இதழ்-32

ஈழச்சூழலியல் 19

நீர் மாசடைதல் – 01

நாம் முன்னைய தொடர்களில் ஆராய்ந்ததைப்போன்று மண்ணியல் சார் முக்கியத்துவங்களும், மண்ணியல் சார்ந்து விவசாய இடர்பாடுகளும் சவால்களும் ஈழச்சூழலியலோடு தொடர்புற்ற விதங்களை ஆராய்ந்தோம்.

நிச்சயமாக இடர்பாடுகள் சவால்கள் என்பவற்றை தாண்டி சாதகமான அனுகூலமிக்க வாய்ப்புக்களும் இல்லாமல் இல்லை. அத்தைகைய வாய்ப்புகளை சூழல்நேயத்தோடு அணுகுவதில்தான் நிலைபேறான சமூகமாக எமது வெற்றியும் சார்ந்திருக்கின்றது. கடந்த ஒன்றரை வருடகாலத்திற்கும் அதிகளவான பகுதியை ஆக்கிரமித்து நிற்கும் கொரோணா பெருந்தொற்று இயற்கையின் பெரும் சீற்றம் எனக்கூறப்பபடுகிறது. கடந்த நூற்றாண்டின் மிக வெப்பநிலை அதிகரித்த ஆண்டாக 2019 பதியப்பட்டிருந்ததிலிருந்து, கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீனாவின் ஆண்டு மழைவீழ்ச்சி ஒரு தினத்தில் பதிவாகியமை, யாழ் குடாநாட்டிலிருந்து ஏறத்தாள 600முஅ தூரத்தில் பதிவான நிலநடுக்கம் என பல வகையான விதத்தில் இயற்கை அன்னை எம்மை சபித்துக்கொண்டிருக்கிறாள்.

யாழின் சில வரட்சிக்கிராமங்களில் மயிர்கொட்டிகளின் பெருக்கம் கிராமங்களையே இடம்பெயரசெய்யும் அபாயம் காணப்படுவதாக சொல்லப்படுகின்றது. இத்தகைய இயற்கையின் அசாதரணப்போக்கை நாம் தடுக்க வேண்டுமானால் இயற்கையை நேசிக்கவும் ஆராதிக்கவும் ஆரம்பித்தே ஆக வேண்டியது காலக்கட்டாயமாகும்.

அந்த வகையிலே ஈழச்சூழலியல் எனும் பெரும் ஆய்பரப்பில் மண்ணியலின் தொடர்ச்சியாக நாம் ஆராய விளைகின்ற விடயம் நீர், வளி மாசாக்கம் ஆகும். நீரானது அதன் பௌதீக, இரசாயன உயிரியல் அம்சங்களில் மாற்றமடைகின்றபோது நீர் மாசடைதல் எனப்படுகின்றது. அதாவது ஏரிகள் ஆறுகள், கடல்கள், நிலத்தடி நீர் முதலிய நீர் நிலைகளில் காணப்படும் நீர் மனித நடவடிக்கைகளால் அதன் தூய்மையை இழந்து குறிப்பிட்ட சூழல்தொகுதியின் பயன்பாட்டிற்கு உதவாதமுறையில் மாற்றமடைகின்ற தன்மையினை நீர் மாசடைதல் எனக் குறிப்பிடலாம்.

இயற்கை நிகழ்வுகளான எரிமலை வெடிப்பு, அல்காப்பெருக்கம், புயல், நிலநடுக்கம், வரட்சி போன்றவற்றாலும் நீரின் தரத்திலும் அதன் சூழலியல் நிலைமையிலும் மாற்றங்களை உண்டு பண்ணுகின்றன. இருந்த போதிலும் மிக அதிகளவில் மனித செயற்பாடுகளினால் அந்நீர் தூய்மை கெட்டு மனித பயன்பாட்டிற்கு உதவாமலும், உயிரினங்களின் வாழ்வுக்கு உதவாமலும் போகும் நிலை நீர் மாசடைதலினால் ஏற்படுகின்றது.

நீர் மாசடைதலை ஏற்படுத்தும் மாசுக்களின் மூலத்தைப் பொறுத்து இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

முதலாவது ஓரிட மூல மாசடைதல். அதாவது ஒற்றை இட மூலத்திலிருந்து மாசு நீரில் கலப்பதினால் உருவாகும் மாசடைதல்களை உள்ளடக்குகின்றது.

இரண்டாவது பரந்த மூல மாசடைதல். அதாவது இது ஒரு பரந்த இடப்பரப்பிலிருந்து சிறிது சிறிதாக சேகரிக்கப்படும் மாசுக்களால் உருவாகின்றது.

விவசாய நடவடிக்கைகளினால் பல்வேறு விதத்தில் நீர் மாசாக்கம் அடைகின்றது. விவசாய நிலங்களில் கிருமி நாசினிகள், பீடை நாசினிகள், மற்றும் இரசாயன உரங்கள் என்பவற்றின் பயன்பாடு அதிகமாகக் காணப்படுகின்றது. இவ்வாறு பயன் படுத்தப்பட்ட நிலத்தினூடாக நீரானது வெள்ள காலங்களில் பாய்ந்து செல்லும்போதோ அல்லது நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்கூடாக ஆறுகளில் இந்த நீர் கலக்கின்றபோது அத்தகைய மாசுக்களை கழுவிச் சேர்த்த வண்ணமே நகர்கின்றது. மேலும் இரசாயன கிருமிநாசினி, பீடை நாசினி என்பவற்றின் கொள்கலன்கள் அருகிலுள்ள நீர் நிலைகளில் விடப்படுகின்றபோதும் நீர் மாசடைவதற்கு வழிவகுக்கின்றது. வளர்முக நாடுகளைப் பொறுத்தவரை விவசாய நடவடிக்கைகளில் அதிக ளவில் ஈடுபடுவதனால் இத்தகைய மாசாக்கம் இடம்பெறுகின்றது.

கைத்தொழில் நடவடிக்கைகள்
இன்று உலகின் அதிக வருமானத்தை ஈட்டிக்கொடுக்கின்ற தொழிலாகவும், அதிக தொழில் வாய்ப்பை உருவாக்கின்ற ஒரு துறையாகவும் கைத்தொழில்த்துறை காணப்படுகின்றது. கைத்தொழில் துறையில் பல்வேறு விதத்தில் வெளியேறும் கழிவுகள் நீர்நிலை களில் சேர்க்கப்படுவதனால் நீர் நிலைகள் மாசடைகின்றது. குறிப்பாக இரசாயனப் பொருட்கள் தயாரித்தல், இலத்திரனியல் கழிவுகள், உணவு பதனிடல் கழிவுகள், மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்களைக் குளிர வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு பின்னர் நீர்நிலைகளில் விடப்படும் சூடானநீர் போன்றவற்றின் காரணமாக நீர்நிலைகள் மாசடைகின்றன.

ஆராய்வோம்..

Related posts

சித்திராங்கதா – 32

Thumi2021

தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் கமலாம்பாள் சரித்திரத்தின் முக்கியத்துவம் – 06

Thumi2021

நத்தை மனிதர்கள் எச்சரிக்கை!

Thumi2021

Leave a Comment