இதழ்-32

சாபமா என் சபதம்?

தித்திப்பான கப்பச்சினோ எவ்வாறு நுரைகளுக்குள் மறைக்கப்பட்டு இருக்கிறதோ அது போலத்தான் இந்த பூமியில் வாழும் அனைவரது வாழ்வும். பல உண்மைகள் பலருக்குள் உறங்கிக்கொண்டு தான் இருக்கின்றன. உலகமே ஒரு நாடக மேடை என்று சேக்ஸ்பியர் சொன்னது முற்றிலும் உண்மை.

கண்ணுக்கு தெரியாத கிருமிக்காக இன்று எல்லோரும் கண்ணுக்கு தெரிந்த முகமூடியை அணிந்து கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த கிருமியிலும் கொடிய பல காரணங்களுக்காக கண்ணுக்கு தெரியாத முகமூடியை எல்லோருமே அணியத் தொடங்கி பல யுகங்கள் ஆகின்றன. ஏதேதோ காரணங்களுக்காக அந்த முகமூடிகளை கழற்ற முடியவில்லை. சில வேளைகளில் அந்த முகமூடிகளை மாற்ற வேண்டியிருக்கும். ஆனால் யாராலும் அவற்றை நிரந்தரமாக கழற்றி வைக்க முடியாது.

உங்களுக்கு முன்னால் ஆத்திரத்தில் சிவந்து சினந்து கொண்டிருக்கும் ஒருவன் உண்மையில் கோவப்படவே இல்லை என்றால் நம்புவீர்களா? விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டு இருப்பவன் உள்ளுக்குள் விம்மி விம்மி அழுதுகொண்டு இருக்கிறான் என்றால் ஏற்பீர்களா? எல்லோருக்கும் அறிவுரை சொல்பவர்கள் வாழ்க்கை ஏற்கனவே தகர்க்கப்பட்டிருக்கும். ஏன் இந்த நிலை?

நடிக்க வேண்டி இருக்கிறது. அதனால்த்தான் இந்த நிலை. சில நேரங்களில் பலமானவனாக, சில நேரங்களில் பலவீனமான பயந்தாங் கொள்ளியாக, சில நேரங்களில் எதற்கும் கோபப்படும் கோபக்காரனாக, சில நேரங்களில் எதற்குமே எதிர்வினை காட்டாத சாந்த சொரூபியாக, எல்லாம் தெரிந்த மேதாவியாக, எதுவுமே புரியாத முட்டாளாக, அன்பு நிறைந்த மனிதனாக, இரக்கமே அற்ற மிருகமாக என்று நேரத்திற்கு நேரம் பல்வேறு பாத்திரங்களை ஏற்க வேண்டியிருக்கிறது.

அன்றும் அப்படி ஒரு பாத்திரத்தை நான் ஏற்றிருக்க வேண்டும் என்கிறார்கள். குரு வம்சத்தின் குலமகளாக பெண்களுக்கு என்று விதிக்கப்பட்டவற்றை மதித்து நடப்பவளாக நான் நடந்திருக்க வேண்டுமாம். யுகங்கள் கடந்த போதும் என் மீதான பழிச்சொற்கள் தீர்ந்த பாடில்லை.

சொந்தமாகி விட்டார்கள் என்பதற்காக அவர்கள் சொல்வதையெல்லாம் நான் கேட்க வேண்டுமா? குரு வம்சம் என்னை குலமகளாக பார்த்ததா?

துச்சாதனனுக்கு நான் அண்ணி முறையாவேன்! ரோசத்தில் என் கேசத்தை பிடித்து இழுத்து வந்தானே? வந்ததும் தான் வந்தான், மாபெரும் சபை தனில் என்னை மானபங்கப்படுத்த முனைந்தானே! அவன்தான் அரைமதி மடையன்! ஏதோ கேட்டதை செய்துவிட்டான் என்றாலும் நிறைமதி கொண்டவர் களாக உலகம் போற்றும் உத்தமர்கள் என்று சொல்லப்படும் பலரும் அன்று அங்கே ஊமையாகத் தானே இருந்தார்கள்?

குரு வம்சத்திற்காக தன் சொந்த வாழ்வையே தியாகம் செய்த பிதாமகர் பீஷ்மர் குரு வம்சத்தின் குல மகளுக்கு நடக்கும் அநீதி கண்டு அமைதியாய் இருந்தது எந்த வகையில் நியாயம்?

அஸ்தினாபுரத்தின் அரசன் என்பவன் அந்த தேசத்தில் வாழும் அத்தனை பேருக்கும் தந்தை போன்றவன். எல்லோருக்குமாக சிந்திக்க வேண்டிய பொறுப்பிலுள்ளவன் புத்திர பாசத்தால் புத்தி கெட்டுப் போனானே! எனக்கு நடந்த அநீதிகளை அவன் பார்க்கவில்லைத்தான்! என் கதறல்களை கேட்கவுமாவில்லை? விழி தெரியாதவனுக்கு நல்வழியுமா தெரியாது?

குருவம்சத்திற்கே குல குருவான வரும் இருந்த சபையில் தான் இந்த சதி வேலை நடந்தது. அஸ்வத்தாமனுக்காக அமைதியாக இருந்தாராம் துரோணர். ஒரு பெண்ணின் மானம் என்பது புத்திர பாசத்தை விட மேலானதென தெரியாத ஒரு குருவை வைத்திருக்கும் குருவம்சம் குலநாசமாகாவிட்டால்த் தான் ஆச்சரியம்.

கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாது வாரி வாரி வழங்கிவிட்டால் போதுமா? அது மட்டுமா தர்மம்? கண்ணெதிரே நடக்கும் அநீதி கண்டு கல்லாய் இருந்தானே கர்ணன்! அவனுக்கு மட்டும் ஆடைக்கும் மேலாக கவச குண்டலங்கள்! ஆனால் என் ஆடையை ஒருவன் அபகரிக்கிறான். அவன் அமைதியாய் இருக்கிறான். நீ செய்த தர்மங்கள் விழலுக்கு இறைத்த நீர் தானே கர்ணா!

இவர்கள் மட்டும்தானா? என்னவர்கள் உட்பட இன்னும் நிறையப்பேரிடம் நிறைய ஆதங்கங்கள் எனக்கு உள்ளன. அவற்றோடு அடுத்த இதழில் சந்திக்கின்றேன்.

இப்படிக்கு,
திரௌபதி

Related posts

தாய்ப்பால் – ஒரு அறிமுகம்

Thumi2021

அழகான ராட்சசியே!

Thumi2021

T-20 உலகக்கோப்பை 2021 அணிகளின் அலசல்

Thumi2021

Leave a Comment