அப்படியென்றால்…
காதலையும் கற்கத் தொடங்கிவிட்டானா?
வினாவே விடையாக தொடர்கிறது…,
மூத்தவனின் திருமணம் மூலம் இந்த சமூகம் நிறைய கற்றுத் தந்தது. பட்டம் பதவி படிப்பு பணம் தராத கௌரவத்தையும் மரியாதையையும் சாதி தருமென்று நன்றாகப் புரிந்து கொண்டோம். இழந்தவற்றை மீளவும் பெற வேண்டுமென்றால் நாங்களும் சமூகத்தோடு சமூகமாக கலக்க வேண்டும். அதற்கு என் இளைய மகன் திருமணம்தான் ஒரே வழி!
பண்டைய காலங்களில் இராச்சிய உறவுகளை பலப்படுத்த அரசர்கள் திருமண உறவுகளை பயன்படுத்தியதைப்போல நானும் செய்ய வேண்டும். ஆனால் மூத்தவன் பாதையிலேயே பயணிக்கும் இளையவனும் காதல் கொண்டுவிட்டால்….? அந்த பெண்ணும் தாழ் சாதியாகி விட்டால்…? மீட்சியே இல்லை! அடுத்த பிள்ளையையாவது கட்டி வைக்கலாமென்றால் எனக்கு வேறு பிள்ளையும் இல்லை! ஆகவே, எனக்கு வேறு வழியே இல்லை. என் இறுதி துருப்புச்சீட்டு இளையவன் தான்!

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சாதியால் நாங்கள் படுகிற துன்பத்தையும் அதிலிருந்து மீள சாதிக்குள்ளேயே திருமணம் செய்ய வேண்டிய கட்டாயத்தையும் அவனுக்கு அடிக்கடி சொல்லி வந்தேன். அண்ணன் போல நீ போகக் கூடாதென்று சத்திய வாக்கையும் அவனிடமிருந்து வாங்கினேன். அவனது படிப்பு முடியும் காலத்தை அவனை விட நானே அதிகம் எதிர்பார்த்தேன். படிப்பு முடிந்தவுடன் அவனுக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும். நாங்கள் இழந்த கௌரவத்தையும் மரியாதையையும் மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அவனுக்கு இறுதி வருட பரீட்சை நடந்து கொண்டிருந்தது. என் மனைவி வழி சொந்தத்தில் நல்ல வரன் வந்திருந்தது. சாதகப் பொருத்தம் சாதகமாகவே இருந்ததால் அவனிடம் சம்மதம் கேட்டேன். அழுது விட்டான். கண்ணீரோடு சேர்ந்தே அவன் காதலையும் கொட்டித்தீர்த்தான். அதிர்ந்து விட்டேன். எது நடக்கக்கூடாதென்று நினைத்தேனோ அது நடந்துவிட்டது. அண்ணனைப் போலவே இவனும் பல்கலைக் கழகத்தில் ஒருத்தியை காதலித்து விட்டாள். அதுவும் வழமைபோல தாழ் சாதியில்….!
இந்த முறை நான் இளகிப் போகவோ, இரங்கிப் போகவோ சந்தர்ப்பமே இல்லை. உறுதியாக இருந்தேன். வந்த வரனையே பேசி முடிக்க முழுவதும் முயன்றேன். பிள்ளை தோளுக்கு மேல் வளர்ந்தால் அடிக்கக்கூடாது என்பார்கள். இவன் தலைக்கு மேலேயே வளர்ந்துவிட்டான். அடிக்கலாம். தப்பில்லை. அடித்தேன். தீரும் வரை திட்டினேன். அழுதான். விம்மி விம்மி அழுதான். சில நாட்களாக மரண வீடு போல அழுகுரல்கள் அடிக்கடி கேட்க எல்லோர் முகங்களும் இறுக்கமாக இருந்தன. சிரிப்பைத் தொலைத்து சில நாட்களாகி விட்டன.
என்ன நடந்தும் அவன் காதலைக் கைவிடத் தயாரில்லை. தன் காதலை நியாயப்படுத்தவும் புனிதப்படுத்தவும் என்னென்னவோ சொன்னான். எதையும் நான் காதில் வாங்கவே தயாரில்லை. அண்ணன் வழியில் பாரதியை துணைக்கு அழைத்தான். எதிர்பார்த்தது தான்.
“நாட்டுக்காக வாழ்ந்த பாரதியைத் தான் உன் தகப்பனுக்கு பிடிக்கும். அவன் செத்த போது எவனும் எட்டிப்பார்க்கவில்லை. குடும்பத் தலைவனாக பாரதி தோற்றவன். தோற்றவனை எனக்கு பிடிக்காது. உன் தகப்பனுக்கு முன் வாய் பொத்தி கை கட்டி நின்றவன் எல்லாம் இப்ப எனக்கு வாய் காட்டும் நிலைக்கு உன் அண்ணன் என்னை ஆக்கி விட்டான். அண்ணனால் நான் இழந்தவற்றை நீ தான் எனக்கு பெற்றுத் தர வேண்டும். அப்படி இல்லை என்றால் எனக்கு கொஞ்சம் விசத்தை வாங்கித்தா! குடித்துவிட்டு செத்து விடுகிறேன். மானம் கெட்டு வாழ்வதை விட செத்துப் போவது மேல்!” அவனை என் வழிக்கு கொண்டு வர என்னென்னவெல்லாம் செய்ய முடியுமோ, சொல்ல முடியுமோ அவ்வளவும் செய்தேன். இதற்கு முதல் அவனை நான் இப்படி அடித்தது இல்லை. இதற்கு முதல் அவனை நான் இப்படி அடித்தது இல்லை. அது அவனுக்கும் புரிந்திருக்க வேண்டும். அமைதியாய் நின்றான். ஆனால் அழுதான்.
இது தான் சந்தர்ப்பம் என்று சத்திய வாக்கு ஒன்றை வாங்கினேன். காதலைக் கைவிடும் படியும், என் கனவை நினைவாக்குமாறும் சத்தியத்தை செய்ய வற்புறுத்தினேன். செய்தான். தசரதன், அரிச்சந்திரன் என சத்தியத்தால் சங்கடத்துக்கு உள்ளானோர் பலர். சூழ்ச்சி தான் செய்கிறேன். அப்பா என்கிற பதவியை ,உரிமையை, கடமையை துஷ்பிரயோகம் செய்தே இவற்றை சாதித்தேன். வேறு வழி எனக்கு தெரியவில்லை.
அன்றிலிருந்து அவன் அவளுடன் கதைக்கவில்லை. ஆனால் அவன் அவனாக இல்லை. காலம் மாற்றும் என்கிற நம்பிக்கையில் கல்யாணப் பேச்சுக்களை முன்னகர்த்தினேன். சொந்தத்திற்குள் நல்ல வரன் ஒன்று அமைந்தது. அவனிடம் சம்மதம் கேட்டேன். பதிலின்றி நின்றான். காலம் மாற்றும் என்ற நம்பிக்கையில் நிச்சயதார்த்தத்திற்கு நாள் பார்க்கப்பட்டது. என்னை அவமானப்படுத்திய சொந்தங்கள் வீடுகளுக்கு எல்லாம் பல நாட்களின் பின் நிச்சயதார்த்தத்திற்கு அழைக்கவென நேரில் சென்றேன். சில வீடுகளில் மீண்டும் அவமானம்தான் பரிசானது. சந்தனத்தை தடவினாலும் பூசிய சேற்றின் நாற்றத்தை மறைக்க முடியாதென்று வெளிப்படையாகவே கூறினார்கள்.
வெறுத்துப் போனேன். இந்த சமுதாயம் என்றுமே மாறாது. என்னை ஓரங்கட்ட முடிவெடுத்துவிட்டவர்கள் கையில் எடுத்த ஆயுதம் சாதி! இனி எங்கும் அவர்களிடம் எனக்கு அங்கீகாரம் கிடைக்காது. ஒரு நிமிடம்! எனக்கு அங்கீகாரம் தர யார் அவர்கள்? அவர்களுக்காக என் கொள்கைகளை இழந்து, பாரதி மீதான பற்றை இழந்து, மகனிடம் பாசத்தை இழந்தென்று நான் என்னையே முற்று முழுதாக இழந்துவிட்டேன். என்ன பயன்? ஏற்றார்களா என்னை?
உடனிருக்காத உறவுகளுக்காக கொண்ட கொள்கையில் உறுதியாக இராமல் சாதிக்கு தலை சாய்த்த போது மனிதனாக தோற்றுவிட்டேன்.
இன்னும் சில வருடங்களே எனக்கான வாழ்க்கை! ஆனால் என் மகனுக்கு நீண்ட வாழ்க்கை காத்திருக்கிறது. என் சுயநலத்திற்காக தன் காதலையே தியாகம் செய்து நான் காட்டியவளை கல்யாணம் பண்ண சம்மதித்த அவன் மகனாக வென்று விட்டான். ஆனால் பாசத்தை வைத்து மிரட்டிய நான் தந்தையாக தோற்றல்லவா விட்டேன்.
தந்தையாகவாவது நான் வெல்லாவிட்டாலும் காதலனாக என் மகன் வெல்ல வேண்டும். அவனை நம்பி அவனிடம் மனதைப் பறிகொடுத்தவளை அவன் ஏமாற்றியதாக இருக்கக் கூடாது. அவனைப் பெற்ற தந்தையாகவே இருந்தாலும் அவனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஓரளவுக்கு மேல் நான் தலையிடக் கூடாது.
முடிவெடுத்து விட்டேன்…
நான் தோற்றது தோற்றதாகவே இருக்கட்டும். என் மகன் வெல்ல வேண்டும்.
அது தான் காதலின் வெற்றி! பாரதியின் வெற்றி!
இப்படிக்கு,
அப்பா