இதழ்-31

சித்திராங்கதா – 31

வன்னியர் விழா

நல்லூர்க்கோட்டையின் கிழக்கு வாசல் திறந்திருக்கிறது. வயல்கள் மலிந்த விளைநிலங்களை அண்மித்த பகுதியில் உழவர்களின் காவற் தெய்வமான வெயிலுகந்த பிள்ளையார் ஆலயத்தை ஒட்டி அமைந்திருந்தது கோட்டையின் கிழக்கு வாசல்.

கொம்புத்தாரைகள் தொடர்ந்து இசைக்க வன்னியர் வரிசை கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. கிழக்கு மூலை, மேற்கு மூலை ஆகிய வன்னிமைகளின் அதிகார மிக்க தலைவனாய் இருந்த வன்னியத்தேவன் தன் நிலைக்கு உரித்தான பவளக் குடையுடனும், சாமரத்துடனும் வரிசையில் வந்து கொண்டிருந்தான்.

அவனைத் தொடர்ந்து பனங்காமம், முள்ளியவளை, கருநாவற்பத்து, தென்னமரவடி, மேல்பத்து, கரிகட்டு மூலை, செட்டிகுளம்பத்து ஆகிய வலிமை மிக்க வன்னிமைகளின் வன்னியர்களும் வந்து கொண்டிரு ந்தனர்.

தொடர்ந்து வன்னியர்களிலே கூடிய சுதந்திரங் கொண்டிருந்த ‘தனியுண்ணாப் பூபால வன்னியன்” என்ற புகழ் மிக்க விருதினையும் பெற்றிருந்த வயதில் மூத்த திருகோணமலை வன்னியார் வந்து கொண்டிருந்தார். ஆட்சி நிர்வாகம் தாண்டி கோணேசர் கோயிலின் வழமைகளையும், நிறுவனங்களையும், நிலங்களையும் பராமரிக்கும் உயர் பொறுப்பில் இருந்ததனாலே திருமலை வன்னியனார் சுதந்திரம் மிக்கதொரு வன்னியனராய்த் திகழ்ந்தார். மரகத சிம்மாசனத்தை தனக்கென கொண்டிருந்த ஒரே வன்னியர் திருமலை தனியுண்ணாப் பூபால வன்னியனார் என கோணேசர் கல்வெட்டு இன்றும் கூறி நிற்கிறது.

திருமலை வன்னியரைத் தொடர்ந்து வெற்றிவாள், கவசம், கணையாழி போன்றவற்றைக் கொண்ட சமக்கட்டினை சின்னமாகக் கொண்ட கொடியுடன் ஒரு வன்னியர் கூட்டம் வந்து கொண்டிருந்தது. அவர்களே ‘ராஜவன்னியர்கள்” என்ற விருதினை தக்க வைத்திருந்த புத்தளத்து முக்குவ வன்னியர்கள் ஆவர். சமூக அமைப்பில் அவர்கள் ஏனைய வன்னிமைகளிலிருந்து வேறுபட்டவர்களாக இருந்தனர்.

தமக்கென தனியாக பதினெட்டு அங்கத்தவர்களைக்கொண்ட ‘முத்திர கூடம்” என வழங்கிய நீதிமன்றம் ஒன்றை அமைத்து அதன் வழியே நீதி வழங்கி வந்தனர். அரச நீதியைக் காட்டிலும் ராஜவன்னியரது முத்திரகூட நீதி மீது வன்னிமக்கள் பெருநம்பிக்கையும் மதிப்பும் கொண்டிருந்தனர்.
வன்னியர்களைத் தொடர்ந்து ஒவ்வொரு வன்னிமைகளின் முதலியார்கள் முதல் தலையாரிகள் வரை வரிசையில் திறைப்பொருட்களை கொண்டு வந்தனர். யானைகள், குதிரைகள் தொடர் ஊர்வலமாய் வந்து கொண்டிருந்தன. யானைகள் பெரும்பட்டாளமாய் வந்து கொண்டிருக்கின்ற காட்சி காண்கின்ற எல்லோர் கண்களிற்கும் பெருவிருந்தாக அமைந்திருந்தது. (இவ்வாறு முப்பத்தாறு யானைகளை அரசன் ஆண்டு தோறும் திறையாகப் பெற்றதாக போர்த்துக்கேய அறிக்கைகள் குறிக்கின்றன.)

தலையாரிகளும் பிற தலைவர் களும் உணவுப் பொருட்கள், கனிவர்க்கங்கள், கோழிகள் என தத்தம் தகுதிக்கேற்ப பொருட்களைக் கொண்டு வந்தனர்.

வன்னியர் விழாவின் விருந்தினர்கள் யாவரும் மரியாதையுடன் வர வேற்கப்பட்டு அரசவையில் கூடி யிருந்தனர். அவர்களோடு மந்திரி ஏகாம்பரனார், ஏனைய அமைச்சர்கள், சேனாதிபதி மகிழாந்தகன், வருணகுலத்தான், மாகாண அதிகாரங்கள், திருநெல்வேலிப் புலவர் அவையினர் என எல்லோரும் அந்த அவையில் கூடியிருந்தனர். தமிழால் ஆழப்பட்ட அந்த தேசத்தின் பெருந்தலைமைகள் எல்லோரும் கூடிநின்ற பெருமண்டபமாய் நல்லூர்க் கோட்டை அரண்மனை அன்றி ஒளிவீசி பிரகாசித்தது.
கட்டியக்காரன் குரல் ஒலிக்கத் தொடங்கியது.
‘ராஜாதி ராஜ – ராஜகுலதிலக – சத்ருசம்கார – ரணகளதீர- பரராஜசேகர- மாவீர- மாமன்னர்- சங்கிலி குமார பூபதி வருகிறார்.”

ராஜநடையுடன் வந்து கம்பீரமாய் நின்றார் சங்கிலிய மகாராஜா. அவையோர் எல்லோரும் எழுந்து வணங்கி நின்றனர்.

கம்பீர குரலில் சங்கிலியன் பேசத் தொடங்கினான்.

‘அவையோர்க்கும் வருகை தந்திருக்கும் வன்னியோர்க்கும் என் வணக்கங்கள்”

எல்லோரும் வணங்கி நிற்க சங்கிலியன் அரியாசனத்தில் அமர்ந்தான்.

‘வன்னி வேந்தர்கள் யாவரையும் நல்லை அரண்மனைக்கு வாஞ்சையோடு வரவேற்கிறேன். இவ் வன்னியர் விழாவிற்கான அவசர காரணம் திறைகோரும் நோக்கமன்று என வன்னியர்கள் உணர்வர் என நான் முழுமையாக நம்புகிறேன்.”

என்று சங்கிலிய மகாராஜா கூறிய போது வன்னியர்கள் யாவரும் அதை ஆமோதிப்பது போல் தலையசைத்தனர்.

சங்கிலியன் ராஜமந்திரியார் ஏகாம்பரம் தொண்டமனாரை நோக்கி

‘மந்திரியாரே, நல்விழாவை தொடங்கும் முன் இந்த நிறைந்த அவையில் நல்வேந்தர்களும், கற்றரிந்த மூத்தோரும் கூடிநிற்கும் கிடைத்தற்கரிய இவ்வினிய பொழுதில் என் நெடுநாள் சந்தேகத்தையும் தீர்த்துக்கொள்ளலாம் என திடீர்ப் பிரயத்தனம் கொள்கிறேன்.” என்றான்.

‘மாமன்னரே, தங்கள் நெடுநாள் சந்தேகம் இன்றே தீரும் என்பதில் ஐயமற்ற அவை இது. கூறுங்கள் வேந்தே!”

‘கூறுகிறேன் மந்திரியாரே. இந்துமா கடலினிலே ஈழம் என புகழ் மிளிரும் நம் இராச்சியத்தின் கிரீடமாய் ஒளிவீசுகின்ற இந்த யாழ்ப்பாண தேசத்திற்கு இத்திவ்விய நாமம் எங்ஙனம் வாய்த்ததென்று தாங்கள் அறிவீர்களா மந்திரி?”

‘மன்னிக்க வேண்டும் வேந்தே, அந்தக் காரணம் யானும் அறியிலேன். ஆயினும் கற்றரிந்தோர், மூத்தோர் கூடி நிறைந்துள்ள இவ் அவையினர் அறிந்திருப்பர் என்பதில் ஐயமில்லை அரசே, மன்னர்தம் சந்தேகத்தை புலவர் அவையினர் தீர்த்து வைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்”

என்று திருநெல்வேலிப் புலவர் அவையின் தலைமைப்புலவர் செண்பகமாப்பாணரை நோக்கிக் கூறினார் மந்திரி.

செண்பக மாப்பாணர் பணிவுடன் எழுந்துஇ
‘தக்க பதிலை எம்புலவர்கள் அவையோர்க்கு அளிப்பார்கள் அரசே, நல்லோர் கூடிய இவ் அவை இன்று தெளிவு கொள்ளும் என்று எதிர்பார்க்கிறேன்.”
என்று கூறி அமர்ந்தார்.

அப்போது புலவர் அவையிலிருந்து ஒரு புலவர் எழுந்தார்.
‘அவை குழுமிய அரசினர்க்கு என் வணக்கம். நான் புலவர் சந்திரசேகர மாப்பாணன் ஆவேன். மாமன்னரின் மகத்தான கேள்விக்கு மரியாதைக்குரிய பதில் கூற விளைகிறேன்” என்றார்.

‘கூறுங்கள் புலவர் சந்திரசேகர மாப்பாணரே, ஆவலாய் உள்ளேன்.” என்றார் சங்கிலிய மகாராஜா.

‘வேந்தே, அக்காலச் சோழவளநாட்டில் இருந்து இரு கண்ணுங் குருடனாகிய கவிவீரராகவன் என்கிற யாழ்ப்பாணன்- நம் சிங்கை நகரிலிருந்து அரசாண்ட வால்சிங்க மகராசன் பேரில் யாழ் வாசித்துப் பிரபந்தம் பாடினான். அதைக்கேட்டு மனங்குளிர்ந்த வேந்தர் அவனுக்குப் பரிசிலாக தீவின் வடதிசையிலுள்ள மணற்றிடல் எனும் இந்நாட்டைக் கொடுத்தான். அந்த யாழ்ப்பாணனே இதற்குப் பெயரிட்டு யாழ்ப்பாணம் ஆக்கினான்.”

சந்திரசேகர மாப்பாணன் கூறிய கதையை எல்லோரும் அமைதியாகக் கேட்டிருந்தனர். அவ்வேளை அவையிலிருந்து இன்னொரு புலவர் எழுந்தார்.
‘வேந்தே, நான் புலவர் கனகராயர். சந்திரசேகர மாப்பாணர் கூறுகின்ற கதையினை யாரும் அவ்வளவு வேகமாக நம்பி விடக்கூடாது அரசே, அந்த யாழ்பாடிக்கதை என்பதை வெறும் புனைந்துரை என்றே யான் கூறுவேன். இது போன்ற கதைகள் நம் புராணங்களில் மலிந்து கிடக்கின்றன. அப்படியொரு கதையினையே அந்தக் கவிவீர ராகவன் தலையில் கட்டி வைத்திருக்கினர். உண்மையில் அப்படி ஒருவன் இருக்கவுமில்லை. யாழ்ப்பாணம் பரிசிலாக ஒருவருக்குக் கொடுக்கப்படவுமில்லை.”

என்று உறுதியாகக் கூறிய புலவர் கனகராயரை நோக்கி சந்திரசேகர மாப்பாணர் கோபமிகுதியில் கேட்டார்.

‘அப்படி இவை புனைந்துரையாயின், யாழ்ப்பாணம் எனும் திருநாமத்திற்கு தாம் கூற வரும் காரணம் என்னவோ?”

‘கூறுகிறேன் புலவரே , பொறுமையாய்க் கேளுங்கள்.” என்றவாறு மன்னரை நோக்கி,

‘அரசே, நான் கூறும் காரணம் ஏற்பதற்குச் சிரமம் என்றாலும் அதுவே உண்மை என்பதை நாம் உணர்ந்தாகத்தான் வேண்டும்.” என்றார்.

அரசவையின் அத்தனை கண்களும் புதிர் போடும் புலவர் கனகராயரை மொய்த்தன.

புதிர் அவிழும்….

Related posts

தோற்றுவிட்டேன்

Thumi2021

குறுக்கெழுத்துப்போட்டி – 27

Thumi2021

ஈழச்சூழலியல் 18

Thumi2021

Leave a Comment