இதழ்-31

நானும் ஒரு சாக்கடை தான்!…..

வானளவு சந்தோசமும்
முடிவில்லா அரவணைப்புக்களும்
அருகிருக்க
கவலைகளை மட்டும்
சேர்த்துவைக்கும் என் மனமும்
ஒரு சாக்கடை தான்!

தேற்றுகின்ற நண்பர்களும்
தோள்கொடுக்கும் தோழர்களும்
அருகிருக்க
துரோகங்களை மட்டும்
எண்ணிக்கொண்டிருக்கும்
என் நினைவுகளும்
ஒரு சாக்கடை தான்!

நல்வழிப்படுத்தும் நற்சிந்தனைகளும்
நற்பழக்கம் புகட்டும் பெரியார்களும்
அருகிருக்க
கெட்டவைகளை மட்டும்
சிந்திக்கின்ற என் சிந்தனைகளும்
ஒரு சாக்கடை தான்!

தட்டிக்கொடுக்க ஆசான்களும்
உயர்த்தி அழகுபார்க்க
பெற்றோர்களும் அருகிருக்க தோல்விகள் கண்டு
துவண்டு போகும் என் பயங்களும்
ஒரு சாக்கடை தான்!

கட்டி அணைத்திட குடும்பமும்
கண்ணீர் துடைத்திட உறவுகளும்
அருகிருக்க
இல்லாத அன்பிற்காக
ஏங்கும் என் மனஏக்கமும்
ஒரு சாக்கடை தான்!

மூவேளை உண்ணும் உணவும்
தங்கியிருக்க உறைவிடமும்
இருந்தும்
அடுத்தவன் நிலைகண்டு
பொறாமை கொள்ளும் என்மனமும்
ஒரு சாக்கடை தான்!

தளராத தன்னம்பிக்கையும்
இடைவிடாத விடாமுயற்சியும்
என்னுள் இருக்க
உழைக்க மறுக்கின்ற
என் சோம்பேறித்தனமும்
ஒரு சாக்கடை தான்!

வலிகள் தாங்கும் பொறுமையும்
எதையும் தாங்கும் இதயமும்
என்னோடு இருக்க….
முடியாது எனும்
போர்வையில் வரும்
கோபமும் அழுகையும்
ஒரு சாக்கடை தான்!

இறுதியில்….

இருப்பது அனைத்தையும்
மறந்துவிட்டு
இல்லாத ஒன்றுக்காக அலையும்
மனித மனங்களில்
என் மனமும்
விதிவிலக்கா என்ன?
நானும் ஒரு சாக்கடை தான்!

வரிகள்
லிமோ

Related posts

குறுக்கெழுத்துப்போட்டி – 27

Thumi2021

தாயுமானவரின் சமய சமரசம்

Thumi2021

ஈழச்சூழலியல் 18

Thumi2021

Leave a Comment