இறப்பு, பிறப்பு போன்ற கிருமித்தொற்று அதிகம் ஏற்படக்கூடிய நிகழ்வுகளை தீட்டுக்குரிய நிகழ்வுகளாக உருமாற்றி ஆலயங்களுக்குள் பிரவேசிப்பதை மட்டுமன்றி வீடுகளுக்குள் பிரவேசிப்பதையே தடுத்திருந்தது ஆன்மீகம்! ஆன்மீக கருமங்களை உற்றுநோக்கினால் கிருமித்தொற்று நீக்கிகளுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டகருப்பதை காணலாம். மஞ்சள், வேப்பிலை என்பன பரவலாக பல இடங்களில் பயன்படுத்தப்படுவதை காணலாம்.
அந்த வகையில் இப்போது மனித குல வரலாற்றிலேயே என்றுமில்லாத ஒரு பேரழிவு கிருமித்தொற்று வழியாக வந்து முழு உலகையுமே உலுக்கிக் கொண்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தின் முக்கிய ஆலயங்கள் பலவற்றின் வருடாந்த மகோற்சவமும் தற்போது ஆரம்பித்துள்ள இந்த நேரத்தில் இலங்கையில் கொரோனா கிருமித் தொற்றால் ஏற்படுகின்ற இறப்பு வீதமும் தொற்று பரவல் வீதமும் அதிகரித்த வண்ணமே உள்ளது.
ஆலயம் செல்வது சாலவும் நன்று என்று தானே ஆன்மீகம் சொல்லித் தந்திருக்கிறது. புண்ணிய காலமாக கருதப்படும் இந்த மகோற்சவ காலங்களில் ஆலயம் செல்லாமல் இருப்பது முறையாகுமா? தெய்வத்தின் கோபத்திற்கு உள்ளாகமாட்டோமா? என்கிற மேலோட்டமான கேள்விகளால் ஆலயம் செல்வோர் எண்ணிக்கை அதிகமாகலாம். இதனால் கொரோனா அபாயமும் அதிகமாகலாம்.
ஆலய வழிபாட்டை சாதாரண காலங்களில் தான் ஆன்மீகம் வலியுறுத்துகிறது. இதுபோன்ற இடர்காலங்களில் அல்ல. “உள்ளம் பெரும் கோவில் ஊன் உடம்பு ஆலயம்” என்று சொல்லப்பட்டதை மறந்துவிடக் கூடாது. எங்கும் இருப்பான் இறைவன் என்றால் இந்த இடர்காலத்தில் நாம் வீட்டிலிருந்தே மனதார இறைவழிபாட்டை மேற்கொள்ளலாம் அல்லவா! மேலும் அறிவியலின் கிருமி ஆன்மீகத்தில் தீட்டு என்று சொல்லப்படுவதால் அந்த தீட்டுக்காலத்தில் ஆலய வழிபாட்டை தவிர்க்குமாறு தானே ஆன்மீகம் வழிமொழிகிறது.
எனவே, புறக்கண்ணால் இதுவரை கண்டுகளித்த இறை கோலத்தை இனி அகக்கண்ணால் பிரார்த்திப்போம். வருகின்ற வருடம் யாவும் சரியாகி எல்லோரும் ஆலய வழிபாட்டில் ஒருசேர கலந்து கொள்ளும் ஒரு சூழலை உருவாக்கித் தருமாறு உளமாற வேண்டுதல் செய்வோம்.