விக்ரமாதித்தன் சரியான பதிலினால் அவனது மௌனம் கலையவே வேதாளம் தான் புகுந்திருந்த உடலுடன் மீண்டும் பறந்து போய் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி, அவன் அதைத் தூக்கிக்கொண்டு செல்லும் போது, அதனுள்ளிருந்த வேதாளம், “மன்னா! எந்த இலட்சியத்தை நாடி, இவ்வாறு நடு இரவில் மயானத்தில் என்னை சுமந்து கொண்டு திரிகிறாய் என்பது எனக்குத் தெரியவில்லை.
சில சமயங்களில் அறிவில் சிறந்தவர்கள் என்று நாம் கருதும் சிலரது ஆலோசனைகள் நம்மைத் தவறான பாதையில் அழைத்துச் செல்லக் கூடும்! அவ்வாறு அறிவிற்சிறந்தவர் என்று தான் கருதிய மந்திரியின் சொல் கேட்டு, தவறிழைத்த மன்னன் ஒருவனது கதையை உனக்குக் கூறகிறேன்!” என்று சொல்லிவிட்டு, தன் கதையைத் தொடங்கியது.
மகிபாலன் என்ற மன்னன் தனது முதல் மந்திரியான தர்மசீலரின் ஆலோசனைப்படி ஆட்சி செலுத்தி வந்தான். ஒரு சமயம் அவனுடைய சேனாதிபதி திடீரென இறந்து போக புதிய சேனாதிபதியை நியமிக்கும் பொறுப்பை மகிபாலன் தர்மசீலரிடம் ஒப்படைத்தான்.
உடனே தர்மசீலரும் நாடெங்கிலும் உள்ள பல வீர இளைஞர்களைத் தலைநகரத்திற்கு வந்து வாட்போர், வில் வித்தை, மல்யுத்தம், படைகளை இயக்கும் ஆற்றல், யுத்தத் தந்திரங்கள் ஆகியவற்றில் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த அழைத்தார். அந்த அறிவிப்பின்படி ஏராளமான வீரர்கள் தலைநகரில் கூடினர். ஒவ்வொரு நாளும் பலருடைய திறமைகளையும் உன்னிப்பாக கவனித்த தர்மசீலர் இறுதியில் ரூபசேனன், பராக்கிரமன் ஆகிய இருவரைத் தேர்வு செய்தார். இருவருமே அனைத்து கலைகளிலும் சமமாக இருந்தனர்.
அதனால் இருவரில் ஒருவரை மட்டும் தேர்ந்து எடுப்பதில் தர்மசீலருக்கு சிரமம் ஏற்பட்டது. அவர்களை நேரிலே அழைத்த மந்திரி, “நீங்கள் இருவரும் அனைத்து கலைகளிலும் சரிசமமாக இருக்கிறீர்கள். சோதிக்கப்பட வேண்டிய சில குணங்கள் இன்னும் சில உள்ளன. அவற்றை சோதிக்க, நான் உங்களிடம் சபையில் எல்லோர் முன்னிலையிலும் மூன்று கேள்விகள் கேட்பேன். அவற்றிற்கு நீங்கள் அளிக்கும் பதில்களைப் பொறுத்து உங்களில் ஒருவரைத் தேர்வு செய்வேன். சம்மதமா?” என்று கேட்டார். இருவரும் அதற்கு சம்மதித்தனர். அதன்படி, மறுநாள் இருவரும் சபைக்கு வந்தனர். அத்துடன் நிறுத்திய வேதாளம்.
விக்ரமாதித்தனே! நான் மந்திரியின் நிலையிலிருந்திருந்தால் அவர்களின் அறிவு மற்றும் விவேகத்திறனின் அடிப்படையில் சிறந்த சேனாதிபதியை தெரிவு செய்திருப்பேன் என கூறி புதிரொன்றை போட்டது.
1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9 = 45
இங்கே காட்டப்பட்டுள்ள இலக்க தொடரின் கூட்டுத்தொகை 45 ஆக காணப்படுகிறது. கூட்டல் குறியீடு ஒன்றினை பெருக்கல் குறியீடாக மாற்றி அடைப்புக்குறிக்குள் ஒரு தொகுப்பைச் சேர்ப்பதன் மூலம் இந்த இலக்கத் தொடரின் கூட்டுத்தொகையை 100 ஆக மாற்றலாம். குறுகிய நேரத்தில் இதை தீர்ப்பவரே அறிவு மற்றும் விவேகத்தில் சிறந்தவராக கருதப்பபடுவார். அவருக்கே நான் சேனாதிபதி பதவி அளித்திருப்பேன். விக்ரமாதித்தனே நீர் கூட விவேகத்தில் சிறந்தவராயிற்றே இதற்கான பதிலை கண்டுபிடியும் பார்க்கலாம். நீர் மௌனமாக இருந்தால் உம் தலை வெடித்து சுக்குநூறாகும் என்று முடித்தது வேதாளம்.
துமி அன்பர்களே!
வழமை போல் நீங்களும் விக்ரமாதித்தனுக்கு உதவிடுங்கள்.