இதழ்-31

ஈழச்சூழலியல் 18

இரசாயனப் பசளை இறக்குமதித் தடையும்
இயற்கை உரப்பாவனையும்

எமது அடுத்த தலைமுறைக்கு இரசாயன கலப்படமற்ற உணவுகளை வழங்க வேண்டும் என்ற உறுதியான சிந்தனை நாட்டு மக்கள் அனைவருக்கும் உள்ளது. அதை மறுப்பதற்கில்லை. எனினும் எந்தவித தயார்ப்படுத்தல்களும் இல்லாத இந்த திடீர் அறிவிப்பு பலருக்கு திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக களை நாசினிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அடுத்த 15 நாட்களுக்கு மட்டுமே தம்மிடம் பொருட்கள் கைவசம் உள்ளதாகவும் வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

இரசாயன களை நாசினிகளுக்காக எமது நாடு வருடந்தோறும் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவளிக்கின்றது என்கிறார் ஜனாதிபதி. அது உண்மையும் கூட. ஆனால் இரசாயன உரங்களுக்கு மாற்றீடான இயற்கை உரங்கள் தயார் நிலையில் இல்லை என்பதையும் சிந்திக்க வேண்டும். மட்டுமன்றி எமது நாட்டில் காய்கறி, பழ உற்பத்திக்கு மட்டுமின்றி பெருந்தோட்ட பயிர்களான தேயிலை, இறப்பர், தென்னைக்கும் இரசாயன களை நாசினிகளே பாவிக்கப்படுகின்றன. இவற்றுக்கு மாற்றீடாக உடனடியாக வேறு எதையும் பயன்படுத்த முடியாத சவால்களே உள்ளன.

மிக முக்கியமாக எமது நாட்டில் பயன்படுத்தப்படும் கலப்பின விதைகள் இரசாயன உரங்களுக்கு ஈடு கொடுப்பதற்கேற்ப கண்டு பிடிக்கப்பட்டவையாகும். அடுத்த 3 வருடத்துக்குள் இரசாயன உர பயன்பாட்டை 30 வீதமாக குறைப்பதற்கும் அதற்குப்பதிலாக இயற்கை உரங்களை தயாரிக் கும் நிறுவனங்களுக்கு சலுகை களை வழங்குவதற்கும் ஆலோசித் திருப்பதாக விவசாய அமைச்சு கூறுகின்றது. இதன் காரணமாகவே சுமார் 18 ஆயிரம் தொன் இரசாயன உரவகைகளை ஏற்றி வந்த சீன கப்பல்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இயற்கை பசளைகளை கொண்டு எல்லா தாவர உணவு உற்பத்திகளையும் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஒரு திட்டத்தை ஆரம்பித்து பெறுபேற்றை அரசாங்கம் பெற்றிருக்க வேண்டும். அதன் மூலம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கலாம் என்பது பொதுவான அபிப்பிராயமாக உள்ளது. ஏனென்றால் இவ்வாறான திடீர் முடிவுகள் நாட்டில் மண் சார்ந்த உணவு உற்பத்தி பொருட்களுக்கான தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தக் கூடிய அபாயமும் உள்ளது.

தற்போதய வடபகுதி பயிர்ச்செய்கை இன்னும் அசேதன இரசாயனத்தை நம்பியதாகவே இருக்கின்றது. நம்நாட்டு விவசாயம் திசைமாறி அசேதன இரசாயனங்களின் பயன்பாட்டிற்குள் மூழ்கிவிட்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண குடாநாட்டு விவசாயப் பெருமக்களின் பயிர்ச் செய்கையில் அன்றாட பயன்பாட்டு பொருளாக விவசாயத்திற்கான முதலீடுகளில் அசேதன நச்சுப் பொருட்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இது பற்றிய கரிசனை பலரிடமும் பல மட்டங்களிலும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. அவசி யம் எதிர்கொள்ள வேண்டிய விடயமாகவும் அதற்கான தீர்வினை எட்டுவதற்கான வழிமுறைகளையும் நாமே கண்டுபிடிக்க வேண்டும். மாற்று வழிகள் பலவற்றை பரிந்துரைக்கலாம். உயிர்ப்பசளைகள், உயிர்க்கொல்லிகள் (பூச்சி மற்றும் பூஞ்சண கொல்லிகள், களை கொல்லிகள்) மற்றும் இரை கௌவிகள், ஒட்டுண்ணிகள் மற்றும் நுண்ணங்கிகள் என பலவகைகளுண்டு. இவற்றைப்பற்றி ஆய்வுகளும் நிறையவே செய்யப்பட் டிருந்தாலும் எமது பிரதேசத்திற்கு உகந்ததான அங்கிகளை இனங் கண்டு அவற்றை இனம்பெருக்கி விவசாய பெருமக்கள் இலகுவாகவும் மலிவாகவும் பெற ஆவன செய்தல் வேண்டும்.

விவசாயத்தில் அசேதன இரசாயன பசளைகளைப் போல உயிர்ப் பசளைகள் விரைந்து தொழிற்பட மாட்டாதவை. அதனால் பயிர்களில் உயிர்ப்பசளைகளின் தாக்கம் உடனடியாகத் தெரிவதில்லை. இது விவசாயப் பெருமக்களிடையே உயிர்ப்பசளைகளினை பயன்படு த்துவதில் தற்காலிக பின்னடைவை தோற்றுவிக்கும். ஆனால் அசேதன இரசாயன பசளைகளைப் போலன்றி உயிர்பசளைகளும் நுண்ணங்கிகளும் நின்று பெருகி மண்ணுக்கு வளஞ்சேர்ப்பனவாகும். காலப்போக்கில் உயிர்ப்பசளைகளினது தாக்கம் மண்ணிலும் பயிரிலும் உணரப்படும்.

உயிர்ப்பசளைகளை பயன்படுத்துவது விளைநிலத்திற்கும் பயிருக்கும் நல்லது. அத்துடன் அதனால் சூழல் வளப்படும். இயற்கையுடனான விவசாயத்திற்கான திறவுகோலாக அது அமையும். எமது சூழல் தொகுதி தனித்துவமானது அத்துடன் அந்நிய தேசத்திலிருந்து நுண்ணங்கிகளை வரவழைக்காமல் எமது பகுதியில் உள்ள வளமான அங்கிகளைப் பிரித்தெடுத்து அவற்றை இனங்கண்டு அவற்றினது பீடைகட்டுப்படுத்தும் ஆற்றல் அல்லது தாவரத்திற்கேற்ற பசளைப் பெறுமானத்தை ஈடுகட்டும் வழிவகைகளை அறிதல் வேண்டும். உயிர்ப்பசளைகள் தாவரத்திற்கு எதுவித தீங்கையும் ஏற்படுத்தாது. மேலும் இவ்வாறான அங்கிகள் இங்குள்ள சூழலில் அதிகமாக பெறக்கூடியதாக இருப்பதனால் இங்கும் அவை பல்வேறு தாக்கத்திற்கு உட்பட்டிருக்க வாய்ப்புண்டு. அத்துடன் உயிர்ப்பசளைகளை கழிவுப் பொருட்களிலிருந்து உற்பத்தி செய்தால் சாலையோரம் தேங்கிக்கிடக்கும் குப்பைகளுக்கு ‘குட்பை’ சொல்ல கிடைக்கும் வாய்ப்பின் மூலம் கழிவகற்றல் திட்டம் நிறைவுபெறும். வீட்டில் சேரும் தாவரக் கழிவுகளை முறையாக மீள்சுழற்சி செய்து அவற்றை இயற்கையுரமாக பயன்படுத்துவது விரிவாக்கப்படல் வேண்டும். நாம் இந்த இடர்காலத்தில் கற்றுக்கொண்டவை ஏராளம். அவற்றை அலசியாராய்ந்து இயற்கைவழி விவசாயத்திற்கு எம்மை நாம் மாற்றிக் கொள்ளாது விட்டால் இந்த அனுபவமும் வீணாகப் போய்விடும்.

இன்றைய காலகட்டத்தில் உயிர் பசளைகளை உற்பத்தி செய்வதற்கான ஆய்வுகூட வசதி பாரியளவில் தேவைப்படுகின்றது. இவ்வாறான உயிர்பசளைகளை உற்பத்தி செய்வதில் தொழில்நுட்ப நிறுவனங்கள் முன்வரவேண்டியது அவசியமாகும்.

இவ்வாறான உயிர்ப் பசளைகளை உற்பத்தி செய்வதிலும் அவற்றினது பயன்பாடு, பாதிப்பு இன்னும் அவற்றினால் சூழலில் ஏற்படுத்தப்படுகின்ற மாற்றங்கள் அனைத்துமே கண்காணிக்கப்படுவதுடன் ஆய்வுகள் பல மேற்கொள்ளப்பட்டு மேலும் அவற்றை சிறந்த முறையில் பயன்படுத்தும் வழிகளையும் நாம் கண்டுபிடிக்க வேண்டும். அனைத்திற்கும் மேலாக விவசாயப் பெருமக்களை இவ் உயிர்ப் பசளைகளை பயன்படுத்துவதற்கு ஊக்குவிக்க வேண்டும். விவசாயப் பெருமக்களிடையே மனமாற்றத்தை கொண்டு வருவதோடு அவர்களை ஊக்குவிப்பதற்கும் பலவழிகளிலும் நாம் முயற்சி செய்ய வேண்டும். விவசாயப் பெருமக்களை அசேதன இரசாயனப் பாவனையிலிருந்து விடுவித்து சேதன விவசாயத்தை செய்ய ஊக்குவிப்பதுடன் அவர்களுக்கான ஆலோசனைகளையும் வழங்க வேண்டும்.

இந்த மாற்றத்தை எமக்கான மாற்றமாக கொண்டு இயற்கைவழி விவசாயத்தை மேலும் முன்னெடுக்கலாம். உற்பத்தியாளர்கள் அனைவரையும் பாதுகாக்கின்ற அதேநேரத்தில் அவர்களின் உணவுற்பத்திக்கான வழிவகைகளையும் குறிப்பாக சந்தைப்படுத்தலையும் முறையாக ஏற்படுத்திக் கொடுத்தால் எமது விவசாயத்தைக் காப்பாற்றுகின்ற அதே நேரத்தில் எமது வளங்களையும் நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.

உணவுற்பத்தியின் போது நாம் பயன்படுத்தும் தற்போதய பயிரினங்களை ஒரு கணம் மீள் கணிப்பிற்குள்ளாக்க வேண்டியதன் அவசியம் எழுந்துள்ளது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பயிரிழப்பிற்கு காரணமாயிருக்கும் காரணிகளைக் கண்டறிந்து அவற்றிற்கு பரிந்து ரைகள் வழங்கப்பட்டாலன்றி விவசாயிகளினால் சிறப்பான விவசாயச் செய்கையை செய்ய முடியாதிருக்கின்றது. முன்னைய காலத்து பயிர்ச்செய்கை முறைகளிலிருந்து தேவையான மாற்றங்களை உள்வாங்கி தற்போதய பயிர்ச் செய்கையை சமகால பிரச்சனைகளுக்கு முகங் கொடுக்கக் கூடியதான வகையில் பயிர்ச் செய்கையில் புதிய சூழலுக்கிணைவான தொழில் நுட்பங்களை உள்வாங்கி தேவையான மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும். விவசாய செய்கையில் பிரச்சனைகளாக உள்ள பீடைகள் மற்றும் நோய்களின் பிரச்சனைகள் இவற்றினைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் பூஞ்சண நாசினிகள் உள்ளடங்கலாக பீடைநாசினிகள் மேலதிக பயன்பாடு அவற்றினாலான சூழலில் ஏற்படுத்தப்பட்ட தாக்கம் என்பன கவனத்திற்கொள்ளப்படல் வேண்டும். மேலும் பயிர்ச்செய்கைக்கு தேவையான உள்ளீடுகளான சிறந்த விதை, பசளை, பீடைக்கட்டுப்பாட்டு முறைகள், நீர் மற்றும் வளமான மண் என்பனவற்றை கிடைக்கச் செய்வதற்கான வழிவகைகளைப் பற்றியும் நாம் அதிக கவனஞ்செலுத்த வேண்டும்.

ஆராய்வோம்……

Related posts

சிங்ககிரித்தலைவன் – 29

Thumi2021

வாயைத் திறவடா!

Thumi2021

ராட்சசன் வேண்டாம் ரசிகன் வேண்டும்

Thumi2021

Leave a Comment