இதழ்-31

தாயுமானவரின் சமய சமரசம்

சமரச ஞானப் பாதுகாவலர்களில் ஒருவராகவும் சமரச உணர்வை வளர்த்த ஞானத் தாய்மார்களில் ஒருவராகவும் அறியப்படும் தாயுமான சுவாமிகள் 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்தவராக இனங்காணப்படும் இலக்கிய கர்த்தா ஆவார்.

திருமறைக்காட்டில் சைவ வேளாளர் குலத்தில் கேடிலியப்பபிள்ளையின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். வடமொழி, தென்மொழி இரண்டிலுமே பாண்டித்தியம் மிகுந்த இவர் மௌனகுரு சுவாமிகளிடம் அறிவுரை பெற்றார். தந்தையார் இறந்தவுடன் அரசவேலையில் அமர்ந்த இவர்; பின்னர் யோகஞானங்களில் சிறக்கத் துறவு பூண்டார். சைவ சித்தாந்தம், அத்வைதம் ஆகிய இரு நிலைக்கும் ஒருவகை சமரசம் கண்டவர். ‘உபநிடதக் கருத்துக்களையும் மற்ற ஞானநூல்களின் உட்பொருளையும் மிகத்தெளிவாகத் தமிழில் பாடியவர்” என பேரா.மு.வரதராசன் இவரைப் பாராட்டுகின்றார்.

‘தமிழ்மொழியின் உபநிடதம்” என சிறப்பிக்கப்பெறும் இவரது பாடல்களினூடே புலப்படும் சமய சமரச சிந்தனைகளை,

  1. அனைத்து சமயங்களையும் ஒன்றாக நோக்கியவர்
  2. கடவுள் ஒருவரே என்ற எண்ணமுடையவர்
  3. மதப்பாகுபாட்டால்
    கடவுளை அடைய முடியாது என்ற கருத்துடையவர்
  4. மதங்களுக்கிடையேயான முரண்பாடுகளைக் கண்டித்தவர்
  5. சில சமயங்களின் சிறப்புக்களை உரைத்தவர்
  6. நாத்திகத்தை மறுத்தவர்

என்கின்ற அடிப்படையில் இங்கு நோக்கலாம்.

இத்தகைய சமரச எண்ணம் இவருக்குள் ஊற்றெடுப்பதற்கான பின்னணி என்னும்போது, சங்கரர் காலம் முதல் வேதாந்தமும் சித்தாந்தமும் தமிழ்நாட்டில் பரவி வந்திருக்கின்றன. சித்தாந்தம் சைவசித்தாந்தமாகவும் வைணவ சித்தாந்தமாகவும் பரவி வந்திருக்கிறது. வேதாந்திகள் இந்த இரண்டு சித்தாந்தங்களையும் சமரசப்படுத்த முயன்றுள்ளனர். இவ்வகைச் சமரச முயற்சியில் சித்தர்கள் பெரும்பாலும் ஈடுபட்டிருந்ததாகத் தாயுமானவர் கூறுகிறார். எனவே சித்தர்களின் இச்சமரசநெறி மௌனகுரு சுவாமிகள் வாயிலாக இவருக்கு வாய்த்ததாக நாம் கருதலாம்.

இவ்விதமாக ‘சமரச ஞான அருள் விளக்கு” என சிறப்பிக்கப்படும் இவர் சமயங்களின் பொதுநோக்கையும் சமய வாதத்தால் வரும் இடர்பாடுகளையும் பல இடங்களில் வெளிப்படுத்துவதோடு அறுவகைச் சமயத்தின் இயல்பையும் சைவத்தின் சிறப்பினையும் சித்தாந்தத்தின் பெருமையினையும் விளக்குகின்றார். சமயங்கள் எல்லாம் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகை உறுதிப்பொருளையும் மக்கள் அடைவதற்குரிய பல வழிகளாக அமைந்தவை. ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு நிலையில் உள்ளவர்களுக்குப் பயன்படும் வண்ணம் இறைவன் அவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப உண்மையை உணர்த்துவார். எனினும் தத்தம் சமயநலனை மாத்திரம் நன்கு உணர்ந்தவர்கள் அவ்வச்சமயத்தை நிலைநாட்டுவதற்குரிய செயற்பா டுகளை மேற்கொள்வதற்கு இறைவனே காரணம் என்கிறார்.
இதனை,

”அமையாக் காதலிற் சமயகோடி
அறம் பொருள் ஆதி திறம்படு நிலையிற்…”

எனத் தொடரும் அகவலினால் உணரலாம். இவரது பாடற்திரட்டின் முதற்பாடலே சமரச ஞானத்தை எடுத்துக்காட்டுகின்றது. அதாவது,

”அங்கிங்கு எனாதபடி
ஏங்கும் பிரகாசமாய்
ஆனந்த பூர்த்தியாகி
அருளொடு நிறைந்தது எது?”

என்பதில் இவரது சமரச வாதத்தைக் கண்டுணரலாம். எங்கும் உள்ள பரம்பொருளை அஞ்சலி செய்ய வேற்றுமை கருதாது அனைவரையும் கூவியழைத்து

”கருதி அஞ்சலி செய்குவாம்”

எனத்தொடரும் திருப்பாடற் திரட்டு இத்தகைய சமரசக் கருத்துக்கள் நிறைந்த ஒரு பொக்கிசமாகக் காணப்படுகின்றது.

தொடரும்….

Related posts

தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் கமலாம்பாள் சரித்திரத்தின் முக்கியத்துவம் – 05

Thumi2021

தோற்றுவிட்டேன்

Thumi2021

பிளவுபட்ட உதடு மற்றும் அண்ணம் Cleft Lip and palate

Thumi2021

Leave a Comment