லது கத்தியினால்  சூப்பியின் துளையினை பெரிதாக்கலாம். இதன் மூலம் பால் வெளிவருவது அதிகமாகும். [படம் 3]

உணவு ஊட்டுதல்

பிறந்தது முதல் 6 மாதம் வரையில் தாய்ப்பால் ஊட்டுதல் முக்கியமானது. அதன் பின்பு படிப்படியாக குறைத்து மற்ற உணவுகளை ஊட்டத் தொடங்க வேண்டும்.  எனினும் பிளவுடன் பிறந்த குழந்தைக்கு எப்பொழுது எந்த உணவு ஊட்டுவது என்பது பற்றி நிபுணர் குழுவுடன் ஆலோசிக்கவும்.

சோற்றுடன் மசித்த மரக்கறி, கிழங்கு வகை, பருப்பு வகை ,ஊண் உணவு போன்றவற்றை தயாரித்து உணவு ஊட்ட முடியும். ஊட்டப்படும் உணவு வகையும் அளவும் பற்றி ஆலோசனைக் குழுவிடம் கேட்டு அறியலாம்.

உங்கள் குழந்தையின் உணவினை தயாரிக்கும் முன்பும் கையாளும் பொழுதும் சவர்க்காரம் இட்டு கையினை நன்றாக கழுவுதல் வேண்டும். தாய்ப்பால் தவிர வேறு பால் வகைகளை புட்டியினில் கொடுப்பதாயின் நன்கு கிருமி நீக்கிய பின்பே பருக்க வேண்டும். [படம் 4]

Related posts

சித்திராங்கதா – 30

Thumi2021

முதலாளித்துவம் – Capitalism 01

Thumi2021

சிந்தனைக்கினிய கந்தபுராணம் – 04

Thumi2021

Leave a Comment