இதழ்-31

ராட்சசன் வேண்டாம் ரசிகன் வேண்டும்

சம்பந்தம் ஒரு  ஸ்டண்ட் மேன். சினிமாவில் சண்டைகளில் நடிப்பவன்.  நடிகர்களுக்கு டூப் போடுபவன். பலமானவன். ஆனால் ஒண்டிக்கட்டை. அனுமான் பக்தன் வேறு. காதல் – திருமணம் என்றாலே ஆகாது.

இப்படியான ஒருவனுக்கு காதல் மலர்ந்திருக்கிறது.

அவன் காதலி செல்லமாய் இப்படி விழிக்கிறாள்,

//கடோத்கஜா கடோத்கஜா//

ஏன் கடோத்கஜன் என்ற விழிப்பு? யார் இந்த கடோத்கஜன்?

பாண்டவர்கள் வனவாசத்தின் போது ஒரு காடு வழியே கடந்து செல்கிறார்கள். அந்த காட்டிலே இருந்த அரக்கன் “இடும்பன்” என்பவன் பாண்டவர்களை கொன்று உண்ண ஆசைப்படுகிறான். அதனால் தன் சகோதரி “இடும்பி” ஐ அனுப்பி அவர்களை கொன்று வரச் சொல்கிறான். கொல்ல வந்த அவளோ, பாண்டவர்களில் ஒருவனான பீமனை கண்டு விரும்புகிறாள். நீண்ட நேரம் இடும்பி திரும்பி வராததால் இடும்பன் தேடி வர, பீமனுக்கும் இடும்பனுக்கும் நடக்கும் சண்டையில் இடும்பன் கொல்லப்படுகிறான். பின்னர் இடும்பி பீமனைத் திருமணம் செய்கிறாள். இவர்களுக்கு பிறந்த மகன் தான் கடோத்கஜன்.

“அடி பலவான் பீமனின் மகன் அடா
அறம் தருகிற தருமரின் உறவடா”

கதாயுதம் போன்ற முடி இல்லாத மண்டையை உடையவன் என்று பொருள். பீமனின் பலமும் இடும்பியின்  மாயதந்திர வித்தைகளும் இணைந்த பராக்கிரமசாலி கடோத்கஜன்.

“கட கட கட கடோத்கஜன்
பர பர பர பராக்கிரமன்”

ஸ்டண்ட் மேன் சம்பந்தம் இங்கு காதலி கண்களுக்கு கலைகளை ரசிக்க தெரிந்த பலசாலி கடோத்கஜனாகிவிட்டான்.

//கடோத்கஜா கலாதரா//

ஜானகி ஒரு டாக்டர். சம்பந்தத்தை அவளுக்கு அறவே பிடிக்காது.  அவளுக்கும் காதல், திருமணம் என்பவற்றில் உடன்பாடு இல்லை. ஒரு ஆக்சிடென்டின் போது சம்பந்தத்துக்கு ஜானகி சத்திரசிகிச்சை செய்யவேண்டி இருக்கிறது. சத்திர சிகிச்சையின் போது தவறுதலாக அவளது கைக்கடிகாரத்தை சம்பந்தத்தின் வயிற்றில் வைத்து தைத்து விடுகிறாள்.

ஆப்ரேஷன் முடித்து வீடு வந்த சம்பந்ததுக்கு கடிகாரத்தின் சத்தம் ‘டிக் டிக்’ என்று கேட்டபடியிருக்கிறது.

//டிக் டிக் என்று சத்தம் உன்னாலே

என்னுள்ளே கேட்கின்றதே கண்ணே//

அது காதலின் சத்தம் என்று சம்பந்தம் நினைக்கிறான். உண்மையில் டிக் டிக் கடிகாரத்தின் முள் அசைவுச்சத்தம். இவளுக்கோ தன் தவறை நினைத்து ‘பக் பக்’ என்று இருக்கிறது.

// பக் பக் என்று அஞ்சி உன்னாலே

என் உள்ளம் வேகின்றதே கண்ணா//

இந்த கடிகாரம் சம்பந்தத்தின் வயிற்றினுள்ளே வைத்து தைத்த கதை வெளியே தெரிந்தால் இவளது வேலை காலி. அதனால் சம்பந்தத்தை காதலிப்பதாக பாசாங்கு காட்டி அவனை மயக்கி மீண்டும் சந்திரசிகிச்சை செய்து கடிகாரத்தை வெளியே எடுக்கலாம் என்று திட்டம் தீட்டுகிறாள்.

இவளது போலி காதலை நம்பி சம்பந்தம் இவளை காதலிக்க ஆரம்பித்து விடுகிறான். அவன் காதலில் தோய்ந்து வாட, இவள் அவனை காதல் மொழியில் மயக்குகிறாள்.

//தையல் போட்டு என்னை தைத்தாயே

தையல் இனி உன்னோடு தான் கண்ணே//

ஆபரேஷன் தையலால் தையலாளுடன் மலர்ந்த மையல் அல்லவா இது!

//கையை போட்டு என்னை கையாட கை

சேரு என்னோடு தான் கண்ணா//

மீண்டும் ஆப்ரேஷன் செய்து கைக்கடிகாரத்தை வெளியில் எடுக்க காதல் மொழியில் கை போட்டு கையாட அழைக்கிறாள் இவள். அவள் காதல் மொழியை உண்மை என்று நம்பிய இவன்,

//ஒரே நாளில் காதல் நோய் தான்

உன்னால் வந்ததே தோழி//

காதலி டாக்டர் என்பதால் காதல் “நோய்” என்பதை அழுத்தி சொல்கிறான். ஆனால், அவள் சிந்தனையோ இப்படி ஓடுகிறது,

‘ஒரே நாளில் என்னால் வர அது என்ன கொரோனாவா?’ என்று  நினைத்தபடியே, தன் தேவையும் நினைப்பும் சேர்ந்து பதில் சொல்கிறாள்,

//ஒரே ஊசி போட்டால் போதும்

உயிர் வாழுமே தோழனே தோழனே//

இவனை மயக்கமடைய செய்ய, ஒரு ஊசி போட்டால் போதும். பிறகு சந்திரசிகிச்சை செய்து விடுபட்ட கடிகாரத்தை எடுத்துவிடலாம். ஊசியில் என்ன மருந்து இருக்க வேண்டும் என்பதனையும் டாக்டர் மூளை சிந்தித்தது!

General Anaesthesia – Propofol. பால் வண்ண நிறம்.

“பால் வண்ணப்பறவை குளிப்பதற்காக பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்”

என்று காதல் மயக்கத்தில் புலம்புபவனை மயக்க, பால் வண்ண மருந்து ஏற்றுவது பற்றி யோசிக்கிறாள்.

ஒரே நாளில் பரவும் அளவிற்கு ‘கொரோனா’ போன்ற தீவிர நோய் என்றாலும் தடுப்பூசி ஏற்றிக்கொண்டால் தான் உயிர் வாழும். அதுவும் ஒன்று போதாது. குறைந்தது இரண்டு. மூன்றாவது நான்காவது கூட தேவைப்படலாம். அது கொரோனாவின் கொள்ளுப்பேத்தி , எள்ளுப்பேத்திகள் காட்டும் ஆட்டத்தில் தங்கியிருக்கிறது.

பைசர், அஸ்ராசெனிக்கா, மொடெர்னா, ஜோன்சன் அன்ட் ஜோன்சன், சினோபாம், சினோவக், ஸ்புட்னிக் இவற்றில் ஏதாவது ஒரு தடுப்பூசியை  பெற்றுக்கொள்ளுங்கள். கொரோனா தொற்று ஏற்பட்டாலும் தடுப்பூசிகள் உயிருக்கு பாதுகாப்பை வழங்கும்.

மருத்துவ மூளை எங்கெல்லாமோ பாய்ந்து கொண்டிருக்க, அதனை நிறுத்தி மீண்டும் அவனை மயக்கும் தந்திரத்தை சிந்தித்தாள்.

இவள் காதல் நாடகம் நடத்திக்கொண்டிருக்கும் ஒருநாள்,  சம்பந்தத்தின் தாத்தா வீட்டுக்கு சென்ற போது, அவர்கள் திருமண நிச்சயதார்த்தை ஏற்பாடு செய்து விடுகிறார்கள். அங்கே தான் அவனை மயக்க, இவ்வளவு ஏற்பாடும் நடந்து கொண்டிருக்கிறது.

//கடோத்கஜா கலாதரா

விவாகமே விடாதுடா//

திருமணமே வேண்டாமென்று இருந்த இருவருக்கான நிச்சய தாம்பூலம் மாற்றப்படுகிறது.

//இன்றோடு ஹனுமார் பக்தன்

பிரம்மச்சரியம் முடிகிறதே

அன்போடு கைத்தளம் பற்ற

கன்னிநிலா தான் வருகிறதே//

இன்னும் காதல் மொழி சேர்ந்து மாயவலையை  விரிக்கிறாள்.

//ஆயிரத்தில் ஒருவன் என்று

அழகன் என்று அறிஞன் என்று

ஆசை வைத்த இளமான்

நீயே கிடைத்தாயே//

அவளின் வெற்று வாய்ப்புகழ்ச்சியில் பூரித்து போன இவனோ இப்படியாக சொன்னான்,

//ஆன வரை விழியால் பேசு

மௌனம் என்னும் மொழியால் பேசு//

காதலர்களிடையே பேச்சுக்கும் கருத்து பரிமாற்றத்திற்கும் வார்த்தைகள் எப்பொழுதும் அவசியம் இல்லை. மௌன மொழியில் கண்களால் பேசுவது காதலுக்கு தனித்துவமானது.

“மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம்

நாணமே வண்ணமாய் பூசி கொண்டோம்

புன்னகை புத்தகம் வாசிக்கின்றோம்

என்னிலே உன்னையே சுவாசிக்கின்றோம்

இரு உள்ளம் பல வண்ணங்களை அள்ளும்

சில எண்ணங்களை சொல்லும்

துள்ளும் கண்ணம்மா”

அது தான் – அந்த தனித்துவம் தான் காதல்!

பெண்களுக்கு கண்களால் பேசும் திறமை இயல்பாகவே இருந்தாலும் ஆண்களுக்கு காதலால் தான் அது கிடைக்கிறது. காதல் இல்லாது பெண்ணின் கண்களை புரிந்து கொள்வதற்கு ஆண் பல பயிற்சிகள், சில பரீட்சைகள் தாண்டி பட்டங்கள் பெற வேண்டியிருக்கும்! அனேகருக்கோ,

“கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை

காத்திருந்தால் பெண் கனிவதில்லை”

அவளாக விரும்பாத வரை எந்த பெண்ணும் எப்பொழுதுமே கனிவதில்லை! இங்கும் இவள் விரும்புவது போல் பாசாங்கு காட்டுவதால் தான் இந்த காதல் நாடகம் – ஊடல் ஒத்திகை எல்லாம்!

//விழி மேய்ந்து ஓயும் போது

விரல் மேயுமே தோழி

கோடிப் பூவும் கூச்சம் கொண்டு

மடி சாயுமே

தோழியே தோழியே//

கண்கள் காதலால், காதலாள் உடலின் தெளிவுகளை சுழிவுகளை மறைவுகளை தீண்டிச்சென்ற பிறகு, விரல்களின் நரம்புகள் கிட்டார் மீட்ட ஆரம்பிக்கும். காதலின் சிலிர்ப்பு அது.

“தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்

ஒரு விரல் வந்து உன்னைத் தீண்டியதோ

உன் நரம்போடு வீணை மீட்டியதோ

உன் உயிர்க்குள்ளே காதல் அம்பைத் தொடுத்திட்டதோ”

பெண் உயிரினுன் இசை தந்திகளை மீட்டும் காதலன் விரல், அவள் எழுப்பும் ஸ்பரிச இசை  காதலினை மேலும் ஜீவிதமாக்கும். கண்ணால் மீட்டும் போதும் கைகளால் மீட்டும் பொழுதும் அவள் உயிர் நாண் வேறு வேறு ஸ்வரங்களில் அதிர்கிறது.

“விழியோடும் தீண்டல் உண்டு

விரலோடும் தீண்டல் உண்டு

இரண்டோடும் பேதம் உள்ளது

விழித்தீண்டல் உயிர் கிள்ளும்

விரல் தீண்டல் உள்ளம் கிள்ளும்”

இணையை மெய்யின் பாதியென இணையேற்பதற்கான அரங்கேற்றம் – ரொமான்ஸ். அதற்கான பொது அங்கீகாரம் திருமணம். அதற்கான முதல் ஒப்பந்தம் – நிச்சயதார்த்தம்.

//மாலையிட ஒரு நாள் பார்த்து

மணநாள் பார்த்து திருநாள் பார்த்து//

பின் தனக்கே சொந்தமான நிர்வாணத்தை காதலுடன் தன்னவரிடம் ஒப்படைப்பதில், காதல் இன்னும் இன்னும் வளர வேண்டும்.

//சேலை தொடும் மறு நாள்

வந்து மறுப்பேனா//

அவள் மறுத்தாலும் அதையும் மீறி ஆசைகள் அலை மோத,

//காளை நெஞ்சம் கேட்காதம்மா

கடிகாரம் தான் பார்க்காதம்மா

காற்று என்ன நேரம் பார்த்தா

நதியில் குளிக்கிறது//

நேரம் காலம் இல்லாது கொஞ்ச வரும் நாயகனை, பெண் பொய்க்கோபம் காட்டி விரட்டுவாள்.

“மத்யான நேரம் பாய் போட சொன்னா

மாட்டேன்னு சொல்லுவியோ

மாட்டேன்னு சொன்னா சும்மாவா விடுவேள்

மேட்னி show கூப்பிடுவேள் ஏன்னா”

ஒரு கடிகாரத்தை மாறி வைத்து தைத்து விட்டு, காதல் நடிப்பிலும் பின்னிக் கொண்டிருக்கிறாள் ஜானகி.

//பூங்கரத்து வளையாடாதா

வளையாடத்தான் விளையாடாதா//

காதலர்கள் கூடும் போது பூப்போன்ற கைகளிலிருக்கும் வளையல்கள் குலுங்க,

“வளைக்கையை பிடித்து வளைக்கையில் விழுந்தேன்

வலக்கரம் பிடித்து வலம் வர நினைத்தேன்”

அவன் இவளது வளையல்கள் அணிந்த கையை பிடித்த போது அவன் மனக்கடலில் விழுந்தவள், அவனது வலக்கையை பிடித்து திருமண நாளில் அக்னி குண்டம் சுற்ற ஆசை கொண்டவள்.

“அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல மெல்ல மெல்ல கரைஞ்சேன்”

என்று இன்னும் காதல் மயக்கத்தில் மூழ்கும் இவன் மறுபக்கம்,

“இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா

இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா

சுகம் வலக்கையை வளைக்கையில் உண்டானது

மெம்மேலும் கைவளை வளை என ஏங்காதோ”

அவளது வலது கையில் அணிந்த வளையல்களாய் மாறிய காதலன் கைகளை பற்றிக்கொண்டு, திருமண பந்தலில் இருக்கையில் வரும் சுகம் இன்னும் வேண்டும் வேண்டும் என்று  காதல் பதுமையாள் ஏங்க,

//நேற்று வரை அடைத்தே வைத்த

மடையை நீ தான் உடைத்தாய் இன்று

பாவி மனம் பாயை போட பாடாய் படுத்திறதே//

இவள் வார்த்தைகளில் மயங்கிய அவனோ, திருமணமே வேண்டாம் என்பதிலிருந்து, உன்னிடம் சரணடைவதே வாழ்க்கை லட்சியம் என்று ஏங்க ஆரம்பித்துவிட்டான் இந்த கடோத்கஜன்,

//கடோத்கஜன் கலாதரன்

கண்ணே உந்தன்

கையில் சரண்//

குருஷேத்ர போரின் இறுதியில் பாண்டவர் படை சார்பாக, கடோத்கஜன் களத்துக்கு வருகிறான். அவன் பராக்கிரம பலத்தால் கௌரவப்படை  கதிகலங்குகிறது. எந்த ஆயுதமும் அவனை எதுவும் செய்யவில்லை.

“திசை எங்கிலும் என் கொடி பறக்கணும்

புவனம் முழுதும் என் குரல் ஒலிக்கணும்

எதிரிகள் இரு பாதம் பணியனும்

சரணாகதி தரும் வரை நடுங்கனும்”

கலங்கிய துரியோதனன், கர்ணனிடம் சென்று இந்திராஸ்திரத்தை பயன்படுத்தி கடோத்கஜனை கொல்லுமாறு கேட்கிறான்.

கர்ணனோ, அது ‘அர்ச்சுனனை கொல்வதற்காக’ என்று மறுத்தாலும்  போர்க்களத்தில் கடோத்கஜனின் பாதிப்பால் இந்திராஸ்திரத்தை கடோத்கஜன் மேல் ஏவினான். கடோத்கஜன் இறந்து போகிறான்.

“பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி

இருக்கின்றது என்பது மெய் தானே”

அங்கே, இந்திராஸ்திரத்தை அழிப்பதற்கு கண்ணனின் சூழ்ச்சி கடோத்கஜன் பிறப்பு. இங்கோ, தனது மருத்துவத் தவறை சரி செய்வதற்கு ஜானகியின் சூழ்ச்சி  கடோத்கஜன் சம்பந்தத்தின் காதல். கடிகார ஆப்ரேஷனுடன் சம்பந்தத்தின் காதல் நரம்புகளும் காதல் குருதிக் குழாய்களும் அறுத்து எறியப்படும் என்று அறியாது, காதல் போதை தலைக்கேறி இருக்கிறான் சம்பந்தம்.

Related posts

குறுக்கெழுத்துப்போட்டி – 27

Thumi2021

சிங்ககிரித்தலைவன் – 29

Thumi2021

தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் கமலாம்பாள் சரித்திரத்தின் முக்கியத்துவம் – 05

Thumi2021

Leave a Comment