இதழ்-31

சிங்ககிரித்தலைவன் – 29

வந்தது அதிகாரம்

தன் காலடியில் வந்து விழுந்த தலையால், அதிகம் பீதி அடைந்த முகலன், நிலை தடுமாறி, சத்திரத்தின் திண்ணையில் துள்ளி ஏறிக்கொண்டான்! அவன் விழிகள் அகலத்திறந்து, இதயம் படபடத்தது! திடீடென, குழலி சத்திரத்தின் முன் பகுதியில் குதித்தாள்! எதிர்பாராத இந்த நிகழ்வால் முகலன் மேலும் அதிர்ச்சியடைந்தவனாய் செய்வதறியாது திகைத்து நின்றான்! குதித்த குழலியோ கலகலவெனச் சிரித்தபடி, அந்த மனிதத் தலையைத் தன் கைகளால் எடுத்து தன்முகத்துக்கு நேரே வைத்து அசைத்தாள்! இப்போது தான் முகலனுக்கு எல்லாம் புரிந்தது! சற்றுக் கோவமாகவே,

‘ஏய் குழலி… இது என்ன விளையாட்டு? என் குறும்புக்கு ஒரு அளவு இல்லாமல் போய்விட்டது… உன்னைக் கண்டிக்க யாரும் இல்லையா…?’

என்றபடி மூச்சு வாங்க, திண்ணையில் இருந்து கீழே இறங்கினான்!

‘ஐயா… இளவரசே, மனிதத்தலைக்கும், போலிக்கும் வேறுபாடு தெரியாதவரே… குங்குமச் சாந்துக்கும் குரதிக்கும் இடையில் குறிப்பறியத் தெரியாத குமாரரே…’

என்று சொல்லிச் சொல்லி மேலும் சிரித்த குழலிமீது, கோவப்படுவதா…? தன் அறியாமையை எண்ணி வெட்கப்படுவதா…? என்று தெரியாத முகலன், சரி… சமாளித்து விடுவோம் என்று குழலியின் அருகில் போய், அந்தப் போலி மனிதத் தலையை தன் கைகளில் வாங்கினான்!.

‘அடடே…. அப்படியே அச்சு அசலாக மனிதத் தலையைப் போலவே செய்திருக்கின்றாயே… நீ திறமைசாலி தான்! ஆஹா… இந்தத் தலைமுடியைக் கூட, பனம்பழத்தின் தும்பில் மிக கச்சிதமாக ஒட்டியிருக்கிராயே எப்படி இதைச் செய்தாய்…?’

முகலன் தன் நிலையை சமாளிப்பதற்காகத் தன்னைப் புகழ்வதை குழலி தெரிந்திருந்தாலும், அவனது புகழ்ச்சியை ஏற்றுக் கொண்டவளாக நாணி நின்றாள்!

‘இளவரசே ஒரு முழு மனித உருவத்தையே அப்படியே போலியாக செய்து, கருவாடு காயவைக்கும் தொழிலைக் கடற்கரையில் செய்பவர்களுக்கு கொடுத்திருக்கின்றேன்! கடல்பறவைகளிடம் இருந்து உலரும் மீன்களை அவை பாதுகாக்கும்! உங்கள் உருவத்தையும் செய்து தரவா…’

என்றவள் சிரித்தபடியே அங்கிருந்து நகர்ந்தாள்!

அவள் சத்திரத்தை கடப்பதை முகலன் அசடு வழியப் பார்த்தபடி நின்றான்! மகாநாமரின் கைகள் அவனது தோளில் பதியவே, சடுதியாய் திரும்பி,

‘வரவேண்டும் ஜயனே… உங்களைத் தேடி இலங்கையில் இருந்து வந்த நால்வரும் உள்ளே உள்ளனர்!’

அப்படியா முகலா…உன்னைத் தேடிவந்த குழலி வெளியே போய்விட்டாளா?

என்று, மெல்லிய புன்னகையோடு அவனின் முதகில் தட்டி உள்ளே வருமாறு, சைகை செய்து, தான் முன்னே போனார். மகாநாமரைக் கண்டதும், நால்வரும் எழுந்து முதுகுமடக்கி வணக்கிநின்றார்கள்.

‘வரவேண்டும்… வரவேண்டும்… காப்பாளர்களே… உங்கள் வரவுக்காகத் தான் காத்திருந்தேன்! வெற்றியோடு தானே வந்தீர்கள்?’

‘ஆம் ஐயனே… இந்தாருங்கள்…’ என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது! முகலன் தன்கையில் வைத்திருந்த தீப்பந்தத்தை சற்று உயர்த்திப்பிடித்தான்! அந்த மூட்டையை வைத்திருந்தஉருவம் தன் மொட்டாக்கை நீக்கி, தான்வைத்திருந்த மூட்டையை அவிழ்த்து, அதற்குள்ளிருந்த ஒரு அழகிய பேழையை எடுத்து தன் தலைக்கு மேல் உயர்த்தி மகாநாமரிடம் கொடுத்தது!

முகலன் அந்த உருவம் ஒரு பெண் என்று தெரிந்ததும் பெரிதும் ஆச்சரியம் அடைந்தான்!

‘விஜயசீலி! உன்னை நம்பி நான் ஒப்படைத்த இந்தப் பெரும் பணியை நீ வெற்றிகரமா நிறைவேற்றியதை எண்ணி உளம் மிக மகிழ்கின்றேன்!’

அந்தப் பேழையை தன் மார்போடு அணைத்தபடி மகாநாமர் முகலனைப் பார்த்தார்!

‘முகலா… இவர்கள் தான் அனுராதபுரத்தின் அரச விசுவாசிகள்! உன் தந்தையார் எனது ஆலொசனையின் படி உருவாக்கிய குழவினர்! முக்கிய அரசபணியில், அந்தரங்க காப்பாளர்களாக இருந்தனர்! எதிரிகளோடும் உறவாடி அவர்கள் திட்டங்களையும் அறியவல்லவர்கள்! ஆனால் காசியப்பன் விடயத்தில் அது பிழைத்துப் போனது! குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அரசுக்கு எதிரான அரச பணியாளர்கள் போல் நடித்து எதிரிகளின் எண்ணங்களை அறியவல்லவர்கள்… இப்போது, ‘அதிகாரத்தை’ கொண்டுவந்து கொடுத்திருக்கின்றனர்’

முகலன் சற்றுக் குழம்பிப் போனவனாக

‘அதிகாரம் இழந்து தானே, நாமே இங்கு வந்தோம்… எம்மால் எடுத்துவரமுடியாத அதிகாரத்தை, இவர்கள் எப்படி எடுத்து வந்தனர்?’

‘முகலா… உண்மை தான்… இலங்கை தேசத்தின் அதிகாரத்தை இவர்கள் கொண்டுவர முடியாது தான்! ஆனால் அதிகாரத்தை அடையாளப்படுத்தும், கௌதம புத்தரின் புனித தந்தத்தை இவர்கள் எடுத்து வந்தனர்! காசியப்பனின் அரண்மனை வளாகத்தை வெள்ளம் சூழ்ந்து, மக்கள் அங்கு அதிகம் செறிவாக இருந்தபோது, விஜயசீலி இப்பெரும் பணியைச் செய்து முடித்தான்’

முகலனின் கண்களில் ஆச்சரிய ரேகை படர்ந்து கிடந்தது! தான் கடல் கடந்து இருந்தாலும் தன் ஆழ்ந்த எதிர்காலம் நோக்கிய சிந்தனையால் மகாநாமர் செய்வித்த காரியத்தின் கனதித் தன்மையை முகலன் நன்கு அறிவான்

‘பாட்டனாரே… தங்கள் பராக்கிரமத்தை எண்ணிப் பெரிதும் வியக்கின்றேன்! விஜயசீலி பாராட்டப்பட வேண்டியவன்… மற்றய மூவரும் தான்!’

‘மகனே… நிச்சயமாக இனி இவர்கள் தான் உனக்கு பயிற்சி கொடுக்கும் பணியை செய்யப் போகின்றவர்கள்! வரும்போது பார்த்தேன்… போலித் தலையை கண்டு நீ அச்சம் கொண்டதை! இனி அது இருக்க கூடாது! நிஜத் தலைகளை உன் வாளால் வெட்டி வீழ்த்தும் பாராக்கிரமம் பெற வேண்டும் நீ!’

முகலன் சொல்வது அறியாது தீர்ப்பந்தத்தை இறுகப் பற்றி நின்றான் அது முன்னரை விட அதிகமாகப் பிரகாசித்து எரிந்தது!

இன்னும் எரியும்….

Related posts

ராட்சசன் வேண்டாம் ரசிகன் வேண்டும்

Thumi2021

ஈழச்சூழலியல் 18

Thumi2021

நானும் ஒரு சாக்கடை தான்!…..

Thumi2021

Leave a Comment