இதழ்-31

பிளவுபட்ட உதடு மற்றும் அண்ணம் Cleft Lip and palate

பிளவுபட்ட உதட்டை சீரமைத்தல்

பிளவுபட்ட உதட்டை சத்திர சிகிச்சை மூலமே, சரி செய்ய முடியும்.
பிறந்து மூன்று மாதங்களில்  இச்சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும். உதட்டில் உள்ள தோல், தசை, மென்படலம் என்பன சரி செய்யப்படும். ( படம் 1)

பிளவுபட்ட அண்ணத்தினை சீரமைத்தல்

பிளவுபட்ட அண்ணத்தின் சத்திர சிகிச்சையானது 10-12 மாதத்தில் செய்யப்படும்.
பேசத்தொடங்கும் முன்பு இச்சிகிச்சை செய்யப்பட்டால் பேசும் ஆற்றல் அதிகமாகும் என்று ஆராய்ச்சிகளின் மூலம் உறுதியாகின்றது.(படம் 2)

மொழிவிருத்தியும், பேச்சு விருத்தியும். (படம் 3)

பேச்சை சீர் செய்தல் [Speech Theraphy]

வாயின் மேற்பகுதியில் அண்ணம் உள்ளது. அதன் முன்பகுதியில் வன்மையான [Hard palate] அசைவில்லாத அண்ணமும் பின்பக்கம் அசையக்கூடிய மென்மையான அண்ணமும்[soft palate] உள்ளது. அண்ணம் உள் நாக்கில் [Uvula] முடிவடைகின்றது.

  1. அண்ணத்தின் சரியான செயற்பாட்டாலும் தொண்டைத்தசையின் அசைவினாலும் வாயானது மூக்கு  குழியில் இருந்து சரியாக பிரிக்கப்பட்டு வேறாக்கப்பட வேண்டும்.
  2. உதடுகள் சரியான முறையில் மூடப்பட வேண்டும்.
  3. கதைக்கும் பொழுது நாக்கானது அண்ணத்தின் வேறு பகுதிகளையும் பற்களையும் தொடுவதற்கு சுதந்திரமாக அசையக்கூடியவாறு  இருக்க வேண்டும்.

மேற்கூறிய காரணங்கள் போதாமையினால் பிளவு பட்ட உதடு மற்றும் அண்ணத்துடன் பிறந்த குழந்தைகளினால் சரியாக பேச முடிவதில்லை. எனினும் வைத்திய நிபுணர் குழுவில் உள்ள பேச்சு மற்றும் மொழி விருத்தியாளரின் [Speech and language therapist] உதவியுடன் பேசும் ஆற்றல் அதிகரிக்கப்படும்.

பேச்சு சிகிச்சைக்கு உங்கள் குழந்தையினை தயார் செய்தல்

● அவதானிக்கவும்,கவனிக்கவும், கூர்ந்து கவனிக்கவும் உங்கள் குழந்தையின் திறமையினை விருத்தி செய்தல் வேண்டும்.

● இப்படியான பயிற்சியினை விளையாட்டாகவும் நடிப்பாகவும் செய்தால் பயனுள்ளதாக அமையும்

● விளையாட்டாக ‘ப’, ‘க’, ‘ர’ போன்ற மென்மையான சத்தங்களை நீங்கள் பேசும் பொழுது உங்கள் குழந்தை உங்கள் முன்பு இருந்து உங்கள் வாயினை கவனிக்க கூடிய ஒரு அமைதியான இடத்தினை தேர்வு செய்யவும்.

●ஓடும் தண்ணீர், வாகனத்தின் சத்தம், மிருகங்களின் சத்தம் போன்ற அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சத்தங்களை உங்கள் குழந்தையுடன் சேர்ந்து கேட்டு அவற்றின் சத்தங்களை போல திரும்ப செய்து காட்டி குழந்தையினையும் செய்ய வைத்தல் வேண்டும்.

பிள்ளையுடன் பேசுதல்

●எப்பொழுதும் பிள்ளையுடன் பேசுங்கள். உங்கள் குரலை மாற்றுங்கள் முக பாவனையை மாற்றி உங்கள் குரலின் தொனியை மாற்றி ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். அதனால் உச்சரிப்பையும் பேச்சையும் அனுபவம் மூலம் பெற்றுக்கொள்ளும். விரைவாக பேச வேண்டாம்.

●மாறுபட்ட பேச்சு மூலம் குழந்தைக்கு சம்பாசனை வடிவில் பேச வாய்ப்புக் கொடுக்க வேண்டும். பேச்சு விருத்திக்கு இது ஒரு முக்கியமான படியாகும்.

● எப்பொழுதும் பேசும் போது தெளிவாகவும் மாறுபட்ட தொனியிலும் பேசுவதன் மூலம் இலகுவாக கிரகிக்கக் கூடியதாக இருக்கும்.

ஊதுதல்-Blowing

சூடான உணவினை ஊதி ஆறவைத்தல், சவர்க்கார நுரையினை ஊதுதல், விசிலை ஊதுதல் போன்ற செயலினால் உதட்டு அசைவுகள் ஏற்பட்டு வாயினுள்ளே காற்று திறம்பட உண்டாகும்.

கேட்டல்-Listening

நடுச்செவியில் சுரப்புகள் தேங்கி விடுவத்தினால் பிளவுபட்ட உதடு மற்றும் உதட்டுடன் பிறந்த குழந்தைகளுக்கு கேட்பதில் பிரச்சினை ஏற்படும். இது சாதாரண பிள்ளைகளிற்கு கூட ஏற்படலாம். வைத்திய நிபுணர் குழுவில் உள்ள காது, மூக்கு, தொண்டை நிபுணர் [ENT surgeon] காது தொடர்பான சிகிச்சைகளுக்கு பொறுப்பாக இருப்பார்.

பெரும்பாலான கேட்டல் பிரச்சினைகள் வாழ்கையின் முதல் சில வருடங்களுக்கு மட்டுமே நீடிக்கும். செவிப்புலன் விருத்தியில் உள்ள குறைப்பாட்டால் கேட்டலில் உள்ள பிரச்சினைகள் சில வேளைகளில் நிரந்தரமாகவும் இருக்கலாம். பிள்ளைகளின் கவனத்தை ஈர்க்கும் சில விளைட்டுக்களை கேட்பதற்கும் சொற்களை பேசுவதற்கும் உறுதுணையாக அமையும்.

பல் சுகாதாரம் -Oral hygiene

பிள்ளைகளின் பற்களை நன்கு பராமரிக்க வேண்டியது மிக முக்கியம்.
பற்சொத்தையில் [Dental Caries] இருந்தும் பல் ஈறு நோயில் [Periodontisis] இருந்தும் பாதுகாத்தல் வேண்டும்.

சிறந்த வாய் ஆரோக்கியத்திற்கு,

  1. சரியான முறையில் தினமும் காலையிலும் இரவிலும் பல் துலக்க வேண்டும்.
  2. இனிப்பு பண்டங்கள் பானங்கள் என்பன கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
  3. உங்கள் பல் வைத்தியரிடம் இருந்து தேவையான அறிவுரைகளையும்  சிகிச்சைகளையும் கிரமமாக பெற்றுக்கொள்ள வேண்டும்.

எலும்பு மாற்று சிகிச்சை [Alveolar Bone grafting]

பிளவுகளினால் எலும்பு பாதிகப்பட்டு இருந்தால் பற்களுக்கு இடையில் காணப்படும் இடைவெளியை எலும்பு மாற்று சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும். பற்களின் விருத்திக்கும் மூக்கின் சரியான வடிவத்திற்கும் இது இன்றியமையாதது.

பல் ஒழுங்காக்கல் சிகிச்சையின் பின்பு இச்சிகிச்சை செய்யப்படும்.

இதற்கு தேவையான எலும்பு குழந்தையின் இடுப்பில் [iliac crest] இருந்து எடுக்கப்படும்.

பல் ஒழுங்காக்கல் சிகிச்சை-Orthodontic treatment

பிளவு பட்ட அண்ணத்தினால் எலும்புகள் பாதிக்கப்படும் பொழுது முன்பற்கள் பிழையான முறையில் முளைக்கும். சில சமயங்களில் சிறிய பற்கள் அல்லது பற்கள் முளைக்காமலே போகலாம். அச்சிகிச்சை பல் சீராக்கும் வைத்தியரினால் 11 -12 வயதிலே தொடங்கப்பட்டு செய்யப்படும்.

பல் சீராக்கும் சிகிச்சை எலும்பு மாற்று சிகிச்சைக்கு சில காலம் முன்பு செய்யப்படும்.

Related posts

நானும் ஒரு சாக்கடை தான்!…..

Thumi2021

தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் கமலாம்பாள் சரித்திரத்தின் முக்கியத்துவம் – 05

Thumi2021

உள்ளம் பெருங் கோவில் ஊனுடம்பு ஆலயம்

Thumi2021

Leave a Comment