இதழ்-31

தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் கமலாம்பாள் சரித்திரத்தின் முக்கியத்துவம் – 05

கதைப்பின்னல்

நாவலில் பிரச்சாரத் தொனியின்றிக் கருத்துக்களை முன்வைப்பதை ராஜமய்யர் அறிந்திருக்கிறார். கல்யா ணியின் திருமணம், நடராஜனின் பிறப்பு, பேயாண்டித் தேவனின் திருட்டு, முத்துஸ்வாமி ஐயரின் குடும்பச்சிதைவு, சுப்பிரமணிய ஐயரின் இறப்பு எனக் கதையோட்டம் விறுவிறுப்படைகின்றது. இறுதியில் பிரிந்த குடும்பம் காசியில் ஒன்று சேர்வதும், தவறான வழியில் சென்றவர்கள் திருந்துவதும் காட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கதைப்பின்னல் இறுக்கமாகவும், யதார்த்தபூர்வமாகவும், தருக்க முறைப்படியும் அமைந்திருக்கின்றது.

யதார்த்த நெறி

கதையோட்டத்தின் படி ஆரம்ப த்தில் யதார்த்த பூர்வமான சமூக அமைப்பு முத்துஸ்வாமி ஐயரின் இல்லற வாழ்வினூடாகக் காட்சிப்படுத்தப்படுகின்றது. குறிப்பாக, அக்காலத்து நிலமானிய சமூக நடைமுறைகளையும், நிலமானிய சமூகத்தில் கூட்டுக்குடும்பங்கள் சிதைந்து போகின்ற நிலையையும் இந்நாவலில் பார்க்க முடியும். அதுமட்டுமன்றி அக்காலப் பெண்களின் மனப்போக்கு, அக்காலச் சமூகநிலை, குடும்பங்களின் பிரச்சினைகள், உறவுச் சிக்கல்கள், பிள்ளை வளர்ப்பு முதலான பல்வேறு விடயங்களை உணர்த்துவதற்கு யதார்த்த நெறி ராஜமய்யரால் கையாளப்பட்டுள்ளது. மேலும், யதார்த்த வாதத்தின் மையக்கூறாக உள்ளதும், அதன் அடித்தளமாக உள்ளதும் வகை மாதிரியான பாத்திரங்களே ஆகும். குறிப்பிட்ட சமூகத்தை பெருமளவிற்குப் பிரதிபலிக்கத்தக்க வகையில் பொதுப்பண்புகளுடன் காணப்படுவதே வகைமாதிரியான பாத்திரமாகும்.

அம்மையப்பிள்ளை ஆங்கில ஆட்சிச் சூழலில் செல்வாக்கு இழந்து போன தமிழாசிரியர்களின் வகைமாதிரியான பாத்திரம். அம்மையப்பிள்ளையின் தனித்துவம் அவர்காலத்துப் பொதுப்பண்புகளுடன் கலக்கும் போது அப்பாத்திரம் யதார்த்தமாக மாறுகிறது. கமலாம்பாள் சரித்திரத்தில் வரும் மாயாண்டித் தேவனையும், கல்கியின் கள்வனின் காதலியில் வருகின்ற கள்வனையும் ஒப்பிடும் போது ராஜமய்யர் யதார்த்த வாதி. ஆனால் கல்கி புனைவியல் வாதி. மாயாண்டித்தேவன் அக்காலத்து நிலப்பிரபுத்துவ சமூகத்தில் உள்ள வழிப்பறிக் கொள்ளைக்காரர்களின் வகைமாதிரியான பாத்திரமாக உள்ளான். ஒரு படைப்பாளி வெகு இயல்பாக சமூகமாறுதல்களையும், முரண்பாடுகளையும், சித்திரிப்பது சுபாவ யதார்த்த வாதமாகும். ராஜமய்யர், மாதவையா முதலான ஆரம்பகாலப் படைப்பாளிகளிடம் இத்தன்மையைக் காணக்கூடியதாக உள்ளது. இவர்கள் முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டுவதுடன் நின்று விடுகின்றனர். பாத்திரங்களின் இயக்கம் படைப்பாளிகள் வாழ்ந்த காலத்து சமூக இயக்கங்களின் பிரதிபலிப்பாகும்.

ராஜமய்யர் குறைந்த வயதில், உருவம் சிறப்பாக அமைய எழுதிய நாவல்

தன் பிரதாப முதலியார் சரித்திரத்தை வசன காவியம் என்று வேதநாயகம் பிள்ளை கூறினார். கமலாம்பாள் சரித்திரமும் ஒரு மகோன்னதமான வசனகாவியம் என்றுதான் சொல்ல வேண்டும். வேதநாயகம்பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திர நாவலின் கட்டுக்கோப்பு ஒருவிதத்திலும் அடங்கவில்லை. கமலாம்பாள் சரித்திரத்திலே நாவல் உருவம் அற்புதமாக அமைந்து விட்டது. இருபத்தாறே வருடங்கள் உயிர் வாழ்ந்த ராஜமய்யர் எழுதிய இந்த நாவல் இப்படி ஒரு நாவலாக அமைந்து விட்டதைத் தமிழர்களின் அதிஸ்டம் என்றே கூறலாம். நாவல் இலக்கியத்தின் வரலாற்று வளத்திற்கு ராஜமய்யர் அத்திவாரம் போட்டுத்தந்துவிட்டார். என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

பிராமணப் பேச்சுத்தமிழ்

ஆரம்பகால நாவல்களில் பிரதேச, சமூகப்பேச்சு வழக்கினைக் கொண்டுவந்து பேசுவது சற்று கடினமான விடயமாகும். ஆனாலும் ராஜமய்யர் கமலாம்பாள் சரித்தி ரத்தில் மதுரைப் பிராமணப் பேச்சு வழக்கினைக் கையாண்டுள்ளார். ‘எங்களாத்தில் தீர்த்தம் கொடுக்கிற வழக்கமில்லை” என்பதன் மூலமும் வடமொழிச் சொல்லாட்சி பரவலாகக் கையாளப்பட்ட தன்மையினையும் அவதானிக்கலாம். உதாரணமாக, ‘புஸ்தகம் ஹஸ்த பூஸ்ணம்” ,
‘ஸரபோஜீ” முதலான சொற்களைக் கூறலாம்.

ராஜமய்யரின் கவிதை உள்ளம்

ராஜமய்யர் வாழ்வியலின் கூறுகளைச் சற்று உயர்த்தி, தம் சிந்தனையின் கவர்ச்சியை ஏற்றியே அவர் கூறுகின்றார். முதல் பகுதியில் கமலாம்பாள்- முத்துஸ்வாமி ஐயர் தம்பதியின் உரையாடலில் இருந்து, வம்பர் மகாசபை, வித்துவான் அம்மையப்பிள்ளை, பேயாண்டித்தேவன், கடலைப் பார்த்து கவிதையாய் நெகிழ்தல் என்று கதையினை, தம் பார்வை எல்லைக்குள்ளே இயக்கிச் செல்கின்றார். அதனாலேயே பாத்திரங்கள் அழியாத்தன்மையும் வாசகனிடம் ஆசிரியரின் எழுத்துப் பற்றிய பிரமிப்பும் ஏற்படுகின்றன. பின் பகுதியில் வரும் அடுக்கடுக்கான திருப்பங்களும் அவரது எழுத்தின் கவர்ச்சியை நம்பியே வரையப்பட்டவையாக அறியலாம்.

ஆய்வு தொடரும்…

Related posts

ஈழச்சூழலியல் 18

Thumi2021

வாயைத் திறவடா!

Thumi2021

சித்திராங்கதா – 31

Thumi2021

Leave a Comment